Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'யாரை ஏமாற்ற சசிகலா இப்படிச் செய்கிறார்?' - அறிக்கையை விமர்சிக்கும் அதிமுக

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (13:43 IST)
`தொண்டர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியையும் என் மீது விழுந்ததாகத்தான் பார்க்கிறேன்' என அறிக்கை ஒன்றில் .தி.மு. முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்படும் நேரத்தில், இந்த அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மறைந்தார். அவரது நினைவுநாளை துக்கநாளாக அ.தி.மு.கவினர் அனுசரித்து வருகின்றனர்.

இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, `அம்மா உணவகம், அம்மா மருந்தகம் ஆகிய திட்டங்களை நிறுத்துவோரின் செயல்களை தடுத்து நிறுத்துவோம்' எனக் கூறி அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை

அதேநேரம், ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையும் தொண்டர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கான பணிகளை முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பதவிக்கு பன்னீர்செல்வமும் எடப்பாடியும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், வேறு சில அ.தி.மு.க நிர்வாகிகள் மனுத்தாக்கல் செய்ய வந்தது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு ஒன்றையும் அளித்தார். அந்த மனுவில், `கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், சமூக விரோதிகள் சிலர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட உள்ளதாக கேள்விப்படுகிறோம், எனவே கட்சி அலுவலகத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை ஓட்டேரியை சேர்ந்த பிரசாத் சிங் என்பவர் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய வந்திருந்தார். இதனையடுத்து அவர் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரசாத் சிங் அளித்த புகாரின்பேரில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல், மற்றொரு நிர்வாகியும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. `ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் வாழ்த்து தெரிவிக்க வந்த என்னை தாக்கிவிட்டனர்' எனவும் அந்த நபர் பேட்டியும் அளித்தார்.

வரும் டிசம்பர் 7ஆம் தேதி அ.தி.மு.கவில் உள்கட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவங்கள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வி.கே.சசிகலா, `தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும் என் மீது விழுந்த அடியாகவும்தான் பார்க்கிறேன். ஒரு தலைமையால் மட்டுமே அந்த வலியை உணர முடியும். தொண்டர்கள் ஆணிவேராக இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைக்கும். நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் நடந்தால் இனிவரும் நாள்களில் நமது எதிரிகளை வெல்ல முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், `` ஏழை எளிய மக்களுக்கான இயக்கமாகவும் நாட்டில் உள்ள பிற கட்சிகள் எல்லாம் பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நமது இயக்கத்தின் இன்றைய நிலையை நிகழ்வுகள் அனைத்தும் ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. எந்தவொரு இயக்கத்துக்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள்தான் தேவையே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.

அ.தி.மு.க தொண்டரான ராஜேஷ், தலைமைக் கழகத்துக்குள்ளேயே தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் கட்சிக் காத்த இயக்கத்தை சீரழித்துவிடாதீர்கள். இனியும் இதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது' எனவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலா அறிக்கைக்கு அதிமுக தரும் பதில் என்ன?

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

`` அந்த அறிக்கையை சசிகலா யாருக்காக வெளியிட்டார்? அவருக்கும் இந்தக் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவருக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றுக்கு அவர்தான் பதில் கொடுக்க வேண்டும். அவருக்கு சம்பந்தம் இல்லாத இரண்டு குழுக்களில் எதாவது ஒன்று நடந்ததால் இவருக்கு என்ன பிரச்னை? சமாதானமாகச் செல்லுங்கள் என அறிக்கை கொடுப்பதற்கு அவர் என்ன முதலமைச்சரா அல்லது டி.ஜி.பியா? இவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளட்டும்" என்கிறார்.

``ஆனால், தொடர்ச்சியாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டே லெட்டர் பேடை பயன்படுத்தி வருகிறாரே?'' என்றோம். `` தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு என நான்கு இடத்திலும் சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது இன்னமும் அவர் பேசிக் கொண்டிருந்தால் எப்படி சரியாகும்? இந்த அறிக்கைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா இருந்த வரையில் சசிகலாவை தாண்டி யாராவது சந்திக்க முடிந்ததா? இன்றைக்கு ஒவ்வொரு நிர்வாகியையும் அழைத்து, `நல்லா இருக்கீங்களா?' எனக் கேட்கிறார். யாரை ஏமாற்றுவதற்காக சசிகலா இப்படிச் செய்கிறார்? அவர் வெளியிட்ட அறிக்கையே அபத்தமாக உள்ளது" என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மெஜாரிட்டியை தாண்டி பாஜக அபார வெற்றி.. இந்தியா கூட்டணி படுதோல்வி..!

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments