Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாலிபன்களுக்கு மத்தியில் குண்டுவைத்த கொடூர இயக்கம் எது? மாணவிகளைக் குறிவைப்பது ஏன்?

தாலிபன்களுக்கு மத்தியில் குண்டுவைத்த கொடூர இயக்கம் எது? மாணவிகளைக் குறிவைப்பது ஏன்?
, வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:10 IST)
பள்ளிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் என பெண்களைக் குறிவைத்து மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தும் இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே.

இப்போது காபூல் விமான நிலையத்தில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் இந்த இயக்கம் மத்திய கிழக்கில் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானிய கிளை.
 
இதன் மிகச் சரியான பெயர் கோரேசன் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் (Islamic State Khorasan Province) என்பதாகும்.
 
ஆப்கானிஸ்தானில் இருநது இயங்கும் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கம் இது என அறியப்படுகிறது.
 
ஈராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளில் ஐஎஸ் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாக அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டது.
 
இது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிய ஜிஹாதிகளிடமிருந்து தனது இயக்கத்துக்கு ஆட்களைச் சேர்க்கிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் தாலிபன் இயக்கத்தில் இருந்து பிரிந்து வருவோரை அதிகமாகச் சேர்த்துக் கொள்கிறது.
 
இந்த இயக்கம் எவ்வளவு கொடூரமானது?
 
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பெண்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதுதான் ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் முக்கியமான வேலை.
 
பள்ளிகளில் பயிலும் மாணவிகள் இவர்களுக்கு அதிகமாக இலக்காகிறார்கள். மருத்துவமனைகளுக்குள் புகுந்து இவர்கள் தாக்குதல் நடத்துவார்கள். பிரசவ வார்டுகளைக் கூட இவர்கள் விட்டுவிடுவதில்லை. கர்ப்பிணிகளையும் செவிலியர்களையும் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் இருக்கின்றன.
 
இவர்கள் தாலிபன்களைப் போல ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயே நடவடிக்கைகளை சுருக்கிக் கொள்ள விரும்பியதில்லை. உலகளாவிய ஐ.எஸ். பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக மேற்கு நாடுகளைக் குறிவைத்து எங்கெல்லாம் தாக்குதல் நடத்த முடியுமோ அங்கெல்லாம் தாக்குவது இவர்களது நோக்கம்.
 
இவர்கள் எங்கெல்லாம் பரவியிருக்கிறார்கள்?
ஐஎஸ்ஐஎஸ்- கே பயங்கரவாத இயக்கத்தின் முதன்மையான தளம் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்ஹரில் அமைந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆட்களையும் போதை மருந்துகளையும் கடத்தும் வழிக்கு அருகே இது இருக்கிறது.
 
தீவிரமாக இயங்கிய காலகட்டத்தில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேரை தன்னுடைய அமைப்பில் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே. இயக்கம் வைத்திருந்தது. அமெரிக்கா மற்றும் ஆப்கானிய பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டதால், இந்த எண்ணிக்கை வெகுவாகச் சுருங்கிவிட்டது.
 
ஐஎஸ்.ஐ.எஸ்.-கேவுக்கும் - தாலிபனுக்கும் என்ன தொடர்பு?
ஒரு வகையில் இந்த இரு இயக்கங்களுக்கும் இடையே தொடர்பு உண்டு. ஹக்கானி நெட்வொர்க் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைப்பின் வாயிலாக தாலிபன்களும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே இயக்கமும் தொடர்பு கொண்டிருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
 
காபூலில் இப்போது பாதுகாப்புப் பொறுப்பில் உள்ளவர்தான் கலீல் ஹக்கானி. அவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
ஆசியா பசிபிக் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் சஜ்ஜன் கோஹல் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாத வலையமைப்புகளை ஆய்வு செய்து வருகிறார்.
 
"2019 மற்றும் 2021 க்கு இடையில் ஐஎஸ்ஐஎஸ்-கே, தாலிபன்களின் ஹக்கானி நெட்வொர்க் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பிற பயங்கரவாத குழுக்கள் ஆகியவை ஒருங்கிணைந்து பல தாக்குதல்களை நடத்தின" என்கிறார் சஜ்ஜன்.
 
ஆகஸ்ட் 15 அன்று காபூலை தாலிபன்கள் கைப்பற்றியபோது, ​​ஐஎஸ் மற்றும் அல்-காய்தா பயங்கரவாதிகள் ஏராளமானோர் புல்-இ-சார்கி சிறையில் விடுவித்தார்கள். இவர்கள் அனைவரும் இப்போது காபூலிலும் ஆப்கானிஸ்தானில் பிற பகுதிகளிலும சுதந்திரமாகத் திரிகிறார்கள்.
 
ஆனால் எல்லா வகையிலும் இந்த இரு இயக்கங்களுக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது என்று கூறிவிட முடியாது. ஆடம்பர ஹோட்டல்களில் மேற்கு நாடுகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஜிகாத்தையும், போர்க்களத்தையும் கைவிட்டுவிட்டதாக தாலிபன்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்.- கே இயக்கம் குற்றம்சாட்டியிருக்கிறது.
 
இந்த இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இப்போது தாலிபன் தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். இது மேற்கத்திய நாடுகளுக்கும் தாலிபன்களுக்கும் பொதுவான ஒரு கவலையாகும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,484க்கு விற்பனை