Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் - சீன வெளியுறவு அமைச்சர்

Advertiesment
இலங்கைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் - சீன வெளியுறவு அமைச்சர்
, திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (14:50 IST)
இன்று (08.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இலங்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதி அளித்ததாக இலங்கையில் வெளியாகும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்பகமான நண்பராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. சீன அரசவை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கம்போடியாவில் சந்தித்தார்.இதன்போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

இதன்போது, சீன அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் மூலம் தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக சீன அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் புதிய அரசாங்கம், நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, ஒரே சீனா கொள்கையில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் மற்றும் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலையும் எதிர்க்கிறது என்றும் குறிப்பிட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களிடம் இந்தியாவில் புதிய திரிபு கண்டுபிடிப்பு

இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட முதல் 2 நபா்களுடைய மாதிரிகளின் ஆய்வில் அவா்களுக்கு ஏ2 வகை வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
webdunia

இது ஐரோப்பிய நாடுகளில் தற்போது பரவி வரும் பி1 வகையிலிருந்து வேறுபட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைத் தொடா்ந்து, உலகை அச்சுறுத்தும் நோயாக குரங்கம்மை உருவெடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 9 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், நாட்டில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாவது நபா்களின் மாதிரிகள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்பிய பின்னர், பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்கள் ஆவர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய வைராலஜி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பிரக்யா யாதவ் கூறியதாவது:

35 மற்றும் 31 வயதுடைய அந்த இருவரின் தொண்டை, மூக்கில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ரத்தம், சிறுநீா், உடலின் பல்வேறு இடங்களில் புண்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் விரிவான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. அதில், இவர்கள் இருவரும் ஏ2 வகை குரங்கு அம்மை தீநுண்மியால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த வகை, கடந்த ஆண்டு அமெரிக்காவில் கண்டறியப்பட்டிருந்தது. இது ஐரோப்பிய நாடுகளில் தற்போது பரவி வரும் குரங்கு அம்மையிலிருந்து வேறுபட்டதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குரங்கு அம்மை பாதிப்பை உலக சுகாதார அமைப்பு, சா்வதேச சுகாதார நெருக்கடியாக கடந்த ஜூலை 23-இல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டவிரோத ஆயுத வழக்கில் உத்தர பிரதேச அமைச்சர் குற்றவாளியாக அறிவிப்பு; தலைமறைவு

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத ஆயுத வழக்கில் அம்மாநில அமைச்சர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆதித்ய நாத் அமைச்சரவையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக ராகேஷ் சச்சன் (57) பதவி வகிக்கிறார்.

கடந்த 1991-ம் ஆண்டில் ராகேஷ்சச்சன் வீட்டில் இருந்து உரிமம்பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கான்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில், அமைச்சர் ராகேஷ் சச்சன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக் கான தண்டனை விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடன் அமைச்சர் ராகேஷ் சச்சன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பதற்றம்: 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிப்பு

 
அடுத்த 5 நாட்களுக்கு மணிப்பூர் அரசு, அம்மாநிலத்தில் மொபைல் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்துள்ளது என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

webdunia

மணிப்பூர் மாநிலம் ஃபூகாக்சாவ் இகாய் அவாங் லைக்காய் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் 4 பேர் வேன் ஒன்றுக்கு (ஆகஸ்ட் 6) தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. வகுப்புவாத மோதலை தூண்டும் வகையில் சூழல் அமைந்தது. இதையடுத்து சிலர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றனர். இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் (ATSUM) தேசிய நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற போராட்டத்தை தொடக்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்த போராட்டத்தின்போது மாணவர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில் 30 மாணவர்கள், 2 போலீசார் காயமடைந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மசோதா 2021 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என மாணவர் அமைப்பு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது. ஆனால் ஆளும் பாஜக அரசு மசோதாவை நிறைவேற்றாமல் இருப்பதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம சிறுவன்! – விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி!