அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் அடைந்திருக்கிறோம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்க அதிபர் கோருவதை போல இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை பணிகள், எண்ணப்படும் தருணத்திலேயே உள்ளன.
முன்னதாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், "அனைவருக்கும் நன்றி. கடுமையான சூழ்நிலையில் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. வெளியே சென்று இந்த வெற்றியை கொண்டாட நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த அளவுக்கு இதுபோன்ற எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்து வாக்குரிமை செலுத்தியதில்லை. ஜோர்ஜாவில் நாங்கள் வென்றிருக்கிறோம். இது மிக முக்கியமானது. பென்சில்வேனியாவில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். இதுவும் முக்கியமானது. டெக்சாஸில் முடிவுகள் இறுதியாகாவிட்டாலும் அங்கும் நாங்கள் வெற்றி பெறுவோம். மிஷிகனில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறினார்.
"ஃபுளோரிடா, டெக்சாஸ், வடக்கு கரோலைனா என பல இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், இந்த முடிவுகளை எல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள். அவர்கள் மோசடியை செய்கிறார்கள். இதைத்தான் ஆரம்பத்திலேயே நாங்கள் கூறி வந்தோம். வெற்றி முடிவுகள் சாதகமாக வந்து கொண்டிருந்த வேளையில் திடீரென அனைத்தையும் நிறுத்த முற்படுகிறார்கள்."
எனவே, நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லப்போகிறோம். என்னைப் பொருத்தவரை, நாங்கள் ஏற்கெனவே வென்று விட்டோம். எங்களுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று டிரம்ப் பேசினார்.
கள நிலவரம் என்ன?
அமெரிக்க தேர்தலில் முக்கிய போர்க்கள மாகாணமான ஃபுளோரிடா உள்ளிட்ட பல மாகாணங்களில் முன்னிலை நிலவரம் பல மணி நேரமாக தொடருகிறது. எனினும், ஃபுளோரிடாவில் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.
வெள்ளை மாளிகைக்குள் செல்ல தகுதி பெறும் அதிபர் வேட்பாளருக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவை. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ஜோ பைடனுக்கு 220, டிரம்புக்கு 213 என்றவாறு முன்னிலை நிலவரம் உள்ளது.
ஆனாலும், இன்னும் பல மாகாணங்களிலிருந்து முடிவுகள் வரவேண்டியிருப்பதால், இந்த கணிப்புகள் நிலையானதல்ல. 2016ஆம் ஆண்டு முதல் இந்த மாகாணங்களில் கணிக்கப்பட்டபடி முடிவுகள் அமையவில்லை.
தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்படும்வரை அமைதி காக்கும்படி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், தேர்தலை அபகரிக்க ஜனநாயக கட்சி முயல்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஃபுளோரிடா உள்பட தென்னக மாகாணங்களில் குடியரசு கட்சிக்கு சாதகமான முன்னிலை நிலவரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மிஷிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில் வழக்கமாக ஜனநாயக கட்சிக்கு சாதகமாக உள்ள வாக்காளர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிய வேண்டியுள்ளது. இங்குதான் 2016இல் மிகவும் எதிர்பார்ப்பு நிலவியபோதும், ஹிலாரி கிளின்டன் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார்.
முக்கிய மாகாணங்களில் என்ன நிலவரம்?
50 மாகாணங்கள், அதிபர் பதவிக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்கள், தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கோடிக்கணக்கான வாக்காளர்கள் என அமெரிக்க தேர்தல் பற்றிய அறிய அதிக விஷயங்கள் இருந்தாலும், வெற்றியை தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாகாணங்கள் உள்ளன. அவற்றின் நிலவரத்தை பார்க்கலாம். ஃபுளோரிடா: டொனால்ட் டிரம்பு முன்னிலை வகிக்கிறார். கியூபா-அமெரிக்கர்கள் வாழும் மியாமி டேட் பகுதி வாக்காளர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாக அறிய முடிகிறது.
அரிசோனா: 1996ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சிக்கு ஆதரவாக இந்த மாகாணம் வெற்றி வாய்ப்பை வழங்கியதில்லை. அது ஜோ பைடனுக்கு சாதகமான வாய்ப்பாகியிருக்கிறது. இளம் முற்போக்கு லத்தீன் அமெரிக்கர்கள் அங்கு அதிகம் வாழ்வதால் அவர்களின் ஆதரவு பைடனுக்கு சாதகமாக உள்ளது.
விஸ்கான்சின், பென்சில்வேனியா: இந்த மாகாணங்களில் இன்னும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. அதன் முடிவு தெரிய சில நாட்களாகலாம்.