Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் யுக்ரேன்

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:16 IST)
48 மணி நேரத்திற்குள் ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் யுக்ரேன் - அமெரிக்க ஆதரவை மீண்டும் தெரிவித்த ஜோ பைடன்
 
தனது நாட்டு எல்லையில் தீவிரமாகி வரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான சந்திப்பு ஒன்றை நடத்த நடத்த ரஷ்யா மற்றும் வியன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய உறுப்பு நாடுகளை யுக்ரேன் அழைத்துள்ளது.
 
எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்க வேண்டும் என்றும் தாங்கள் அலுவல்பூர்வமாக விடுத்த வேண்டுகோள்களை ரஷ்யா புறக்கணித்துவிட்டதாக, யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
 
ரஷ்யாவின் திட்டத்தில் 'வெளிப்படைத்தன்மைக்காக' அடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்நாட்டுடன் சந்திப்பு ஒன்றுக்கு வேண்டுகோள் விடுப்பதே "அடுத்த நடவடிக்கை" என அவர் தெரிவித்தார்.
 
யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது என்றாலும், படையெடுப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று மறுத்து வருகின்றது.
 
ஆனால், ரஷ்யா ராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக, சில மேற்கு நாடுகள் எச்சரித்துள்ளன. ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.
 
யுக்ரேனிலிருந்து வெளியேற வேண்டும் என டஜனுக்கும் மேலான நாடுகள் தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன. சில நாடுகள், தங்கள் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளன.
 
யுக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த அனைத்து வீரர்களையும் தலைநகர் கீவ்வில் இருந்து திருப்பி அழைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக, மூன்று ஆதாரங்களை மேற்கோளிட்டு சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஒப்பந்தமான வியன்னா உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி, ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்து அந்நாட்டிடம் வெள்ளிக்கிழமை தாங்கள் பதில்களை கோரியதாக, டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
 
"மற்ற நாட்டை அச்சுறுத்தும் வகையில், தங்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடாது என்ற, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் விதிமுறை குறித்து ரஷ்யா அக்கறை கொள்ளுமானால், நெருக்கடியை மட்டுப்படுத்துவதற்காகவும், அனைவருக்குமான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், ராணுவ வெளிப்படைத்தன்மை குறித்த தன் கடமையை அந்நாடு நிறைவேற்ற வேண்டும்," என அவர் தெரிவித்தார்.
 
ரஷ்யா வரும் நாட்களில் படையெடுப்பை நடத்த தயாராகி வருகிறது என்பதற்கான எவ்வித ஆதாரத்தையும் தான் பார்க்கவில்லை என கூறியுள்ள யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இதுகுறித்து பெரும் அச்சத்தைப் பரப்பும் வகையிலான செய்திகளை விமர்சித்துள்ளார்.
 
 
யுக்ரேன் எல்லையில் இருக்கும் ரஷ்ய படைகள்.
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு மணிநேரம் தொலைபேசியில் யுக்ரேன் அதிபர் உரையாடினார்.
 
யுக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவை அதிபர் பைடன் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், "வெவ்வேறு நாடுகளுக்கிடையேயான உறவுகளைக் கையாளுதல் மற்றும் குற்றங்களை தடுத்துநிறுத்துவதை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் முக்கியத்துவம்" குறித்து இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 
தொலைபேசி உரையாடல் குறித்து யுக்ரேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டு அதிபர் "நிலையான ஆதரவுக்காக" அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும், அமெரிக்க அதிபரை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பு குறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
 
இதற்கு ஒருநாள் முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவருக்கும் இடையிலான சுமார் ஒரு மணிநேர தொலைபேசி உரையாடல், எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டது.
 
இது தொடர்பான வெளியுறவு ரீதியிலான முயற்சிகள் இன்று, திங்கள்கிழமையும் (பிப். 14) தொடரும். யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தலைநகர் கீவ்வில் இன்று ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஸ்கால்ஸ் சந்திக்க உள்ளார். மேலும், அவர் நாளை, செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிபர் புதினுடன் மாஸ்கோவில் சந்திப்பு நடத்த உள்ளார்.
 
ஏஞ்சலா மெர்கலிடமிருந்து ஜெர்மனியின் தலைமைப் பொறுப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஓலாஃப் ஸ்கால்ஸ், எவ்வித படையெடுப்பை நிகழ்த்தினாலும், ரஷ்யா தீவிரமான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இதன்மூலம், அவர் மற்ற மேற்கு நாடுகள் மற்றும் நேட்டோ ராணுவ கூட்டணியின் உறுப்பு நாடுகளின் கருத்துகளையே எதிரொலித்துள்ளார்.
 
ஆனால், இந்த மோதல் விவகாரத்தில் திருப்புமுனை ஏற்படுவதற்கான எவ்வித எதிர்பார்ப்பு குறித்தும் பெர்லின் அதிகாரிகள் குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.
 
இதற்கிடையில்,"போரின் விளிம்பிலிருந்து" ரஷ்யாவை திருப்பி அழைத்துவர ஐரோப்பா முழுவதும் புதிய ராஜரீக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.
 
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை போரிஸ் ஜான்சன் அரசின் ராணுவ செயலாளர் கூறிய கருத்துகள், பிரிட்டனுக்கான யுக்ரேன் தூதுவர் வாடிம் பிரிஸ்டாய்கோவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
 
பிரிட்டனின் சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு பென் வாலஸ் அளித்த பேட்டியில், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் நாஜி ஜெர்மனி சரணடைந்ததுடன், தற்போதைய நிலையை ஒப்பிட்டுள்ளார்.
 
அமெரிக்காவின் இந்தோ-பசிஃபிக் அறிக்கை இந்தியா, சீனா குறித்து என்ன சொல்கிறது?
யுக்ரேன் நெருக்கடி: புதினுடன் மக்ரோங் சந்திப்பு - பதற்றத்தில் மேற்கு நாடுகள்
இதற்கு பிபிசியின் ரேடியோ நிகழ்ச்சி மூலம் பதில் தெரிவித்துள்ள யுக்ரேன் தூதுவர் வாடிம் பிரிஸ்டாய்கோ, "நம் உலக நாடுகளை அவமதிப்பதற்கான சிறந்த நேரம் இதுவல்ல. இந்த செயல், அமைதியை ஏற்படுத்தாது, மாறாக போரை கொண்டு வரும்," என்றார்.
 
தாங்கள் அச்சுறுத்தப்பட்டால், நேட்டோவில் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை கைவிடுவதற்கு தங்கள் நாடு நிர்ப்பந்திக்கப்படலாம் எனவும், அவர் பிபிசியிடம் பின்னர் ஒப்புக்கொண்டார்.
 
யுக்ரேன் நேட்டோ அமைப்பில் எப்போதும் சேர்க்கப்படக் கூடாது என்பது, ரஷ்யாவின் கோரிக்கைகளுள் ஒன்றாக உள்ளது.
 
யுக்ரேன் உள்ளிட்ட இறையாண்மை கொண்ட நாடுகள், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கூட்டணியின் உறுப்பு நாடாக இணைவதற்கு விண்ணப்பிப்பது உட்பட தங்களுக்கானதை தாங்களே முடிவெடுத்துக்கொள்ளும் சுதந்திரம் கொண்டவை என, நேட்டோ மற்றும் மேற்கு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
 
யுக்ரேன் எல்லையில் துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது தங்களின் சொந்த எல்லைக்குள் நிகழ்வது என ரஷ்யா வாதிடுகிறது.
 
ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரி யூரி யுஷாகோவ், உடனடி படையெடுப்பு பற்றிய அமெரிக்க எச்சரிக்கைகள் குறித்து கூறுகையில், "அமெரிக்காவின் வெறி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments