Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தின்பண்டம் என எண்ணி பாறை உடைக்கும் வெடிமருந்தை கடித்த குழந்தை பலி

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (09:53 IST)
கேரளாவில் வெடி மருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை உண்ட கர்ப்பிணி யானை உயிரிழந்தது மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் கர்ப்பமாக இருந்த பசு சாப்பிட்ட உணவில் வெடி மருந்து இருந்ததால் அதன் வாய் சேதமடைந்தது ஆகிய சம்பவங்கள் சமீபத்தில் இந்தியாவையே உலுக்கின.

அதே போன்றதொரு சம்பவம் இப்போது தமிழ்நாட்டில் ஒரு ஆறு வயது குழந்தையின் உயிரைப் பறித்துள்ளது. திருச்சி மாவட்டம் அலகறை கிராமத்தில், தின்பண்டம் என்று நினைத்து வெடி மருந்தை சாப்பிட்ட ஆறு வயது குழந்தை, பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்தக் குழந்தையின் உடலுக்கு பின்னர் ரகசியமாக எரியூட்டப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜூன் 9, செவ்வாயன்று, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா உள்ள அலகறை கிராமத்தில் ஆறு வயது சிறுவன் வெடி மருந்தை உணவு என எண்ணி உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் பிபிசி தமிழிடம் பேசினார்.
"தொட்டியம் தாலுகா அலகறை கிராமத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் அவரின் உறவினர்கள் இருவர் சேர்ந்து அருகில் இருக்கும் மணமேடு காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக கல் குவாரியில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடி மருந்தை வாங்கியுள்ளனர்."

"ஜூன் 9ஆம் தேதியன்று, தனது உறவினர்களுடன் மீன் பிடிக்கச் சென்றவர், மீன்களை பிடித்து விட்டு மாலை 7.30 மணியளவில் அவரது தம்பி வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மீதமிருந்த வெடிமருந்தை வீட்டிற்கு வெளியே உள்ள கட்டிலில் வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளனர். அந்நேரத்தில் அவரது தம்பியின் 6 வயது மகன் வெடிமருந்தை தின்பண்டம் என்று எண்ணி, அதை எடுத்துக் கடித்துள்ளான்."

"அது குழந்தையின் வாயிலேயே வெடித்ததால் குழந்தையின் முகம் கடுமையாக சேதமடைந்தது. உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது."

"பின்னர் வீட்டிற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அன்று இரவு 11.30 மணியளவில் அவர் உடலை எரித்துள்ளனர்."

இது குறித்து மறுநாள், (ஜூன் 10) மதியம் தகவல் அறிந்த அலகறை கிராம நிர்வாக அலுவலர் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்," என்றார் சந்திரசேகர்.

அந்த புகாரின் அடிப்படையில் முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தொட்டியம் ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மீன் பிடிக்க வெடிமருந்தைப் பயன்படுத்தியவர் மற்றும் அவர் உறவினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் வெடிமருந்து வாங்கிய கடையின் உரிமையாளரையும் அவருக்கு வெடி மருந்து விநியோகித்து வரும் புலியவரம் கிராமத்தில் உள்ள இன்னொரு வெடி மருந்து கடையின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பத்தில் தொடர்புடைய இறந்த சிறுவனின் தந்தை மற்றும் அவரின் உறவினர் ஒருவர் தேடப்பட்டு வருகின்றனர் என காவல்துறையினர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments