Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் உலகப்போரில் 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை - மறக்கப்பட்ட போர் வரலாறு

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (21:17 IST)
வடகிழக்கு இந்தியாவில் உள்ள நகரமான கோஹிமாவில் தமது ரெஜிமென்ட் நிலை நிறுத்தப்பட்ட போது கேப்டன் ராபின் ரௌலேண்டுக்கு வயது 22 மட்டுமே.
 
1944ஆம் ஆண்டு மே மாதம் இந்திய ராணுவத்தினரின் ஒரு சிறு குழுவினர் ஜப்பானிய படைப்பிரிவு ஒன்றின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர்.
 
தங்களது முன்கள வீரர்களுக்கு உண்டான கடுமையான சேதங்களுக்கு பின்பு கோஹிமா நகரத்தை தாங்கள் அடைந்ததை விரிவாக நினைவு கூறுகிறார் தற்போது 99 வயதாகும் கேப்டன் ரௌலேண்ட்.
 
கைவிடப்பட்ட பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்ட கிராமங்களையும் நாங்கள் கண்டோம். நாங்கள் முன்னேறிச் செல்ல செல்ல அனைத்து இடங்களிலும் மரணத்தின் மணத்தை உணர்ந்தோம், என்று அவர் கூறுகிறார்.
 
நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம்
அலெக்சாண்டர்: 32 வயதில் மிகப்பெரிய பேரரசை நிறுவிய இளைஞர்
15 ஆயிரம் பேரை எதிர்த்த 1,500 பேர்
 
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் பஞ்சாப் ரெஜிமென்ட்டில் ஓர் அங்கமாக இருந்த இளம்வயது கேப்டன் ரௌலேண்ட் தங்களைப் போன்ற பத்து மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஜப்பானிய படையினரை பல வாரங்களாக எதிர்கொண்டிருந்த தங்களது சக வீரர்கள் 1500 பேரை விடுவிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.
 
தரைவழியை ஜப்பானியப் படைகள் துண்டித்து விட்டதால் கூட்டுப்படைகள் வான்வழி விநியோகங்களையே நேச நாடுகளின் படையினர் முழுமையாக நம்பியிருந்தனர்.
 
இடைவிடாத தாக்குதலை தங்களால் எதிர்கொள்ள முடியும் என்று மிகச் சிலரே நம்பினார்கள். இந்தியா மீது படை எடுக்கும் நோக்கில் பர்மா வழியாக ஜப்பானிய ராணுவத்தினர் வந்தனர். ஜப்பானியப் படையினர் ஏற்கனவே பர்மாவில் பிரிட்டிஷ் படையினரை வீழ்த்தி இருந்தார்கள்.
 
ஆனால் கொசுக்கள் நிறைந்த காடுகளைக் கொண்ட மலைகள் மற்றும் வேகமாக பாயும் நீரோட்டங்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக கடந்து நாகலாந்து மாநில தலைநகர் கோஹிமா மற்றும் மணிப்பூர் தலைநகர் இம்பால் ஆகியவற்றை அவர்கள் அடைவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
அவர்கள் அந்த இரு நகரங்களையும் அடைந்தபொழுது அவற்றைப் பாதுகாப்பதற்காக சண்டையிட்ட பிரிட்டிஷ் இந்திய துருப்புகளை ஜப்பான் ராணுவத்தினர் 15 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் சூழ்ந்துகொண்டனர்.
 
ஜப்பான் ராணுவத்தினர் மேற்கொண்டு முன்னேறுவதை தடுக்கவும் அசாம் சமவெளிகளில் உள்நுழையும் வாய்ப்பைத் தரும் திமாபூர் நகரத்தை கைப்பற்றுவதை தவிர்க்கவும் ஜப்பான் ராணுவத்தினரிடம் பிரிட்டிஷ் இந்திய துருப்புகள் பல வாரம் சண்டையிட்டனர்.
 
தாங்கள் எஞ்சி இருப்போம் என்று மிகச் சில பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினரே நம்பினர்.
 
அலையலையாக ஒவ்வோர் இரவிலும் ஜப்பானிய ராணுவத்தினர் வந்துகொண்டே இருந்தார்கள் என்று கேப்டன் ரௌலேண்ட் நினைவு கூர்கிறார்.
 
அந்த சண்டை மிகவும் முக்கியமானதாக இருந்தது கோஹிமாவை நோக்கி இருக்கும் கேரிசன் ஹில் மலைப் பகுதிக்குள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினர் ஜப்பானியர்களால் சூழப்பட்ட நிகழ்வு.
 
ஒரு கட்டத்தில் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து தாக்கும் அளவுக்கு சண்டை சென்றது. மலையில் அமைக்கப்பட்ட டென்னிஸ் கோர்ட் ஒன்றுதான் இரண்டு தரப்பினருக்கும் இடையில் இருந்தது.
 
தங்களுக்கு கூடுதல் வலு சேர்ப்பதற்காக பொருட்களும் ஆயுதங்களும் வந்து சேரும் வரை ஜப்பானியர்களால் சூழப்பட்டிருந்த பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தினர் போராடிக் கொண்டிருந்தார்கள்.
 
7,000 பேருக்கு காயம் அல்லது மரணம் - பின்வாங்கிய ஜப்பான்
 
சுமார் மூன்று மாத கால சண்டைக்கு பிறகு ஜூன் 1944ல் சுமார் 7000 பேர் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நிலையிலும், உணவுப் பொருட்கள் எதுவும் மிச்சம் இல்லாத நிலையிலும் ஜப்பானிய படையினர் பின்வாங்கி மீண்டும் வரும் பர்மாவுக்கே சென்றார்கள்.
 
சத்ரபதி சிவாஜியின் மனைவி பற்றிய புத்தகத்தை பாரதிய ஜனதா எதிர்ப்பது ஏன்?
சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய மன்னரின் கல்லறை ரகசியம்: 'திறந்தால் ஆபத்து'
அங்கேயே நிலை கொண்டு தொடர்ந்து சண்டையை தொடரவேண்டும் என்று அவர்களுக்கு வந்த மேலிட உத்தரவையும் பொருட்படுத்தாமல் அவர்கள் திரும்பினர்.
 
"1500 பிரிட்டிஷ் இந்திய துருப்பினரும் மிகவும் பயங்கரமாக அவர்களை எதிர்கொண்டனர். கேரிசன் ஹில் பகுதியை ஜப்பானியர்கள் கைப்பற்றி இருந்தால் அவர்களால் திமாபூர் சென்றிருக்க முடியும்."
 
பின்வாங்கும் ஜப்பானியப் படையினரைப் பின்தொடர்ந்து செல்லுமாறு பிரிட்டிஷ் இந்தியப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது. அவ்வாறு அவர்களை பின்தொடர்ந்து சென்றவர்களில் கேப்டன் ராபின் ரௌலேண்டும் ஒருவர்.
 
காலரா, டைபாய்டு மற்றும் மலேரியா காரணமாக சில ஜப்பானியப் படையினர் உயிரிழந்தார்கள். ஆனால் உணவுப் பொருட்கள் தீர்ந்து போனதால் ஏற்பட்ட பட்டினி காரணமாக இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஜப்பானியர்கள் உயிரிழந்தார்கள்.
 
ராணுவ வரலாற்றாளர் ராபர்ட் லைமேனின் கூற்றுப்படி இந்த சண்டை ஆசியாவில் இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றியது.
 
கோஹிமாவில் நிகழ்ந்த சண்டை மிகவும் முக்கியமான பங்காற்றிய, இந்தியா மீதான ஜப்பானின் படையெடுப்புதான் ஃபார் ஈஸ்ட்டில் ஜப்பானியர்களுக்கு முதல் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது என்று பிபிசியிடம் அவர் கூறினார்.
 
''மறக்கப்பட்ட போர்''
 
இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தாலும் வடகிழக்கு இந்தியாவில் நடந்த இந்த சண்டை டி-டே சண்டை, வாட்டர்லூ சண்டை மற்றும் அல்லது ஐரோப்பிய மற்றும் வடக்கு ஆகிய பகுதிகளில் நடந்த சண்டைகளை போல பொது வெளியில் முக்கியத்துவம் பெறவில்லை என்று அவர் கூறுகிறார்.
 
இது பெரும்பாலான நேரங்களில் ''மறக்கப்பட்ட போர்'' என்றே விவரிக்கப்படுகிறது.
 
யார்க் நகரிலுள்ள கோஹிமா அருங்காட்சியகத்தின் தலைவர் பாப் குக் மிகவும் தொலை தூரத்தில் இருந்ததால் பிரிட்டன் மக்கள் இவற்றை ஆவணப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறார்.
 
 
ஜெர்மானியர்கள் பிரிட்டனிலிருந்து வெறும் 22 மைல் தொலைவில்தான் இருந்தார்கள். தவிர்க்க முடியாததாக இருந்து ஜெர்மானியப் படையெடுப்பு தான் பிரிட்டன் மக்களுக்கு அதிகம் கவலை தரக்கூடியதாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.
 
கோஹிமாவில் நடந்த நிகழ்வுகள் குறித்து இங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காக சில முயற்சிகளும் நடந்தன.
 
2013ஆம் ஆண்டு லண்டனில் உள்ள தேசிய ராணுவ அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு விவாதத்திற்கு பின்பு இந்தப் போர்தான் பிரிட்டனின் மிகச் சிறந்த சண்டை என்று வாக்களிப்பின் அடிப்படையில் தேர்வானது.
 
டி-டே மற்றும் வாட்டர்லூ போர்களை இது பின்னுக்கு தள்ளியது.
 
ஆனால் இந்த போரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக (இந்தியத்) துணைக்கண்ட பகுதியில் பெரிய முயற்சிகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை, தற்போதைய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் பகுதிகளைச் சேர்ந்த காமன்வெல்த் மற்றும் இந்திய ராணுவத்தினர் பல்லாயிரம் பேர் இதன்போது உயிரிழந்தனர்.
 
 
இது அதிகம் துணைக்கண்ட பகுதியில் அறியப்படாமல் போனதற்கு காரணம் இந்தியப் பிரிவினைதான் என்று கோஹிமாவில் இருக்கும் வரலாற்றாளர் சார்லஸ் சேசி கூறுகிறார்.
 
அதிகார மாற்றம் மற்றும் பிரிவினையின் விளைவுகளை கையாள்வதில் இந்திய தலைவர்கள் மிகவும் மும்முரமாக இருந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நிலைமை மிகவும் சிக்கலானதாக கைமீறி போவதற்கு முன்பும் துணைக்கண்ட பகுதியிலிருந்து மிகவும் விரைவாக வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் முடிவு செய்திருந்தது என்று அவர் தெரிவிக்கிறார்.
 
கோஹிமாவில் நடந்த போர் பெரும்பாலும் காலனியாதிக்க கால சண்டையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் போருக்கு பிந்தைய விவாதங்கள் பெரும்பாலும் மகாத்மா காந்தி தலைமையிலான இந்திய சுதந்திர போராட்டம் பற்றியதாகவே இருந்தன.
 
ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் இந்தியப் படையினர் மட்டுமல்லாமல் நாகா பூர்வகுடி மக்களும் பிரிட்டிஷாருடன் சேர்ந்து சண்டையிட்டு மிகவும் மதிப்புமிக்க தகவல்களை இந்த சண்டையின்போது வழங்கினார்கள்.
 
அந்த மக்களுக்கு அந்த மலைப்பகுதி குறித்து இருந்த ஆழமான அறிவு பிரிட்டிஷாருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
 
கோஹிமாவில் சண்டை நடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு டஜன் அல்லது அதே அளவு எண்ணிக்கையிலான நாகா இன மக்களை இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.
 
அவர்களில் ஒருவர் சோசங்தெம்பா ஆவோ. பர்மா உடன் இணைக்கும் சாலையை துண்டிக்கும் பொறுப்பில் பிரிட்டிஷ் ராணுவத்தால் பணியமர்த்தப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.
 
 
ஜப்பானியர்கள் இறப்புக்கு அஞ்சியவர்கள் இல்லை என்கிறார்சோசங்தெம்பா ஆவோ
 
ஜப்பானிய குண்டு வீச்சாளர்கள் தினந்தோறும் விமானங்களில் பறந்து வந்து வெடிபொருட்களை வீசிச் சென்றனர். அந்த சத்தம் காதை செவிடாகும் அளவுக்கு இருந்தது. ஒவ்வொரு தாக்குதலுக்கு பின்பும் புகை உண்டாகும். அது மிகவும் மன அழுத்தம் தருவதாக இருந்தது என்று அவர் நினைவு கூர்கிறார்.
 
ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் என்னும் ஊதியத்தின் அடிப்படையில் பிரிட்டிஷாருடன் இவர் பணியாற்றினார். ஜப்பானியப் படை வீரர்களின் போராடும் திறன் குறித்து தான் இன்னும் வியப்படைவதாக அவர் தெரிவிக்கிறார்.
 
ஜப்பான் ராணுவத்தினர் மிகவும் உந்துதலுடன் இருந்தனர். அவர்கள் மரணத்தை கண்டு அஞ்சவில்லை. தங்கள் பேரரசருக்காக சண்டையிடுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை புனிதமானது. அவர்கள் சரணடைய வேண்டும் என்று கூறப்பட்ட போது அவர்கள் தற்கொலை தாக்குதல்தாரிகள் ஆனார்கள் என்று அவர் கூறுகிறார்.
 
ஜப்பான் சரணடைந்த 75ஆம் ஆண்டை அனுசரிக்கும் விதமாக 'மெமரிஸ் ஆஃப் ய ஃபார்காட்டன் வார்' எனும் ஆவணப்படம் இந்த சண்டை குறித்து வெளியிடப்பட்டது.
 
பல ஆண்டுகளுக்கு முன்பு இதன் தயாரிப்பாளர் சுபிமால் பட்டாச்சார்ஜீ மற்றும் அதன் குழுவினர் ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக ஜப்பான் சென்றிருந்தனர்.
 
ஜப்பான் மற்றும் பிரிட்டனின் முன்னாள் போர் வீரர்கள் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டிருந்த பொழுது ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அழத் தொடங்கினார்கள் என்று அவர் கூறுகிறார்.
 
ஒருவரையொருவர் நோக்கி சுட்ட போர் வீரர்கள் இவர்கள். இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு சிறப்பான பந்தம் இருந்தது. அது தங்கு தடையின்றி இயல்பாகவே வெளிப்பட்டது. அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
 
கோஹிமாவில் நடந்த சண்டை என்பது ஜப்பானியர்களுக்கு ஓர் அவமானகரமான தோல்வி. ஜப்பானின் முன்னாள் போர் வீரர்கள் தங்களது கோஹிமா அனுபவம் குறித்து மிகவும் அரிதாகவே பேசினார்கள்.
 
ஜப்பானியர்களுக்கு இருந்த உணவு எதுவும் மிச்சமில்லை என்று இந்த ஆவணப் படத்துக்காக பேட்டி எடுக்கப்பட்ட வாஜிமா கொய்சிரோ கூறுகிறார்.
 
இது தோல்வியடையும் விளையாட்டாக இருந்தது. அதனால் நாங்கள் விலகிக் கொண்டோம் என்கிறார் அவர்.
 
பிரிட்டிஷாருடன் சேர்ந்து சண்டையிட்ட நாகா பூர்வகுடி இனத்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் காயம் அடைந்தனர் மற்றும் உயிரிழந்தனர். ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும் பொழுது பிரிட்டிஷார் தங்களைத் தனி நாடாக அங்கீகரிப்பார்கள் என்றும் இந்தியாவுடன் ஓர் அங்கமாக சேர்த்து விட மாட்டார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள்.
 
ஆனால் அவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர் என்று கூறுகிறார் வரலாற்றாளர் சார்லஸ் சேசி.
 
பின் வரும் ஆண்டுகளில் கோஹிமா மற்றும் இம்பாலில் கொல்லப்பட்ட தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானவர்கள், குறிப்பாக பிரிட்டன் மற்றும் ஜப்பானில் இருந்து இங்குள்ள போர் நினைவிடங்கள் வருகை தர தொடங்கினார்கள்.
 
இந்தியாவின் பஞ்சாப் ரெஜிமென்ட் விடுத்த அழைப்பின் பேரில் கேப்டன் ரௌலேண்டும் 2002ஆம் ஆண்டு கோஹிமாவிற்கு திரும்பச் சென்றார்.
 
58 ஆண்டுகளுக்கு முன்பு தாமும் தமது சக ராணுவ வீரர்களும் ஜப்பானிய படையினரை எதிர்கொண்ட கேரிசன் ஹில் முன்பு அவர் நின்றார்.
 
இது என் நினைவுகளைத் திரும்ப கொண்டுவந்தது. இது ஒரு மிகப்பெரிய ராணுவ சாதனை என்று நினைவு கூர்கிறார் கேப்டன் ரௌலேண்ட். ஜப்பானின் 31-வது படைப்பிரிவை 1500 பேர் கொண்ட தங்கள் குழு எதிர்த்து நின்றதை அவர் ஒரு மிகப்பெரிய ராணுவ சாதனை என்று கூறுகிறார்.
 
கோஹிமாவுக்கு திரும்பச் செல்லும் முன்பு கேப்டன் ரௌலேண்ட் மற்றும் அவரது மகனும் கேரிசன் ஹில்லில் உள்ள ஓர் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றனர்.
 
அந்த மலர் வளையத்தை அங்கு வைத்தபோது அந்த போரில் உயிரிழந்த தமக்கு தெரிந்த எட்டு ராணுவ வீரர்களை கேப்டன் நினைவுகூர்ந்தார்.
 
"பிரபலமான பிற போர்களைப் போல இந்தப் போர் பொது மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இதில் பங்கேற்றவர்கள் யாரும் இதை மறக்கவில்லை. மனித இயல்பின் மீண்டு வரும் தன்மைக்கு இது ஒரு மிகப்பெரிய மரியாதை," என்று அவர் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments