Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரேவகை பட்டாம்பூச்சி, 67 தோற்றங்கள்: படம்பிடித்து சாதித்த புகைப்படக்கலைஞர்

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:51 IST)
அந்திச்சிறகன் எனும் பட்டாம்பூச்சி வகையின் 67 விதமான இறக்கைத் தோற்றங்களை படம்பிடித்து, இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார் புகைப்படக் கலைஞர் தர்ஷன் திரிவேதி.

கோவையில் வசித்து வரும் இவர், பொழுதுபோக்காக புகைப்படக் கலையை தொடங்கியவர், இன்று இந்தியாவின் மிக முக்கிய பட்டாம்பூச்சி புகைப்படக்கலைஞர்  என அறியப்பட்டுள்ளார். புகைப்படக் கலை மீதான ஆர்வம் மற்றும் பட்டாம்பூச்சிகளின் தோற்றங்கள் குறித்த தனது ஆவனம் பற்றி பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்  தர்ஷன்.
 
"நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவன். சிறுவயது முதலே புகைப்படக் கலையின் மீது எனக்கு ஆர்வமிருந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் பொழுதுபோக்காக  டிஜிட்டல் கேமராவில் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். நான் வசித்த பகுதியில் கட்டடங்கள் மட்டுமே அதிகமாக இருந்தன. ஆனால், எனக்கு இயற்கை சார்ந்த படங்கள் எடுப்பதில்தான் விருப்பம். கண்ணில்படும் பசுமையான காட்சிகள் அனைத்தையும் படம் எடுத்தேன். சொந்தமாகவே, புகைப்படக்கலையின் நுணுக்கங்களை  கற்றுக்கொண்டேன்."
 
"2013ஆம் ஆண்டு கோவைக்கு பணி மாறுதல் கிடைத்தது. கோவைக்கு வந்து பார்த்தபோது, மலைகளும், பசுமையான காடுகளும் என்னை ஈர்த்தன. ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் பசுமை நிறைந்த பகுதிகளுக்கு சென்று பூச்சி, வண்டு மற்றும் பட்டாம்பூச்சிகளை படம்பிடிக்க ஆரம்பித்தேன். தேசிய அளவில்  சாதனை படைக்கும் அளவிற்கு நான் வருவேன் என அப்போது நினைத்துக் கூட பார்த்ததில்லை" எனக் கூறி பெருமிதத்தோடு புன்னகைக்கிறார் தர்ஷன்.
 
மத்திய அரசுப் பணியில் இருக்கும் இவர், கோவையில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளோடு இணைந்து பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு பணியில் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
 
"2014 ஆம் ஆண்டில் கோவையில் உள்ள, பட்டாம்பூச்சி ஆர்வலர்களின் நட்பு கிடைத்தது. பட்டாம்பூச்சிகள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் அவர்களிடமிருந்து தான் தெரிந்துகோண்டேன்."
 
"2016 ஆம் ஆண்டில், முதல்முறையாக அந்திச் சிறகன் (Common Evening Brown) வகை பட்டாம்பூச்சிகளை படம்பிடிக்க துவங்கினேன். பட்டாம்பூச்சி  வகைகளில் இவை மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, பிறக்கும் இடத்தின் தட்பவெப்ப நிலையை பொருத்து இவை தனது இறக்கை தோற்றங்களை  உருவாக்கிக் கொள்ளும். ஈரமான பகுதிகளில் பிறக்கும் இவ்வகை பட்டாம்பூச்சிகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான தோற்றத்தில் தான் இருக்கும். அதுவே, வெப்பமுள்ள பகுதிகளில் பிறக்கும் பட்டாம்பூச்சிகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளும். அதாவது, புல்வெளிகள் அமைந்த  பகுதியில் பிறந்தால் இறக்கை பச்சை நிறத்திலும், காய்ந்த மரங்கள் இருக்கும் பகுதியில் பிறந்தால் அரக்கு நிறத்திலும் தோற்றமிருக்கும். இதனால்,  பட்டாம்பூச்சியை உட்கொள்ளும் பிராணிகளிடமிருந்து இவை தப்பித்துக்கொள்ளும். இதை பல்லுருத்தோற்றம் ( Polymorphism) என குறிப்பிடுகின்றனர். இயற்கையின் மிகப்பெரிய அதிசயம் இவை" என்கிறார் தர்ஷன்.

அந்திச்சிறகன் வகை பட்டாம்பூச்சிகளின் 30 வகை இறக்கைத் தோற்றங்களை மட்டுமே இதுவரை புகைப்படக்கலைஞர்கள் ஆவனப்படுத்தியுள்ளதாகவும், இந்திய அளவில் அதிகபட்சமாக 67 தோற்றத்தை ஆவணம் செய்ததால் தனக்கு சாதனையாளர் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் இவர்.
 
"அந்திச் சிறகன் பட்டாம்பூச்சிகள் பற்றி தெரிந்துகொண்ட பின்பு, அதன் தோற்றங்களை படம்பிடிக்கும் ஆர்வம் அதிகமானது. பலநாட்கள் காத்திருந்து ஒரே ஒரு தோற்றத்தை படம்பிடித்துள்ளேன். பட்டாம்பூச்சிகளை படம் பிடிப்பது மிகவும் சவாலான காரியம். சுமார் பத்து அடி தூரத்தில் நின்று படம் எடுக்க முயற்சித்தாலும்,  அவை பறந்துவிடும். கவனிக்காத நேரத்தில் கண் முன் தோன்றும், படம் எடுக்க ஆரம்பிக்கும் போது பறந்து விடும். எனவே, பட்டாம்பூச்சிகளை படம் எடுப்பதற்கு  அதிக நேரமும், அதீத பொறுமையும் தேவைப்படும்."
 
"2018 ஆம் ஆண்டு முதல் நான் படம்பிடித்த அந்திச்சிறகன் பட்டாம்பூச்சியின் படங்களை ஆய்வு செய்தபோது, 30 வகையான தோற்றத்தை படம்பிடித்திருந்தது தெரியவந்தது. அதற்கு முன்னர் எடுத்த படங்களை ஆய்வு செய்தபோது தான், என்னிடம் மொத்தம் 67 வகையான அந்திச்சிறகன் தோற்றம் இருப்பது தெரியவந்தது.  இந்திய அளவில் இதுவரை யாரும் இத்தனை வகை தோற்றத்தை ஆவணப்படுத்தியதில்லை என்பதும் தெரியவந்தது.
 
பின்னர், அவை அனைத்தையும் உரிய ஆவணத்தோடு இணைத்து சாதனையாளர் தேர்வுக்குழுவிற்கு அனுப்பினேன். பலகட்ட ஆய்வுகளுக்கு பின்னர், இந்திய அளவில் அந்திச்சிறகன் பட்டாம்பூச்சியின் அதிக தோற்றங்களை படம்பிடித்த சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை ஏப்ரல் மாதத்தில் எனக்கு வழங்கினர்" என பூரிப்புடன் தெரிவிக்கிறார் தர்ஷன்.
 
பேரளவு ஒளிப்படவியல் (Macro Photography) எனும் புகைப்படக் கலையின் மூலம் பூச்சிகள் மற்றும் தாவரங்களின் பல்வேறு வடிவங்களை படம்பிடிப்பது, இயற்கையின் படைப்புகள் குறித்து தன்னை ஆழமாக சிந்திக்க வைப்பதாக கூறுகிறார் இவர்.
 
"பூக்களின் மகரந்தம், பட்டாம்பூச்சிகளின் இறக்கைத் தோற்றம், பூச்சிகளின் கண்கள் இவற்றை முடிந்த அளவிற்கு நெருக்கமாக, கேமரா லென்சின் மூலம் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாகத் தோன்றும். 'இயற்கையின் படைப்புகள் இவ்வளவு அழகானவையா' என நினைக்கத் தோன்றும். ஒருகட்டத்தில் இந்த ஆர்வம் எனக்கு தேடலாக மாறியது. என்னையும் மறந்து புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். பட்டாம்பூச்சிகளை படம் எடுக்கையில் பலமுறை எறும்புகளிடம் கடி  வாங்கியுள்ளேன். அடுத்தடுத்த தேடல் தான் தொடர்ந்து என்னை புகைப்படம் எடுக்க வைக்கிறது."
 
"அந்திச்சிறகன் பட்டாம்பூச்சியின் இறக்கைத் தோற்றங்கள் குறித்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். கடந்த இரண்டு மாதங்களில் மேலும், 30 தோற்றத்தை படம் பிடித்துள்ளேன். இவை அனைத்துமே, கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டவை. எனவே, கோவையின் தட்பவெப்ப நிலைகுறித்த ஆராய்ச்சிகளுக்கு இவை உதவும். இன்னும் பல இறக்கை தோற்றங்களை ஆவணப்படுத்த முயற்சித்து வருகிறேன். உலக அளவில்
 
அந்திச்சிறகன் பட்டாம்பூச்சியின் இறக்கை தோற்றங்களை அதிகமாக படம்பிடித்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்" என கூறுகிறார்  தர்ஷன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments