Webdunia - Bharat's app for daily news and videos

Install App

COP26 பருவநிலை மாநாட்டுக்கு வராதது மிகப்பெரிய தவறு - சீனா மற்றும் ரஷ்யாவை விமர்சித்த ஜோ பைடன்

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (14:52 IST)
சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் காலநிலை மாநாட்டில் (COP26) கலந்து கொள்ளாததை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய பிரமாண்ட பிரச்னை, சீனா மற்றும் ரஷ்யா பொறுப்பற்ற முறையில் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கிவிட்டன என்று ஜோ பைடன் செவ்வாய்கிழமை இரவு தனது உரையில் குறிப்பிட்டார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும், நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில், பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்க இரு நாடுகளும் தங்கள் பிரதிநிதி குழுக்களை அனுப்பியுள்ளன.

உலக அளவில் அதிகம் கார்பனை உமிழும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 மாநாட்டில் 120 உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தைத் தவிர்ப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஏற்கனவே உலக நாடுகள் பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. 2030ம் ஆண்டுக்குள் மீத்தேன் அளவைக் குறைக்க உலக அளவில் உறுதியேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, 2030ம் ஆண்டுக்குள் காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி காடுகள் அளவை அதிகரிப்பது போன்ற ஒப்பந்தங்கள் இதில் அடக்கம். காடழிப்பு ஒப்பந்தத்தில் சீனா மற்றும் ரஷ்யா இருவருமே கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்கிழமை பைடன் தன் உரையைத் தொடங்குவதற்கு முன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மெய்நிகர் காணொளி மூலம் பருவநிலை மாநாட்டில் காடுகள் மேலாண்மை கூட்டத்தில் உரையாற்றினார். "காடுகளைப் பாதுகாக்க ரஷ்யா மிக வலுவான மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று கூறியதாக ரஷ்ய அதிபர் மாளிகையில் இருந்து வெளியான ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா, செளதி அரேபியா போன்ற நாடுகள் இதுவரையான பேச்சுவார்த்தைகளில் எப்படி முக்கிய பங்கு வகித்தன என்று அதிபர் ஜோ பைடனிடம் கேட்ட போது அதற்கு விடையளித்தார்.

"சீனா உலக அரங்கில் ஒரு உலகத் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளாமலா" என கூறினார் பைடன். மேலும் சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை தராதது மிகப்பெரிய தவறு என்றும் கூறினார்.

அதே கருத்தைத்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் கூறினார். ரஷ்யாவின் காடுகள் தீபற்றி எரிந்து வருகின்றன, அந்நாட்டின் அதிபர் அப்பிரச்னை குறித்து வாய்திறக்காமல் அமைதியாக இருக்கிறார் என்று கூறினார் பைடன்.

ரஷ்ய அதிபர் புதின் COP26 மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என கடந்த அக்டோபர் மாதம் அறிவித்த போது, புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை என்றாலும், பருவநிலை மாற்றம் என்பது ரஷ்யாவுக்கு ஒரு முக்கிய பிரச்னை என்று மட்டும் கூறினார்.

அதே மாதம் சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்கும் COP26 மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். 2020ம் ஆண்டின் தொடக்கம் முதலே சீன அதிபர், சீனாவை விட்டு வெளியேறவில்லை என்பதால் இந்த முடிவு என கருதப்பட்டது.

2060ம் ஆண்டுக்குள் சீனா கார்பன் நியூட்ராலிட்டி நிலையை அடைய முயலும், 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வின் உச்சநிலையை அடைவோம் என கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

நிகர பூஜ்ஜிய உமிழ்வு அல்லது கார்பன் நியூட்ராலிட்டி நிலை என்பது வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிக்காமல் இருப்பதைக் குறிக்கிறது.

கடந்த அக்டோபர் 13ம் தேதி, ரஷ்ய அதிபர் புதின் ஒரு சர்வதேச எரிசக்தி அமைப்பில் பேசிய போது, ரஷ்யா கார்பன் நியூட்ராலிட்டி நிலையை 2060ம் ஆண்டுக்குள் அடையும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments