Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு 'கோவிட் வார் ரூம்' - அவசர உதவி பெறுவது எப்படி? எவ்வாறு செயல்படுகிறது?

Webdunia
புதன், 19 மே 2021 (09:56 IST)
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், படுக்கைகளுக்கான தேவையையும் ஆக்சிஜன் தேவையையும் ஒருங்கிணைக்க கோவிட் கட்டளை அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 'வார் ரூம்' (War Room) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மையம் எப்படிச் செயல்படுகிறது?

தமிழ்நாடு தற்போது கொரோனா தொற்றின் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தினமும் கிட்டத்தட்ட 33 ஆயிரம் நோயாளிகள் புதிதாகத் தொற்றுடன்  கண்டறியப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள அனைத்துப் படுக்கைகளுமே கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. நோயாளிகள் குணமடைந்து,  சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டாலோ, அல்லது மரணமடைந்தாலோதான் புதிய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் கிடைக்கும் சூழல்  ஏற்பட்டிருக்கிறது.
 
மாநில மருத்துவத் துறை புதிதாக பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை ஏற்படுத்திவந்தாலும், அவை அதிகரிக்கும் நோயாளிகளின்  எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் இல்லை. ஆகவே, புதிதாக இத்தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் கிடைக்குமா என்ற பரிதவிப்புடன் இருப்பவர்கள், ஒவ்வொரு மருத்துவமனையாக விசாரிக்கும் நிலை இருந்துவருகிறது.
 
இந்த நிலையில்தான், மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் வசதிகளைத் தெரிந்துகொள்ளும் வகையிலான இணையதளம் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த இணைய தளத்தைப் பார்த்துவிட்டு மருத்துவமனையைத் தொடர்புகொண்டாலோ அல்லது நேரில் சென்றாலோ அதற்குள் அந்தப் படுக்கை வேறு  யாருக்காவது கொடுக்கப்பட்டுவிடும் சூழலே நிலவியது. இதனால், நோயாளிகளின் உறவினர்கள் விரக்தியின் விளம்பிற்கே தள்ளப்பட்டனர்.
 
இந்த நிலையில்தான் மாநில அரசு, கோவிட் கட்டளை அறை என்ற ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் உதவி மையத்தை உருவாக்கியிருக்கிறது.
 
"சற்று பொறுங்கள் ஆம்புலன்ஸ் வரும்"
 
"பதறாமல் பதில் சொல்லுங்கள். ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது? 94ஆ? அவர் வயது என்ன? அரசு மருத்துவமனையில் சேர்கிறீர்களா அல்லது தனியார்  மருத்துவமனைக்குச் செல்லவிரும்புகிறீர்களா? ஓகே. சற்று பொறுங்கள் ஆம்புலன்ஸ் வரும்" என நோயாளியின் உறவினர் ஒருவருக்குப் பதில் சொல்லிவிட்டு,  படுக்கைகளை கண்காணிக்கும் பிரிவிடம் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று விசாரிக்கிறார் டாக்டர் தேவி ஸ்ரீ்.
 
படுக்கைகளைக் கண்காணிக்கும் பிரிவைச் சேர்ந்தவர் பதில் சொன்னதும், நோயாளியின் இல்லத்திற்கு ஆம்புலன்சை அனுப்புவதற்கான ஆணைகள்  அனுப்பப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்குள் அந்த நோயாளிக்கு படுக்கை கிடைத்துவிடக்கூடும்.
 
அதற்குள் அடுத்த அழைப்பு. அதே கேள்விகள். விசாரிப்புகள். ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை, வென்டிலேட்டர், ஆம்புலன்ஸ் அனுப்புவது, முன்னுரிமை  அடிப்படையில் நோயாளிகளைச் சேர்ப்பது என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசின் கோவிட் கட்டளை அறை.
 
"இந்தக் கட்டளை அறையைத் துவக்கியதன் முக்கிய நோக்கமே, நோயின் பாதிப்பிற்கு ஏற்பட நோயாளிகளுக்கு படுக்கைகளை, ஆக்சிஜனை ஏற்பாடுசெய்து தரத்தான்.  முக்கிய நபர்களுக்கும் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கும்தான் படுக்கை கிடைக்கும். மற்றவர்களுக்குக் கிடைக்காது என்ற எண்ணத்தைப் போக்கும்வகையில் இந்த  வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது" என பிபிசியிடம் தெரிவித்தார் தமிழ்நாடு நேஷனல் ஹெல்த் மெஷினின் முன்னாள் இயக்குனரும் தற்போது கோவிட் கட்டளை அறையின் தலைவருமான தரேஸ் அகமது.
 
இந்தக் கட்டளை அறை திட்டம் எப்படி உருவானது? கோவிட் தொடர்பான அழைப்புகள், கோரிக்கைகளை ஒருங்கிணைக்க ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் பொது சுகாதாரத் துறை வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் ஒன்று உருவாக்கப்பட்டது. புதிய அரசு பதவியேற்ற பிறகு, இது கோவிட்  கட்டளை அறையாக மாற்றப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தக் கட்டளை அறைக்கு வருகைதந்து, தானே அழைப்பை  எடுத்துப் பேசியதற்குப் பிறகு பலரது கவனமும் இந்தக் கட்டளை அறை மீது திரும்பியிருக்கிறது.
 
24 மணி நேரமும் இயங்கும் இந்தக் கட்டளை அறையில் கிட்டத்தட்ட 100 பேர் வரை பணியாற்றுகிறார்கள். தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகள், கோவிட் சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள், ஆக்சிஜன் விநியோகிஸ்தர்கள், அரசு மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் ஆகியோரைத்  தொடர்புகொள்வதற்கான தரவுத் தளம் இவர்களிடம் இருக்கிறது.
 
ஒவ்வொரு அரசு மருத்துவமனையின் வாசலிலும் நிற்கும் ஆம்புலன்ஸ் வரிசை, மருத்துவமனையில் சேர்க்க மறுக்கும் நிலை ஆகிய குழப்பங்களுக்கு நடுவில்  நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான படுக்கையை பதற்றமின்றித் தேடித்தருவதுதான் இதன் முதன்மையான நோக்கம்.
 
'கோவிட் வார் ரூம்' - உதவி பெறுவது எப்படி?
 
இந்தக் கட்டளை அறையை பல்வேறு விதங்களில் அணுக முடியும். மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் 104 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தொடர்பு  கொள்ளலாம். அல்லது ட்விட்டரில் @104_GoTN என்ற ஐடியை tag செய்வதன் மூலம் கவனத்தை ஈர்க்கலாம். அல்லது கட்டளை அறையின் ட்விட்டர் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் தொடர்புகொள்ளலாம்.
 
இந்தக் கட்டளை அறையில் மிகப் பெரிய எல்சிடி திரைகளில் வந்த அழைப்புகள், கோரிக்கைகள் குறித்த தரவுகள் வெளிப்படையாகப் பதிவிடப்படுகின்றன. எத்தனை  பேர் அழைத்தார்கள், அதில் எத்தனை பேர் ஆபத்தான நிலையில் இருந்தார்கள், எத்தனை பேருக்கு படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன, எத்தனை கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன போன்ற அனைத்துத் தகவல்களும் இந்தத் திரையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் 108 ஆம்புலன்சுகள் ஒவ்வொன்றும் எந்த இடத்தில் சென்றுகொண்டிருக்கின்றன என்ற தகவல் நேரலையாக ஒரு திரையில் ஒளிபரப்பாகிறது.
 
"இப்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெரும் வரிசை நிற்கிறது. ஆனால், ஸ்டான்லியில் கூட்டமில்லை என்று தெரியவந்தால் உடனடியாக ராஜீவ் காந்தி  மருத்துவமனை முன்பாக நிற்கும் ஆம்புலன்சை அழைத்து, ஸ்டான்லிக்குச் செல்லச் சொல்வோம். இதன் மூலம் நோயாளியை வைத்துக்கொண்டு ஆம்புலன்சுகள்  அங்குமிங்கும் அலையத் தேவையிருக்காது" என்கிறார் தரேஸ் அகமது.
 
இந்தக் கட்டளை அறையின் முக்கியமான பணிகளில் ஒன்று, அழைப்புகள் வரும்போது நோயாளியின் நிலை எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதை  ஆய்வுசெய்வது. இதற்காக 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள். பல தருணங்களில் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ள நோயாளிகள், பதற்றத்தில் அழைப்பு விடுப்பார்கள். அவர்களுக்கு அவர்களது உடல்நிலையை விளக்குவது இந்த மருத்துவர்களின் முக்கியமான பணியாக  இருக்கிறது. சிலர் வீட்டில் இருக்க விரும்பினாலும், அவர்களது நோய்க் குறிகள், சிடி ஸ்கேன் ரிப்போர்ட்களின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வரும்படி  சொல்லப்படுகிறது.
 
ஒரு நோயாளிக்கு படுக்கை தேவை என உணரப்பட்டால், இதற்கான கோரிக்கையை மருத்துவர் முன்வைக்கிறார். இதற்குப் பிறகு, படுக்கையை ஒதுக்கீடு செய்யும்  பிரிவு அந்தக் கோரிக்கையைக் கையாள்கிறது. முன்பே கூறியதைப் போல, அரசு மருத்துவமனையா, தனியார் மருத்துவமனையா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையா என்பது நோயாளியின் நிலை, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 
Code Red குறியீட்டின் மூலம் அவசர அழைப்பு
 
ஒரு நோயாளியின் நிலை மிக மோசமாக இருந்தால் Code Red என்ற குறியீட்டின் மூலம், அவசர அழைப்பு அனுப்பப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள அரசு  மருத்துவமனையில் ஒரு படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டு, நோயாளியை அழைத்துவர ஆம்புலன்ஸ் அனுப்பப்படுகிறது. அந்த ஆலம்புலன்ஸ் மருத்துவமனையை  வந்தடைந்ததும், வரிசையில் நிற்காமல் உள்ளே செல்வதற்கான ஆணை பிரத்யேகமான தொலைபேசி எண் மூலமும் இதற்கென பிரத்யேகமாக உள்ள மின்னஞ்சல்  முகவரி மூலமும் அளிக்கப்படுகிறது. இந்த Code Red சமிக்ஞையை வேறு யாரும் தவறாகப் பயன்படுத்திவிடாமல் இருக்கவே இந்த பிரத்யேக தொலைபேசி  பயன்படுத்தப்படுகிறது.
 
ஒரு நோயாளி மிக மோசமான நிலையில் இருப்பதாகத் தெரியவந்து, Code Red சமிக்ஞை பயன்படுத்தப்பட்டாலும் எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லாவிட்டால் என்ன செய்வது? "அருகில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவமனையில் தற்காலிகமாக அவர் சேர்க்கப்பட்டு, அவரது உடல்நிலையை மேம்டுத்தும்  சிகிச்சை அளிக்கப்படும். பிறகு படுக்கை தயாரானதும் அவர் அந்தப் படுக்கையில் சேர்க்கப்படுவார்" என்கிறார் இந்தக் கட்டளை அறையில் பணியாற்றும் விடுதலை  விரும்பி. இந்தக் கட்டளை அறைக்கு ஒரு நாளைக்கு 2500 முதல் 3,000 அழைப்புகள் வரை வருகின்றன.
 
இந்தக் கட்டளை அறையை அழைத்து, ஒரு நோயாளிக்கு படுக்கை கொடுத்த பிறகு இவர்களது பணி முடிவதில்லை. இதற்குப் பிறகு, மதி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்கள் நோயாளிகளின் உறவினர்களை அழைப்பார்கள். அவர்களுக்கு படுக்கை கிடைத்ததா, நோயாளி என்ன நிலையில்  இருக்கிறார், வேறு உதவிகள் தேவையா என்பது குறித்து இந்தத் தன்னார்வலர்கள் விசாரிப்பார்கள்.
 
ஆனால், எல்லாத் தருணங்களிலும் முழுமையாக உதவிவிட முடிவதில்லை. நோயாளியின் உறவினர் 104ல் பேசிக்கொண்டிருக்கும்போதே, உயிரிழப்பவர்களும்  உண்டு. சற்று சாதாரண நிலையில் இருப்பதால், படுக்கைக்காக காத்திருக்கும்போது உயிரிழப்பவர்களும் உண்டு. அந்தத் தருணங்களில் கோபம் கட்டுப்பாட்டு  அறையில் இருப்பவர்கள் மீது திரும்பும். பல தருணங்களில் 104 என்ற எண்ணை அழைத்தும் யாரும் எடுக்கவில்லை என்ற புகார்களும் இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

அமலாக்கத்துறை சோதனை எதிரொலி: ED.. திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்

ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை: தமிழக அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தக்காளி விலை படுவீழ்ச்சி.. 50 ரூபாய்க்கு 4 கிலோ.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments