Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தன் டாடாவின் கதை: ஆடம்பரங்களை வெறுத்த, எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த தொழிலதிபர்

Prasanth Karthick
வியாழன், 10 அக்டோபர் 2024 (15:43 IST)

இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடையே கடந்த 1992ஆம் ஆண்டில், ஒரு தனித்துவமான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டெல்லி- மும்பை இடையிலான விமானப் பயணங்களின்போது, அவர்களை மிகவும் கவர்ந்த பயணி யார் என அவர்களிடம் கேட்கப்பட்டது.

 

 

ரத்தன் டாடா என்ற பெயருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. இதற்கான காரணத்தை அறிய முயன்றபோது, வழக்கமாக தனியாக வரும் ஒரே விஐபி அவர் மட்டுமே என்றும், அவரது பையையோ அல்லது கோப்புகளையோ எடுத்துச் செல்ல அவருடன் உதவியாளர்கள் யாரும் ஒருபோதும் வந்தது கிடையாது என்றும் கூறப்பட்டது.

 

மேலும், விமானம் புறப்பட்டவுடன், அவர் அமைதியாக வேலை செய்வார். அவர் வழக்கமாக மிகக் குறைவான அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஒரு பிளாக் காபி (Black Coffee) கேட்பார். தனக்கு விருப்பமான காபி கிடைக்கவில்லை என்பதற்காக விமான பணிப்பெண்ணை அவர் ஒருபோதும் திட்டியதில்லை.

 

ரத்தன் டாடாவின் எளிமைக்கான இதுபோன்ற உதாரணங்கள் இன்னும் நிறைய உள்ளன.

 

'The Tatas: How a Family Built a Business and a Nation' என்ற தனது பிரபலமான புத்தகத்தில், கிரிஷ் குபேர் பின்வருமாறு எழுதுகிறார், "அவர் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரானபோது, ஜே.ஆர்.டி-யின் (ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அறையில் அவர் உட்காரவில்லை. அவர் தனக்கென ஓர் எளிய மற்றும் சிறிய அறையை அமைத்துக் கொண்டார். அவர் ஒரு ஜூனியர் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு மூத்த அதிகாரி வந்தால், மூத்த அதிகாரியை காத்திருக்கச் சொல்வார்.”

 

"அவரிடம் 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ' என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் இருந்தன, அவற்றை அவர் மிகவும் நேசித்தார். நாய்கள் மீதான அவரது நேசத்திற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பம்பாய் ஹவுஸில் உள்ள அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்."

 

"இந்த நாய்கள் பெரும்பாலும் பம்பாய் ஹவுஸின் முகப்பு அறையில் (Lobby) அங்குமிங்கும் உலாவுவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் மனிதர்கள் யாரேனும் அங்கு நுழைய வேண்டுமென்றால், ஒன்று அவர்கள் ஊழியர்களாக இருக்க வேண்டும் அல்லது முன் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அங்கு நுழைய அனுமதிக்கப்பட்டனர்."

 

‘டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் வெகு சிலரே’

 

ரத்தன் டாடாவின் முன்னாள் உதவியாளர் ஆர்.வெங்கட்ரமணனிடம், ரத்தனுக்கும் அவருக்குமான நெருக்கம் குறித்துக் கேட்டபோது, "மிஸ்டர். டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் வெகு சிலரே. ஆம், அவருக்கு மிகவும் நெருக்கமான இரண்டு பேர் உள்ளனர், 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ', அவரது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் அவரை நெருங்க முடியாது" என்று கூறினார்.

 

பிரபல தொழிலதிபரும் எழுத்தாளருமான சுஹைல் சேத் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்: "பிப்ரவரி 6, 2018 அன்று, பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், ரத்தன் டாடாவுக்கு அவரது பொதுநலப் பணிகளுக்காக 'ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர்' விருதை வழங்க இருந்தார்."

 

தி கிரேட் ‘’டாட்டா நிறுவனம் ரூ 500 கோடி நிதி உதவி
 

"இதற்காக ரத்தன் டாடா பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்க வேண்டும். ஆனால் விழாவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தனது நாய் டிட்டோவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் ரத்தன் டாடா தெரிவித்தார். இதுகுறித்து இளவரசர் சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டபோது, 'அதுதான் நல்ல மனிதனின் குணம். அப்படிப்பட்ட மனிதன்தான் ரத்தன் டாடா' என்று கூறினார்."

 

‘தனிமை விரும்பி, புகழ் வெளிச்சத்தை வெறுத்தவர்’
 

ஜே.ஆர்.டி.யை போலவே, ரத்தன் டாடாவும் தனது நேரம் தவறாமைக்குப் பெயர் பெற்றவர். அவர் மாலை சரியாக 6.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்புவது வழக்கம். அலுவலகம் தொடர்பான வேலைக்காக வீட்டில் இருக்கும்போது யாராவது அவரைத் தொடர்புகொண்டால், அவர் பெரும்பாலும் எரிச்சல் அடைவார்.

 

தனது வீட்டில் தனிமையில் இருக்கும்போது கோப்புகளைப் படிப்பார். அவர் மும்பையில் இருந்தால், அலிபாக்கில் உள்ள தனது பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களைக் கழிப்பார். இந்த நேரத்தில் அவரது நாய்களைத் தவிர வேறு யாரும் அவருடன் இருக்கமாட்டார்கள். அவர் பயணம் செய்வதையோ சொற்பொழிவு ஆற்றுவதையோ விரும்பவில்லை. அவருக்கு புகழ் வெளிச்சமும், கைதட்டலுக்கு பேசுவதும் மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருந்தது.

 

அவரது குழந்தைப் பருவத்தில், குடும்பத்தின் ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் காரில் பள்ளிக்குச் செல்வதை அவர் சங்கடமாக உணர்ந்தார். அவரது பிடிவாத குணம், ஜே.ஆர்.டி மற்றும் அவரது தந்தை நவல் டாடாவிடம் இருந்து அவர் பெற்ற ஒரு குடும்பப் பண்பு என்று ரத்தன் டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

 

சுஹைல் சேத், "நீங்கள் ரத்தன் டாடாவின் தலையில் துப்பாக்கியை வைத்தாலும், 'என்னைச் சுடுங்கள், ஆனால் நான் என் பாதையைவிட்டு நகர மாட்டேன்' என்றுதான் அவர் சொல்வார்" என்று கூறுகிறார்.

 

ரத்தன் டாடாவின் நண்பரும், பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவருமான நுஸ்லி வாடியா கூறுகையில், "ரத்தன் டாடா என்பவர் மிகவும் சிக்கலான ஒரு கதாபாத்திரம். யாரும் அவரை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் மிகவும் ஆழமான எண்ணங்கள் கொண்ட மனிதர். நெருக்கமான நட்பு இருந்தாலும், தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருடனான உறவு இருக்கவில்லை. அவர் ஒரு தனிமை விரும்பி” என்று கூறுகிறார்.

 

'An Intimate History of the Parsis' என்ற தனது புத்தகத்தில் கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார், “தனது தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை, ரத்தன் என்னிடம் ஒப்புக்கொண்டார். ‘நான் தோழமைப் பண்பு இல்லாத ஒருவனாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் நான் ஒன்றும் யாருடனும் பழகாமல் விலகியிருப்பவனும் கிடையாது’ என்று அவர் என்னிடம் கூறுவார்.”

 

பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்ட ரத்தன் டாடா

 

“டாடா குழுமத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய காலங்களில், ரத்தன் டாடா தனது குடும்பப் பெயரை ஒரு சுமையாகவே கருதியதாக” ரத்தன் டாடாவின் பால்ய கால நண்பர் ஒருவர் நினைவுகூர்ந்தார். அமெரிக்காவில் படிக்கும்போது, அவரது குடும்பப் பின்னணி பற்றி அவரது வகுப்புத் தோழர்களுக்குத் தெரியாது என்பதால், அங்கு அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தார்.

 

கூமி கபூருக்கு ரத்தன் டாடா அளித்த பேட்டியில், "அந்த நாட்களில், வெளிநாட்டில் படிப்பவர்கள் மிகக் குறைந்த அளவிலான வெளிநாட்டுப் பணத்தைப் பயன்படுத்தவே ரிசர்வ் வங்கி அனுமதித்தது. என் தந்தை சட்டத்தை மீறுவதை ஆதரிக்கவில்லை, எனவே அவர் எனக்கு வேறு வழிகளில் அமெரிக்க டாலர்களை வழங்க விரும்பவில்லை. அதனால் மாத இறுதிக்குள் என் பணம் எல்லாம் காலியாகிவிடுவது வழக்கம். சில நேரங்களில் நான் என் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது. பல நேரங்களில், கூடுதல் பணம் சம்பாதிக்க நான் பாத்திரங்களைக் கழுவும் பணியைச் செய்தேன்" என்று தெரிவித்திருந்தார்.

 

ரத்தன் டாடாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றபோது அவருக்கு 10 வயதுதான். ரத்தனுக்கு 18 வயதாக இருந்தபோது, அவரது தந்தை சிமோன் டனோயர் என்ற சுவிட்சர்லாந்து பெண்ணை மணந்தார். மறுபுறம், அவரது தாயார் விவாகரத்துக்குப் பிறகு சர் ஜாம்செட்ஜி ஜீஜீபாய் என்பவரை மணந்தார். ரத்தனை அவரது பாட்டி லேடி நவாஜ்பாய் டாடாதான் வளர்த்தார்.\

 

 

ரத்தன் அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றார். அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நல்ல வேலை மற்றும் ஆடம்பரமான வீடு ஒன்று இருந்தது. ஆனால் அவர் தனது பாட்டி மற்றும் ஜே.ஆர்.டி.யின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.

 

இதனால், அவருடைய அமெரிக்க காதலியுடனான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாமல் போனது. அதற்குப் பிறகு ரத்தன் டாடா தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார்.

 

ஜாம்ஷெட்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக பணியில் சேர்ந்தவர்

 

கடந்த 1962ஆம் ஆண்டில், ரத்தன் டாடா ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். கிரிஷ் குபேர் பின்வருமாறு எழுதுகிறார், "ரத்தன் ஜாம்ஷெட்பூரில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு அவர் ஆரம்பத்தில் நீல நிற மேலாடை அணிந்து, ஒரு கடைநிலை தொழிலாளியாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார்."

 

"பயிற்சி முடிந்த பிறகு அவர் திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.நானாவதியின் சிறப்பு உதவியாளர் ஆனார். அவரது கடின உழைப்பின் புகழ் பம்பாய் வரை சென்றது, ஜே.ஆர்.டி. டாடா அவரை பம்பாய்க்கு அழைத்தார்."

 

இதற்குப் பிறகு, ரத்தன் டாடா ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டு பணியாற்றினார். நஷ்டத்தில் இயங்கும் சென்ட்ரல் இந்தியா மில் மற்றும் நெல்கோ நிறுவனங்களை மேம்படுத்தும் பொறுப்பை ஜே.ஆர்.டி., அவருக்கு வழங்கினார். ரத்தனின் தலைமையின்கீழ், மூன்று ஆண்டுகளுக்குள், நெல்கோ நிறுவனம் மாற்றமடைந்து, லாபம் ஈட்டத் தொடங்கியது.

 

ஜே.ஆர்.டி. 1981ஆம் ஆண்டில், ரத்தனை ‘டாடா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவராக்கினார். இந்த நிறுவனத்தின் டர்ன்-ஓவர் (turn over) 60 லட்சம் மட்டுமே என்றாலும், இந்தப் பொறுப்பு ரத்தன் டாடாவுக்கு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் அதற்கு முன்பு ஜே.ஆர்.டி டாடாவே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரடியாகக் கவனித்து வந்தார்.

 

எளிமையான வாழ்க்கை முறை

 

அன்றைய வணிக பத்திரிகையாளர்களும், ரத்தனின் நெருங்கிய நண்பர்களும், ‘அவரை நட்புணர்வு கொண்ட, எளிமையான, நாகரிகமான மற்றும் சுவாரஸ்யமான ஒரு மனிதராகவே’ நினைவு கூர்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அவரைச் சந்திக்கலாம், வழக்கமாக அவரே தொலைபேசியை எடுத்துப் பேசுவார் என்கிறார்கள்.

 

கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார்: "பெரும்பாலான இந்திய பில்லியனர்களுடன் ஒப்பிடும்போது ரத்தனின் வாழ்க்கை முறை மிகவும் கட்டுப்பாடாகவும் எளிமையாகவும் இருந்தது. அவரது வணிக ஆலோசகர்களில் ஒருவர், ‘ரத்தனின் பின்னால் உதவியாளர்களின் கூட்டம் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது’ என்று என்னிடம் கூறினார்.”

 

“ஒருமுறை நான் அவரது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன், ஒரு இளைஞர் வந்து கதவைத் திறந்தார். சீருடை அணிந்த சேவகர்களோ, ஆடம்பரங்களோ இல்லை. மும்பையின் கும்ப்லா ஹில்ஸில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆடம்பர மாளிகையான ஆன்டிலாவின் பளபளப்புக்கு நேர்மாறாக, அதே மும்பையின் கொலாபாவில் கடற்கரைக்கு அருகே இருக்கும் ரத்தனின் வீடு அவரது ரசனையைப் பிரதிபலிக்கிறது.”

 

ரத்தன் டாடாவை தனது வாரிசாக தேர்வு செய்த ஜே.ஆர்.டி

 

ஜே.ஆர்.டி 75 வயதை எட்டியபோது, அவரது வாரிசு யார் என்பது குறித்து நிறைய ஊகங்கள் இருந்தன. டாடாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் ஆசிரியர் ருஸ்ஸி எம் லாலா பின்வருமாறு எழுதுகிறார், "நானி பல்கிவாலா, ருஸ்ஸி மோதி, ஷாருக் சப்வாலா, எச்.என்.சேத்னா ஆகியோரில் ஒருவரைத்தான் ஜே.ஆர்.டி தனது வாரிசாகக் கருதினார். பல்கிவாலா மற்றும் ருஸ்ஸி மோதி, ஆகிய இருவர்தான் அந்தப் பதவிக்கான இரண்டு முக்கியப் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ரத்தன் டாடாவே நம்பினார்.”

 

ஜே.ஆர்.டி., 1991ஆம் ஆண்டில், தனது 86வது வயதில் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்தக் கட்டத்தில் அவர் ரத்தனை நோக்கித் திரும்பினார், தலைவர் பதவிக்குத் தகுதியான ‘டாடா’-வாக அவர் மட்டுமே எஞ்சியிருந்தார். ரத்தனுக்கு சாதகமான மிக முக்கியமான விஷயம் அவரது 'டாடா' என்ற குடும்பப் பெயர்தான் என ஜே.ஆர்.டி நம்பினார்.

 

டாடாவின் நண்பர் நுஸ்லி வாடியா மற்றும் அவரது உதவியாளர் ஷாருக் சப்வாலா ஆகியோரும் ரத்தனை தலைவராக்க ஆதரித்தனர். மார்ச் 25, 1991 அன்று டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் பொறுப்பேற்றபோது, தர்பாரி சேத், ருஸ்ஸி மோதி, அஜித் கெர்கர் ஆகிய மூன்று தலைவர்களை எவ்வாறு பலவீனப்படுத்துவது என்பதே அவருக்கு முன் இருந்த முதல் சவாலாக இருந்தது.

 

இந்த மூவரும் இதுவரை தலைமை அலுவலகத்தின் தலையீடு இல்லாமல் டாடா நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு டாடா நிறுவனத்திற்கும் ஒரு முகலாய சக்கரவர்த்தி இருப்பார் என்று ரத்தனின் தந்தையும் எச்சரித்திருந்தார்.

 

டெட்லி, கோரஸ் மற்றும் ஜாகுவார் கையகப்படுத்தல்

 

தொடக்கத்தில், ரத்தன் டாடாவின் வணிக மதிநுட்பம் குறித்துக் கேள்விகள் எழுந்தன. ஆனால் 2000ஆம் ஆண்டில், அவர் பிரிட்டனின் 'டெட்லி' (Tetley- தேயிலை பிராண்ட்) குழுமத்தை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது அவர்களின் சொந்த நிறுவனத்தைவிட இரண்டு மடங்கு பெரியது.

 

இன்று, டாடாவின் குளோபல் பிவரேஜஸ் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமாக உள்ளது. இதற்குப் பிறகு, அவர் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான 'கோரஸ்'-ஐ (Corus) வாங்கினார். விமர்சகர்கள் இந்த ஒப்பந்தத்தின் திறனை கேள்விக்கு உள்ளாக்கினர். ஆனால் ஒரு வகையில், இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் தனது திறனையும் வணிக வலிமையையும் டாடா குழுமம் நிரூபித்தது.

 

கடந்த 2009 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ரூ.1 லட்சம் விலையில் கிடைக்கும் மக்களுக்கான காராக 'நானோ'வை அவர் அறிமுகப்படுத்தினார். நானோ காருக்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் 1998ஆம் ஆண்டில் சந்தையில் 'இண்டிகா' காரை அறிமுகப்படுத்தியது. இதுவே இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் கார்.

 

தொடக்கத்தில் இந்த கார் தோல்வியுற்றது. இதனால் ரத்தன் டாடா அதை ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்திற்கு (Ford Motor Company) விற்க முடிவு செய்தார். இதற்காக அவர் டெட்ராய்ட் சென்றபோது, பில் ஃபோர்ட் அவரிடம், ‘ஏன் இந்தத் துறையைப் பற்றிப் போதுமான அறிவு இல்லாமல் இந்தத் தொழிலில் நுழைந்தீர்கள்’ என்று கேட்டார். மேலும், 'இண்டிகாவை' வாங்குவது, இந்தியாவின் டாடா நிறுவனத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் ரத்தன் டாடாவை கிண்டல் செய்தார்.

 

இதனால் கோபமடைந்த ரத்தன் டாடா குழுவினர் பேச்சுவார்த்தையை முடிக்காமல் திரும்பிவிட்டனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது. 2008இல், ஃபோர்டு நிறுவனம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் சிக்கி, பிரிட்டிஷ் சொகுசு கார் பிராண்ட்களான 'ஜாகுவார்' மற்றும் 'லேண்ட் ரோவர்' ஆகியவற்றை விற்க முடிவு செய்தது.

 

அதுகுறித்து கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார், "அப்போது பில் ஃபோர்டு, ‘தனது சொகுசு கார் நிறுவனத்தை வாங்குவதன் மூலம், ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்திய நிறுவனமான டாடா ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்கிறது’ என்று ஒப்புக்கொண்டார். ரத்தன் டாடா இரண்டு பிரபலமான பிராண்டுகளை 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார்."

 

ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியதாக டாடா மீது எழுந்த விமர்சனங்கள்

 

சில வணிக ஆய்வாளர்கள் ரத்தன் டாடாவின் இத்தகைய பெரிய கையகப்படுத்தல்களைக் கேள்விக்கு உள்ளாக்கினர். 'டாடா ஸ்டீல் ஐரோப்பாவை’ வாங்கியது மிகப்பெரிய சுமை என நிரூபணமானது, அது டாடா குழுவை பெரும் கடனில் மூழ்கடித்தது.

 

டி.என்.நினன் பின்வருமாறு விவரிக்கிறார், "ரத்தனின் சர்வதேச பந்தயங்கள், அவரது ஆணவம் மற்றும் கெட்ட நேரத்தின் கலவை."

 

ஒரு நிதி ஆய்வாளர், "கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய வணிகத்தில் மிகப்பெரிய வாய்ப்பு தொலைத்தொடர்புகளில் இருந்தது, ஆனால் ரத்தன் தொடக்கத்தில் அந்தத் துறையை தவறவிட்டுவிட்டார்" என்கிறார்.

 

பிரபல பத்திரிகையாளர் சுசேதா தலால் கூறுகையில், "ரத்தன் தவறுக்கு மேல் தவறு செய்தார். 'ஜாகுவாரை' வாங்கியதன் மூலம் அவரது குழு நிதிச் சுமையின் கீழ் புதைந்தது’ என்கிறார்.

 

ஆனால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ், டிசிஎஸ் (TCS) எப்போதும் டாடா குழுமத்தை முன்னிலையில் வைத்திருந்தது. இந்த நிறுவனம் 2015ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் நிகர லாபத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியது. 2016ஆம் ஆண்டில், எந்தவொரு இந்திய நிறுவனத்தையும்விட (அம்பானியின் 'ரிலையன்ஸ்' நிறுவனத்தை விடவும்) டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய சந்தை மூலதனமயமாக்கலைக் (capitalization) கொண்டிருந்தது.

 

நீரா ராடியா, தனிஷ்க், சைரஸ் மிஸ்திரி தொடர்பான சர்ச்சைகள்

 

கடந்த 2010ஆம் ஆண்டில், ரத்தன் டாடா மற்றும் தரகர் நீரா ராடியா இடையிலான தொலைபேசி உரையாடல் கசிந்தபோது, அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அக்டோபர் 2020இல், டாடா குழுமத்தின் நகை பிராண்டான 'தனிஷ்க்' (Tanishq) ஒரு விளம்பரத்தை அவசரமாக திரும்பப் பெற்றதும் ரத்தன் டாடாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments