Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சங்க பிரச்னையில் என்ன நடக்கிறது? ஒரு மாத போராட்டத்தின் முழு பின்னணி

Advertiesment
samsung protest

Prasanth Karthick

, புதன், 9 அக்டோபர் 2024 (14:28 IST)

சாம்சங் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (அக்டோபர் 9) கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

விடியவிடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் கூறுகிறது.

 

"தொழிலாளர்களின் பக்கமே அரசு நிற்கிறது. அவர்களை அச்சுறுத்தவில்லை" என்கிறார் அமைச்சர் சி.வி.கணேசன்.

 

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் கூறிய நிலையில், ஊழியர்கள் கைது செய்யப்பட்டது ஏன்? போராட்டம் நடைபெற்ற இடத்தில் என்ன நடந்தது?

 

‘தொழிற்சங்கம் தொடங்க அனுமதி மறுப்பு’

 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 1800-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

 

வீட்டு உபயோக பொருட்களைத் தயாரிக்கும் இந்த ஆலையில் கடந்த ஜூலை மாதம் சி.ஐ.டி.யு சார்பில் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் அனுமதி கேட்டனர். ஆனால், சாம்சங் நிர்வாகம் மறுத்துவிட்டது.

 

இதையடுத்து, தொழிற்சங்கத்துக்கு அனுமதி, சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா நிறுவனத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

 

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம், 30 நாட்களைக் கடந்துவிட்டது. இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

 

'சங்கம் அமைப்பதைத் தவிர மற்ற கோரிக்கைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம்' என சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. இதனை தொழிலாளர்கள் தரப்பு ஏற்கவில்லை.

 

ஊழியர்களின் போராட்டத்துக்கு எதிராக காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் சாம்சங் இந்தியா நிறுவனம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேநேரத்தில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

 

தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நான்கு முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

 

தொழிலாளர்களின் போராட்டம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சாம்சங் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர், "ஊழியர்களின் நலனே எங்களுக்குப் பிரதானமாக உள்ளது. இந்தியாவின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம்" என்று கூறினார்.

 

ஊதியம், சலுகைகள், பணிச்சூழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

 

ஆனால், சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் அமைக்கப்படுவதை அந்நிறுவனம் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊழியர்கள் பேரணி நடத்தினர். இதில், 900க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

 

இதன் பிறகு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கடந்த திங்கள்கிழமையன்று தலைமைச் செயலகத்தில் சாம்சங் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

இதில் இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர்கள் அறிவித்தனர். ஆனால், சி.ஐ.டி.யு அமைப்பு அதனை மறுத்தது.

 

போலீஸ் மூலம் அச்சுறுத்தல் என தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

 

webdunia
 

அமைச்சர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் போராட்டத்தை போலீஸ் மூலம் முடிவுக்கு கொண்டு வரும் வேலையில் அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார். (சுங்குவார்சத்திரம் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடங்கியுள்ள இந்த தொழிற்சங்கத்தை சாம்சங் இந்தியா நிர்வாகம் ஏற்று அங்கீகரிக்க மறுப்பதே தற்போதைய போராட்டம் முற்றுப் பெறாமல் நீடிக்க காரணம்)

 

நேற்று (செவ்வாய்) நள்ளிரவு முதல் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களைக் கைது செய்யும் வேலையில் சுங்குவார்சத்திரம் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

நேற்று (08.10.2024) காலை போராட்ட பந்தலுக்கு சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த தொழிலாளர்களின் வாகனம், சாம்சங் ஆலை அருகே கவிழ்ந்தது. அதில் காயம் அடைந்த 12 பேரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

"அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் என்பரை தாக்கியதாக தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், என்னுடைய பெயர் முதல் நபராக உள்ளது. நான் அந்த இடத்திலேயே இல்லை" என்கிறார் முத்துக்குமார்.

 

இந்த சம்பவத்தில் எஸ்.ஐ மணிகண்டனை தாக்கியதாக ராஜாபூபதி, மணிகண்டன், பிரகாஷ் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

இதன்பிறகு நேற்று இரவு (8ஆம் தேதி) 10 தொழிலாளர்களை வீடுகளுக்கே சென்று போலீஸ் கைது செய்ததாக கூறும் முத்துக்குமார், "போராட்ட பந்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் பிரித்துவிட்டனர். தற்போது போராட்டத்துக்கு வரும் ஊழியர்களை வழிமறித்து போலீஸ் கைது செய்கிறது" என்கிறார்.

 

போராட்டம் நடைபெறும் இடம் அரசுக்கு சொந்தமான நிலம் என்றும் அங்கு அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாகவும் ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

புதன்கிழமையன்று போலீஸாரின் கைது நடவடிக்கையால் இரண்டு ஊழியர்கள் மயக்கமடைந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை அனுப்பி வைத்துள்ளனர்.

 

தற்போது போராட்டம் நடைபெற்று வந்த எச்சூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

காவல்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து, காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகத்திடம் பேசினோம். "சாம்சங் நிறுவன பிரச்னை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி-யிடம் பேசுங்கள்" என்றார்.

 

ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி உதயகுமாரை பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை. இதையடுத்து, சுங்குவார்சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்திடம் பேசினோம். "கூட்டத்தில் இருப்பதால் இப்போது பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.

 

சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவா? தமிழ்நாடு அரசு பதில்
 

சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவான தமிழக அரசின் செயல்பாடு என்பது, ஒட்டுமொத்த தொழிற்சங்க சட்டங்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளதாகவும் சாம்சங் இந்தியா தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார் குற்றம்சாட்டினார்.

 

webdunia
 

ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இதனை மறுத்தார். "தொழிலாளர்களுக்கு எந்த வடிவிலும் அச்சுறுத்தல் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு வரக் கூடாது என்பதையே முதலமைச்சரும் விரும்புகிறார். தொழிலாளர்களின் பக்கம் மட்டுமே நாங்கள் நிற்கிறோம்" என்று அவர் கூறினார்.

 

தலைமை செயலகத்தில் என்ன நடந்தது?

 

சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் குழு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார்.

 

கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 7) தலைமைச் செயலகத்தில் இரு தரப்பையும் அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட 14 கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்பதாக கூறியதால், சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

 

கோரிக்கைகள் என்ன?

  • தொழிலாளர்களுக்கு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5000 உயர்த்தி வழங்க வேண்டும்
  • 5 வழித்தடங்களில் மட்டுமே உள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி, 108 வழித்தடங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்
  • பணியின் போது இறந்தால் உடனடியாக ரூ.1 லட்சம்
  • தரமான உணவு மற்றும் உணவுப்படி உயர்வு
  • திருமணத்திற்கு மூன்று நாள் விடுப்பு; குழந்தை பிறந்தால் 5 நாள் விடுப்பு

இந்த மாதத்தில் இருந்தே ஊழியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தை உயர்த்தி தருவதாக சாம்சங் இந்தியா உறுதியளித்துள்ளதாக கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "ஒரு தரப்பினர் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் வேலைக்குச் செல்ல வேண்டும். இந்தப் போராட்டத்தால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. ஒப்பந்தத்தை ஏற்பதாக தொழிற்சாலையில் உள்ள சங்கத்தினர் கூறியுள்ளனர்" என்றார்.

 

"சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பிலும் சில குறைபாடுகளை தெரிவித்தனர். சில கோரிக்கைகளை ஏற்பதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் மறுத்தது" என்றும் அவர் கூறினார்.

 

சி.ஐ.டி.யு தரப்போ, அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

‘ஒப்பந்தமே ஒரு நாடகம்’

 

"தொழிற்சாலையில் உள்ள சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக அமைச்சர் கூறுகிறார். இவர்கள் கூறுவது நிறுவனத்தின் ஆதரவில் இயங்கும் பணியாளர் குழுவைத் தான். இந்த ஒப்பந்தமே ஒரு நாடகம்" என்கிறார் சி.ஐ.டி.யு மாநில தலைவரும் சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் கௌரவ தலைவருமான அ.சவுந்தரராஜன்.

 

"நிறுவனத்துக்குள் 'சங்கமே வரக் கூடாது' என சாம்சங் கூறுகிறது. பணியாளர் கமிட்டியை மட்டும் சங்கம் என அமைச்சரே கூறுவது சரியா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். போராட்டம் நடத்துகிறவர்களுக்கும் இந்த ஒப்பந்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார்.

 

தலைமைச் செயலகத்தில் 7ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், சி.ஐ.டி.யு தரப்பிடம் பேசிய பின்னர், மீண்டும் அழைப்பதாக கூறிய அமைச்சர்கள், போலியான ஓர் ஒப்பந்தத்தைக் காட்டி தொழிலாளர்களை ஏமாற்றுவதாக கூறுகிறார் அ.சவுந்தரராஜன்.

 

சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழக அரசு வெளிப்படையாக செயல்படுவதாக குற்றம் சாட்டும் அ.சவுந்தரராஜன், "சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தை அரசு பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. அதை ஏற்பதற்கு சாம்சங் மறுக்கிறது. அதையே அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றனர்" என்கிறார்.

 

‘நாடகம் நடத்தப்பட்டதா?’- அமைச்சர் சி.வி.கணேசன் பதில்

 

"அமைச்சர்கள் நாடகம் நடத்தியதாக சி.ஐ.டி.யு கூறுகிறதே?" என தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேள்வி எழுப்பினோம்.

 

"அவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது. சி.ஐ.டி.யு-வின் நோக்கத்தை நாங்கள் குறை கூறவில்லை. சங்கம் அமைப்பது தொடர்பான அவர்களின் விருப்பத்தைக் கூறியுள்ளனர். சாம்சங் இந்தியா பிரச்னை தொடர்பாக, இதுவரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏழு முறையும் என் தலைமையில் நான்கு முறையும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை" என்கிறார்.

 

திங்கள்கிழமையன்று நடந்த பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய சி.வி.கணேசன், "தலைமைச் செயலகத்தில் 11 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். சி.ஐ.டி.யு உடன் பேசுவதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் மறுக்கிறது. சங்கத்தைப் பதிவு செய்யக் கோருவது நியாயமானது. அதற்கு மறுப்பு சொல்ல முடியாது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுவோம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊடக பேட்டியின்போது சீயர்ஸ் சொல்லி பீர் குடித்த கமலா ஹாரீஸ்.. வீடியோ வைரல்..!