Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்ட சம்பவம்: 'வேண்டுமென்றே செய்யப்பட்ட இழிவு' - செளதி குற்றச்சாட்டு!

Advertiesment
ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்ட சம்பவம்: 'வேண்டுமென்றே செய்யப்பட்ட இழிவு' - செளதி குற்றச்சாட்டு!
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:36 IST)
ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்ட சம்பவங்களுக்கு செளதி அரேபியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து செளதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 
செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், "முஸ்லிம்களையும் குரானையும் இழிவு படுத்தும் வகையில் வேண்டுமென்றே செய்யப்பட்ட இச்செயல்களுக்கு செளதி அரேபியாவின் கண்டனத்தை வெளியுறவுத் துறை பதிவு செய்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
webdunia
மேலும், "செளதி அரேபியா உரையாடல், சகிப்புத்தன்மை, சகவாழ்வு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அத்துடன், வெறுப்பு, தீவிரவாதம் மற்றும் அனைத்து மதங்கள் மற்றும் புனித தலங்களை அவமதிப்பதையும் எதிர்க்கிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
நடந்தது என்ன?
 
ஸ்வீடனில் தீவிர வலதுசாரி மற்றும் அகதிகள் எதிர்ப்பு குழுக்களால் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான்காவது நாளாகப் பல நகரங்களில் மோதல்கள் வெடித்துள்ளன.
 
ஞாயிற்றுக்கிழமை கிழக்கு நகரமான நார்ஷாபிங்கில் தொடர்ச்சியான கலவரங்கள் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன, இதில் கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
 
குறைந்தது 17 பேர் கைது செய்யப்பட்ட அதேவேளையில் பல வாகனங்கள் எரிக்கப்பட்டன.
 
சனிக்கிழமையன்று, தெற்கு நகரமான மால்மாவில் தீவிர வலதுசாரி பேரணியின் போது ஒரு பேருந்து உட்பட பல வாகனங்கள் வன்முறையில் எரிக்கப்பட்டன.
 
முன்னதாக, ஈரான் மற்றும் ஈராக் அரசாங்கங்கள், குரான் எரிப்புக்குப் பிந்தைய ஆர்ப்பாட்டம் தொடர்பாக அங்கிருந்த தூதரக அதிகாரிகளை அழைத்திருந்தன.
 
குரான் எரிப்பைத் தொடர்ந்த போராட்டம்
ஹார்ட் லைன் இயக்கத்தின் தலைவரும் டேனிஷ்-ஸ்வீடன் அரசியல்வாதியும் வழக்கறிஞருமான ரஸ்மஸ் பலுடன், "இஸ்லாத்தின் புனித நூலைத் தாம் எரித்ததாகவும் அதை மீண்டும் செய்யப்போவதாகவும்" கூறியுள்ளார்.
 
வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தீவிர வலதுசாரிக் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளில் மோதல்கள் வெடித்தன, இதில் காவல்துறையை சேர்ந்த 16 அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் காவல்துறையினரின் வாகனங்களும் சேமடைந்தன.
webdunia
இந்தச் சம்பவங்கள் ஸ்டாக்ஹோமின் புறநகர் பகுதிகளிலும், லின்ஷேப்பிங் மற்றும் நோரேஷேபிங் போன்ற நகரங்களிலும் நடந்துள்ளன.
 
ஞாயிற்றுக்கிழமை, நோரேஷேப்பிங்கில் மற்றொரு பேரணி பற்றியும் பலுடன் எச்சரித்ததாக டாய்ச்சே வெய்லெ இதழ் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, மக்கள் அதற்கு எதிராகவும் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, எச்சரிக்கைக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் மூன்று பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.
 
'முன்னெப்போதுமில்லாத கலவரம்'
ஸ்வீடனின் தேசிய காவல்துறைத் தலைவர் அன்டாஷ் டன்பெரி சனிக்கிழமை ஒரு அறிக்கையில், போராட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரிகளின் உயிரைத் துச்சமென மதித்ததாகக் கூறினார்.
 
"நாங்கள் இதற்கு முன்பு வன்முறைக் கலவரங்களைப் பார்த்திருக்கிறோம், ஆனால் இது முற்றிலும் வேறுபட்டது" என்று அவர் கூறினார்.
 
குரானை எரிக்கும் ஹார்ட் லைன் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக சுவீடனில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் சில நேரங்களில் வன்முறையாக மாறியதுண்டு. 2020 ஆம் ஆண்டில், எதிர்ப்பாளர்கள் கார்களை எரித்து மால்மாவில் பல கடைகளையும் சேதப்படுத்தினர்.
 
டென்மார்க்கில் இனவெறி உட்பட பல குற்றங்களுக்காக 2020 இல் பலுடன் ஒரு மாதம் சிறையிலும் அடைக்கப்பட்டார். பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்று, குரானை எரிக்க முயன்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 1,247 பேருக்கு கொரோனா பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!