Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதை பொருளாக மாற்றப்படும் மயக்க மருந்துகள், ஊசிகள்: எப்படி நடக்கிறது?

பள்ளி வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 மாத்திரைகள்
, ஞாயிறு, 22 ஜனவரி 2023 (15:25 IST)
கோவை மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மற்றும் போதை ஏற்படுத்தியக்கூடிய மாத்திரைகள், ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ளனர்

கடந்த 18ஆம் தேதியன்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு சோதனையை மேற்கொண்டனர். 

அப்போது மத்தம்பாளையம் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கோவர்தனன், பிட்டு பிரவீன் (எ) பிரவீன்குமார், நவீன்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா, 208 போதை ஏற்படுத்தக்கூடிய tapentadol மாத்திரைகள், 4 சிரஞ்சுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் இவர்கள் மாத்திரைகளை டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் Winergy என்கிற மருந்து நிறுவனத்திடமிருந்து இணைய வழியாக வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் மதுக்கரையில் இளைஞர் ஒருவர் ஊசி வழியாக போதை மருந்து செலுத்த முயன்று உயிரிழந்தார். 

அப்போதுதான் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாகப் பயன்படுத்துவது தெரிய வந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த காவல் நிலையத்தில் ஆறு வழக்குகள் இதுபோல பதிவு செய்யப்பட்டுள்ளன," எனக் கூறினார்.

மாத்திரைகள் தடை செய்யப்பட்டவையா?

மேலும், இந்த மாத்திரைகள் தடை செய்யப்பட்டவையா எனக் கேட்டபோது இல்லை எனக் கூறுகிறார் தாமோதரன். ஆனால், "தமிழ்நாட்டில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இவற்றை எங்கும் வாங்க முடியாது. அதனால் இவர்கள் இணைய வழியாக வாங்குகிறார்கள்," எனக் கூறினார்.

"வலி நிவாரணி மாத்திரைகளை உடைத்து அவற்றை வேறு சில பொருள்களுடன் கலந்து கரைத்து சிரிஞ்சில் ஏற்றி ஊசி மூலமாக ஏற்றிக் கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான வழக்கமாக உருவெடுத்து வருகிறது. போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் எங்கிருந்து, யாருக்கு விற்க வாங்கினார்கள் என்பதைத் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். Tapentadol என்பது நிறுவனத்தின் பெயர், tidol என்பது மருந்தின் பெயர். அதை எக்ஸ் அட்டவணை மருந்துகள் பட்டியலில் சேர்க்கும் பணியை மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாத்திரைகளை இணையத்திலும் பரிந்துரை சீட்டு இல்லாமல் எளிதில் வாங்கிவிட முடியாது,” என்றார்.

மனநல, தூக்க மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துகிறார்களா?

மருந்துகள் மீதான கட்டுப்பாடுகள் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சென்னை மனநல மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசியபோது, “Tapentadol மாத்திரை வலி நிவாரணி மாத்திரையாகப் பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் போதை உணர்வு ஏற்படுவது உண்மைதான். அதனால் போதை மாத்திரை அளவுக்கு தாக்கம் இருக்கும் என இதை முத்திரை குத்திவிட முடியாது.
 

webdunia


மன நல சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் மயக்க தன்மை கொண்டவை தான். அதனாலேயே பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டும்தான் மனநல சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

அப்போதும் பலருக்கும் அவை எளிதாக மருந்தகங்களில் கிடைப்பதில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் மருத்துவரே நேரடியாக மருந்தகங்களிடம் பேச வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுப்பாடுகள் விதிப்பது நியாயமான தேவைகளுக்காக மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும்.

மருந்துகளின் தன்மைக்கு ஏற்ப பல அட்டவணைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எச் அட்டவணையில் உள்ள மருந்துகளை வாங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

எக்ஸ் அட்டவணையில் சேர்த்தால் மருந்து வாங்குபவரின் தகவல்கள் பரிந்துரை சீட்டு ஆகியவற்றைப் பெற்ற பிறகுதான் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இணைய வழியில் வாங்குகிறார்கள் என்றால் போலி பரிந்துரை சீட்டு வைத்து வாங்கினார்களா அல்லது பரிந்துரை சீட்டு இல்லாமலே வாங்கினார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் மருந்தகங்கள் மூலம் மட்டுமே இவை சந்தைக்கு வருவதில்லை. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து மருந்தகங்களுக்கே வராமல் நேரடியாக சந்தைக்கும் வருகின்றன.

அதைத் தடுப்பதும், கண்காணிப்பதும் அவசியமாகிறது. சில்லறை விற்பனையை மட்டுமே கவனம் செலுத்தி கட்டுப்படுத்துவதால் முழுமையான பலனை அடைய முடியாது,” என்றார்.

மன நல சிகிச்சைக்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சென்னையைச் சேர்ந்த சினேகா ஊடகத் துறையில் பணி புரிந்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மன நலம் சார்ந்த மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். மருத்துவரின் பரிந்துரை சீட்டில் உள்ள தேவையான ஒரு மருந்தை மட்டும் கேட்டால் பெரும்பாலான நேரங்களில் மருந்தகங்களை நடத்துபவர்கள் கொடுப்பதில்லை. இவை பெரும்பாலும் தூக்க மாத்திரைகளாகத்தான் இருக்கும்.
webdunia

ஆனாலும் அதை மட்டும் தனியாக வழங்க முடியாது எனக் கூறுவார்கள். கையிருப்பில் இல்லை எனப் பல காரணம் கூறுவார்கள். சென்னையில் கூட பெரும்பாலான இடங்களில் தேவைப்படுகின்றபோது உரிய மருந்து கிடைக்காமல் தவித்திருக்கிறேன். அதிகாரிகளின் நோக்கம் புரிகிறது. ஆனால் அவசரத் தேவைக்காக வாங்குபவர்களுக்கு இந்த மருந்துகள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார். 

ஷுப்ரா, சென்னையில் புகைப்படக் கலைஞராக உள்ளவர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மருந்தகங்களை நடத்துபவர்களுக்கு வலி நிவாரணி, மன நல மருந்துகள் தொடர்பாக சரியான புரிதல் இருப்பதில்லை. பரிந்துரை சீட்டு இருந்தாலும் மருந்து வாங்குவது மிகவும் கடினமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சில மருந்தகங்களைத் தவிர எல்லா இடங்களிலும் இந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளேன். 

இதில் இணைய வழியாக மருத்துவ கலந்தாய்வு பெறுபவர்களின் நிலை மேலும் கடினம். டிஜிட்டல் பரிந்துரை சீட்டு கொண்டு போனால் மருந்தகங்களில் கண்டுகொள்ளக்கூட மாட்டார்கள். கொரோனாவுக்கு பிறகான காலகட்டத்தில் இணைய வழி கலந்தாய்வுகள் அதிகரித்துள்ளன. அது பலருக்கும் சௌவுகரியமாகவும் உள்ளது. என் தோழி ஒருவர் இதனால் கடும் சிரமங்களை எதிர்கொண்டார்.

ஏதோ தடை செய்யப்பட்ட மருந்துகளை வாங்குவதைப் போல பார்ப்பார்கள். என்னைப் போல மன நல சிகிச்சை எடுத்து வரும் பலரும் உரிய நேரத்தில் மருந்துகள் கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கிறோம். எந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மருந்துகள் கிடைக்கும் நிலையை மேலும் மோசமாக்கிவிடக் கூடாது,” என்றார்.

இது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் விஜயலஷ்மி, “போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் சட்டவிரோதமாக மருந்து விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மருந்தகங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. முறையான பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகள் வழங்க வேண்டும் என அனைத்து மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

சிலர் இவற்றை இணையத்தில் வாங்குவது தெரிய வந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். தற்போது எச் அட்டவணையில் உள்ள tapentadol போன்ற போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை எக்ஸ் அட்டவணையில் சேர்ப்பதற்கான பரிந்துரையை மாநில அரசுக்குக் கொடுத்துவிட்டோம். மாநில அரசு மூலம் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு அதற்குத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் குறிப்பிட்ட சில மருந்தகங்களில் மட்டுமே அவற்றைப் பெற முடியும்.

அது தவிர அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் எந்தத் தட்டுப்பாடும் சிக்கல்களும் இல்லை. உரிய பரிந்துரைச் சீட்டு இருந்தால் நிச்சயம் அனைவருக்கும் கிடைக்கும். மருந்துகளின் கையிருப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பற்றாக்குறை ஏற்பட்டால் உற்பத்தியாளர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே இடமிருக்காது. உரிய பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மருந்துகள் வழங்க வேண்டும் என்பதையும் மருந்தகங்களுக்குத் தெரிவித்துள்ளோம்,” என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் அந்த ஷாரூக்கான்? கேள்வி கேட்ட முதல்வர்! – இரவில் போன் செய்த ஷாருக்கான்!