Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனித இனத்தின் மூதாதை உயிரினம் மீதான மர்மம் விலகியது: மலப்புழை இல்லாத உயிரினத்தின் வரலாறு என்ன?

Advertiesment
BBC
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (12:26 IST)
500 மில்லியன் ஆண்டுகள் பழைமையான நுண்ணிய, உடலில் முட்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட, ஆசனவாய் இல்லாத, வாய் மட்டுமே கொண்ட உயிரினம், பரிணாமத்தின் மர்மத்தை உடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2017இல் கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்த சாக்குப்பை போன்ற கடல் உயிரினத்தின் புதைபடிவம், மனித இனத்தின் ஆரம்பக்கால மூதாதையராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பழங்கால உயிரினமான சாக்கோரிடஸ் கோரொனேரியஸ், தற்காலிகமாக டியூட்டோரோஸ்டோம்கள் எனப்படும் குழுவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இவை தான் மனிதர்கள் உட்பட முதுகெலும்பு உயிரினங்களின் பழைமையான மூதாதைகள்.

இப்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வு, சாக்கோரிடஸ் முற்றிலும் வேறுபட்ட உயிரினக் குழுவில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

சீனா மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் குழு, இந்த உயிரினத்தின் மிக விரிவான எக்ஸ்ரே பகுப்பாய்வை மேற்கொண்டது. மேலும், இது சிலந்திகள், பூச்சிகளின் மூதாதைகளான எக்டிசோஸோவான்ஸ் என்ற குழுவைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்தப் பரிணாம குழப்பம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த ஓர் அம்சம், இந்த உயிரினத்திற்கு ஆசனவாய் இல்லாதது.

சாக்கோரொடஸ் பற்றி விரிவாக ஆய்வு செய்த ஆய்வாளர் எமிலி கார்லைல், பிபிசி ரேடியோ 4-இன் இன்சைட் சயின்ஸுக்கு விளக்கியபோது, "இது சற்று குழப்பமாக உள்ளது. பெரும்பாலான எக்டிசோஸோவான்ஸ் உயிரினங்களுக்கு ஆசனவாய் உள்ளது. ஆனால், இதில் ஏன் இல்லை?" என்றார்.

மேலும், அதற்கு "சுவாரஸ்யமான ஒரு காரணம்" இருக்கலாம் என்றவர், "இந்த முழு குழுவுக்குமான மூதாதைக்கு ஆசனவாய் இல்லை என்பதும் அதற்குப் பிறகு தான் சாக்கோரிட்டஸ் உருவானது என்பதும் அந்தக் காரணமாக இருக்கலாம் என்றார்.

"இந்த உயிரினம், அதன் சொந்த பரிணாம வளர்ச்சியின்போது ஆசனவாயை இழந்திருக்கலாம். ஒருவேளை அதற்கு ஆசனவாய் தேவையில்லாமல் இருக்கலாம், அது எல்லாவற்றுக்கும் ஒரு துவாரமே போதுமானதாக இருக்கலாம்," என்கிறார் எமிலி கார்லைல்.

ஆரம்பகட்டப் பரிசோதனையில், சாக்கோரிட்டஸின் வாயைச் சுற்றியுள்ள துளைகள் செவுள்களுக்கான துளைகள் என விளக்கப்பட்டது. இது, டியூட்டோரோஸ்டோம்களின் பழைமையான அம்சம்.

ஒரு மிமீ அளவே இருந்த அந்த உயிரினத்தை, விஞ்ஞானிகள் இன்னும் நெருக்கமாக, சக்திவாய்ந்த எக்ஸ்ரே கதிர்களைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது, அந்தத் துளைகள் உண்மையில் முறிந்த முட்களின் அடிப்பகுதி என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

கேம்ப்ரியன் காலகட்ட உயிரின வகைப்பாடுகளில், சாக்கோரிட்டஸை "மறுவகைப்படுத்தியதற்கு" இதுவே முக்கியக் காரணம்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்லைல், "சாக்கோரிட்டஸ் பெருங்கடல்களில் வாழ்ந்திருக்க வேண்டும். அதன் முள் போன்ற அமைப்புகள் வண்டலில் அது பதிந்து நிலைத்திருக்க உதவியிருக்கும்," என்று விளக்கினார்.

"இன்றும் வாழக்கூடிய சில உயிரினங்களைப் போல தோற்றமளிக்கும், ஆனால் முற்றிலும் அந்நியமாகத் தோன்றிய பல உயிரினங்களைக் கொண்ட மிகவும் விசித்திரமான சூழலியலில், இது ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது என்று நாங்கள் நினைக்கிறோம்."

இந்த கேம்ப்ரியன் காலகட்ட படிமங்களைக் கொண்டிருந்த பாறைகள் இன்னும் ஆய்வு செய்யப்படுகின்றன.

"அதன் சுழலைப் பற்றி நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள முடியும்," என்று கார்லைல் கூறினார்.

மேலும், "நான் பழங்காலவியலை எவ்வளவு அதிகமாகப் படிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இன்னும் எவ்வளவு விஷயங்களைத் தவறவிடுகிறோம் என்பதை உணர்கிறேன். இந்த உயிரினத்தைப் பொறுத்தவரை, இது வாழ்ந்த உலகத்தின் மேற்பகுதியை மட்டுமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்," என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் பாச்ச பலிக்காது; அதிமுகவில் ஒற்றை தலைமையே !