Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"என் அப்பா எனக்கு செய்த கொடுமை" - மனம் திறந்த குஷ்பு

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (07:51 IST)
"சிறு வயதில் எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பெரும் பாரத்தை கீழே இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்திருக்கிறது" என்கிறார் குஷ்பு.
 
தன்னுடைய எட்டு வயதில் தனது சொந்த தந்தையால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும், ஆனால் அந்த வயதில் அவருக்கு எதிராக அப்போது தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும், சமீபத்தில் தான் பங்குபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு.
 
கடந்த 12 ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் குஷ்பு,சென்றாண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் அவர் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
இந்த நிலையில்,மூத்த ஊடகவியலாளர் பர்கா தத் நடத்திய 'We the women' என்னும் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்று பேசிய குஷ்பு, 'சிறுவயதிலேயே தன்னுடைய சொந்த தந்தையால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்' குறித்து பேசியிருந்தார்.
 
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், " ஆணோ, பெண்ணோ ஒருவர் தான் குழந்தையாக இருக்கும்போது எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தலானது அவர்களது வாழ்க்கை முழுவதும் ஆறாத வடுவாய் தொடரும். நான் என்னுடைய எட்டு வயதில் சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அதை வெளியேக் கூறினால் என்னுடைய அம்மாவையும்,சகோதரர்களையும் அடித்து துன்புறுத்துவேன் என்று அவர் என்னை மிரட்டினார். அதனால் அப்போது அதுகுறித்து என்னால் வெளியே பேச முடியவில்லை.
 
அதேபோல் தனது மனைவியையும், குழந்தைகளையும் அடிப்பதை தன்னுடைய உரிமையாக அவர் கருதினார். தன்னுடைய சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும் அவர் தன்னுடைய பிறவி உரிமையாக கருதினார். எனது அம்மாவுக்கு அமைந்தது மிகவும் மோசமான திருமண வாழ்கை.
எட்டு வயதில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக என்னால் பதினைந்து வயதில்தான் குரல் கொடுக்க முடிந்தது. அதற்கான தைரியம் எனக்கு அப்போதுதான் வந்தது. அம்மாவிடம் இதுகுறித்துக் கூறினால் அவர் அதை முதலில் நம்புவாரா என்ற தயக்கம் இருந்தது. ஏனெனில் அவர் கணவனின் மேல் பற்றுக் கொண்ட ஒரு மனைவியாக இருந்தார். ஆனால் இதற்கு மேல் இதை தாங்கிக் கொள்ள முடியாது என்று, எனது தந்தையை எதிர்த்து பேச துவங்கினேன். ஒரு சிறுமியாக என் மீது நான் கொண்ட தன்னம்பிக்கையின் பொருட்டு, தைரியத்தை வர வைத்து கொண்டு என்னுடைய பதினைந்து வயதில் அவரை எதிர்த்தேன். ஒரு பெண்ணாக வீட்டிலிருக்கும் ஒரு ஆணை எதிர்க்கும் துணிவு வந்துவிட்டால் இந்த உலகத்திலும் நம்மால் எதையும் எளிதாக எதிர்கொள்ள முடியும் " என்று கூறியிருந்தார்.
குழந்தை பருவத்தில் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்து, குஷ்பு தற்போது வெளிப்படையாக பேசியிருப்பது, நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது
 
குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகள் குறித்தும், பர்கா தத் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துக் கொண்ட விஷயங்கள் குறித்தும் பேசுவதற்காக, பிபிசி தமிழ் குஷ்புவை தொடர்பு கொண்டது.
 
பிபிசியிடம் பேசிய அவர், "சிறு வயதில் எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தற்போது வெளியே பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பெரும் பாரத்தை கீழே இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்திருக்கிறது" என்று கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு எட்டு வயது குழந்தையாக பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும்போது, நம்மால் அந்த சிறு வயதில் என்ன செய்துவிட முடியும்.அதுவொரு வன்கொடுமை. ஆனால் இன்றைக்கு அதுகுறித்து நான் பேசியிருக்கிறேன் என்றால் அதிலிருந்து இப்போது நான் மீண்டு வந்திருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால் அதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதேசமயம் இது போன்ற கொடுமைகளை அனுபவித்தவர்களுக்குதான், அது எத்தகைய மனச் சிதைவை ஏற்படுத்தும் என்பது புரியும்.
 
இங்கே நடக்கும் 90சதவீத பாலியல் துன்புறுத்தல்கள் நமக்கு நன்கு தெரிந்த, நம்மைச் சுற்றியுள்ள நபர்களால்தான் ஏற்படுகின்றன என்று தரவுகள் கூறுகின்றன. என்னுடைய ஆரம்ப காலகட்டத்திலிருந்து குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிரான பிரச்னைகளாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் நான் முதல் ஆளாக குரல் கொடுத்து வந்திருக்கிறேன். ஏனென்றால் அத்தகைய பிரச்னைகள் அனைத்தையும் நானும் அனுபவித்திருக்கிறேன். பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது, அதனுடைய காயங்கள் ஆறினாலும் அந்த தழும்புகள் நமது வாழ்நாள் முழுவதும் தொடரும்" என்று கூறுகிறார்.
 
இதுகுறித்து அவர் கூறும்போது, "நம் சமூகத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது. ஒரு பெண் தனக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே பேசினால், திரும்ப அவர்களை நோக்கியே பல கேள்விகள் கேட்கப்படும். அவன் உன்னை சீண்டும் வகையில் நீ என்ன செய்தாய், நீ எப்படி உடை அணிந்திருந்தாய், அந்த நேரத்தில் நீ எதற்காக அங்கே சென்றாய், அவனிடம் நீ எதற்காக வாய் கொடுத்து பேசினாய் போன்ற முறையில்லாத கேள்விகள் அவர்களை நோக்கி வீசப்படுமே தவிர, தவறு செய்த ஆண்களை நோக்கி கேள்விகள் எழுப்ப மாட்டார்கள்.
 
இப்போது நான் எனது தந்தையால் பாதிக்கப்பட்ட விஷயத்தை பகிர்ந்ததற்கு கூட, என்னை நோக்கிதான் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகின்றன. ட்விட்டரில் படித்த பேராசியர் ஒருவர்,
 
"இப்போது நீங்கள் உங்களது குழந்தைப் பருவ துன்புறுத்தல்கள் குறித்து பேசுயிருப்பது, உங்களது தந்தை குறித்த தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்காதா, உங்களது குழந்தைகள் அவர்களது தாத்தாவை பற்றி தவறாக நினைக்க மாட்டார்களா" என்று என்னைப் பார்த்து கேள்வியெழுப்புகிறார். இப்போது கூட ஆண்களின் பிம்பங்களை பற்றியே அவர்கள் கவலை கொள்கிறார்கள். இந்த சமூகத்தில் படித்தவர்களின் நிலையே இவ்வளவு கேவலமாக இருக்கிறது.
 
அதனால்தான் ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், தங்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெட்கப்பட தேவையில்லை. உண்மையில் வெட்கப்பட வேண்டியது இத்தகைய தவறுகளை செய்யும் ஆண்கள்தான். இன்றைக்கு நான் என்னுடைய அனுபவங்கள் குறித்து பேசியிருப்பதற்கான காரணம் அதனை வலியுறுத்துவதற்காகத்தான்" என்று உறுதியான குரலில் கூறுகிறார்.
 
தவறு இழைப்பவர்கள் குறித்து தைரியமாக பொது வெளியில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டும் என்று குஷ்பு கூறுகிறார். தவறு செய்பவர்கள் குறித்து வெளியே பேசாமல், அவர்களுக்கு எப்படி உங்களால் தண்டனை வாங்கி கொடுக்க முடியும் என்ற கேள்வியையும் அவர் முன் வைக்கிறார்.
 
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்," குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியே பேசினால் அந்த குழந்தைகளுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற கருத்து இங்கே ஆழமாக பதிவாகியிருக்கிறது. என்னுடைய பதினைந்து வயதில் எனக்கு நேர்ந்த பிரச்னைகள் குறித்து, தைரியமாக நானே குரல் கொடுத்தேன். அதன்பின் சொந்தமாக உழைக்க துவங்கி, இன்று வரை இந்த சமூகத்தில் ஒரு மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிறேன். ஒரு குடும்ப தலைவியாக பல பொறுப்புகளை கையாள்கிறேன். எனது தந்தை செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவரை எதிர்த்ததால், எனது வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
 
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு செய்த கொடுமைகளுக்கான பலனை எனது தந்தை அவரது கடைசி காலத்தில் அனுபவித்தார். அவர் இறந்தபோது அந்த கடைசி ஊர்வலத்தில், எனது சகோதரர்கள் கூட யாரும் பங்குகொள்ளவில்லை. அவர் அனாதையாகத்தான் சென்றார். இதற்கு பெயர்தான் கர்மா என்பார்கள்" என்று அவர் கூறுகிறார்.
 
தங்களுடைய குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று தெரிய வரும்போது,பெற்றோர்கள் தைரியமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் எனவும், இன்றைக்கு இருக்கும் போக்ஸோ சட்டமும், சமூக ஊடகங்களும் மற்றும் பல சமூக அமைப்புகளும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் எனவும் குஷ்பு நம்பிக்கையளிக்கிறார்.
 
"இத்தனை ஆண்டுகள் கழித்து இதுபற்றி வெளியே பேசுவதற்கு எனக்கு தைரியம் வந்துள்ளது. அந்த தைரியத்தை எனக்களித்தது என்னுடைய குழந்தைகள். அதேபோல் எனது கணவரும் எனக்கு துணையாக இருக்கிறார். ஆனால் அனைவருக்கும் எனக்கு கிடைத்தது போன்ற ஆதரவுகள் கிடைக்குமென சொல்ல முடியாது. ஆனால் காலங்கள் மாறி வருகிறது. எனவேதான் மீண்டுமொரு முறை சொல்கிறேன் இந்த சமூகத்தில் இத்தகைய விஷயங்களில் நிச்சயம் மாற்றம் வர வேண்டும்" என்கிறார் குஷ்பு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்