இரான் குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி - யார் காரணம்? மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (20:50 IST)
இரானின் புரட்சிகரப் படைகளின் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறுகிறது.
 
ஊடகம் சார்பாக வெளியான காணொளியில், தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்த ஊர்வலத்தில் குண்டுகள் வெடித்துள்ளன எனவும், இந்த தாக்குதலில் 171 பேர் காயமடைந்ததாகவும் அரசு செய்தி தொடர்பாளர் இரிப் கூறினார்.
 
மேலும் இது ஒரு "பயங்கரவாத தாக்குதல்" என்று கெர்மனின் துணை ஆளுநர் அந்த காணொளியில் கூறியுள்ளார். இரானின் ஒரு சாலையில் பல உடல்கள் கிடப்பதை இணையத்தில் வைரலான அந்த காணொளியில் பார்க்க முடிகிறது.
 
2020இல் அண்டை நாடான இராக்கில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் சுலைமானியை நினைவுகூரும் நாளின் ஒரு பகுதியாக புதன்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் கல்லறையை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
 
இரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு மிகவும் சக்தி வாய்ந்த நபராக சுலைமானி இருந்தார்.
 
புரட்சிகர படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையின் தளபதியாக, பிராந்தியம் முழுவதும் இரானியக் கொள்கைகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.
 
குத்ஸ் படையின் இரகசியப் பணிகள் மற்றும் அதன் வழிகாட்டுதல், நிதி, ஆயுதங்கள், உளவுத்துறை மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட நேச நாட்டு அரசாங்கங்கள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு தளவாட உதவிகளை வழங்குவதற்கு அவர் பொறுப்பாக இருந்தார்.
 
2020-ம் ஆண்டில் அவரை கொல்ல உத்தரவிட்ட அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுலைமானியை "உலகின் நம்பர் ஒன் பயங்கரவாதி" என்று குறிப்பிட்டார்.
 
காஸாவில் 2 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் மத்திய கிழக்கில் ஏற்கனவே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் வேளையில், இரானில் நடந்துள்ள இந்த குண்டுவெடிப்பு அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
 
குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குறித்த விவரம் சில மணிநேரங்களில் வெளியிடப்படும் என இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஷாஹித் பஹோனார் மருத்துவமனையிலிருந்து செய்திகளை சேகரித்து வரும் அரசு தொலைக்காட்சி நிருபர், பாதிக்கப்பட்ட தனது உறவினர்களை தேடி மருத்துவமனைக்குள் மக்கள் நுழைய வேண்டாம், அது சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் என்று அதிகாரிகளின் சார்பாக மக்களைக் கேட்டுக் கொண்டார்.
 
மேலும் இறந்தவர்களின் பெயர் விவரம் வரும் சில மணி நேரத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றார். கொல்லப்பட்டவர்களில் ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினரான மெலிகா ஹொசைனியும் ஒருவர் என அரசு சார்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments