Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் விதிகளை மீறினாரா கமல்ஹாசன்? - மக்கள் நீதி மய்யம் பதில்

கொரோனா வைரஸ் விதிகளை மீறினாரா கமல்ஹாசன்? - மக்கள் நீதி மய்யம் பதில்
, திங்கள், 6 டிசம்பர் 2021 (15:34 IST)
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த பின்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
`பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நடிகர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும்' என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விதிகளை மீறினாரா கமல்? மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
 
இதுகுறித்து, கமல் தனது ட்விட்டர் பதிவில், `அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின்னர் லேசான இருமல் இருந்தது. மருத்துவப் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து பாதுகாப்பாக இருங்கள்' எனத் தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி கமல் சிகிச்சை எடுத்து வந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். நடிகர் ரஜினிகாந்த், போனில் கமலிடம் நலம் விசாரித்தார்.
 
இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து அவர் முற்றிலும் குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
 
இதன்பின்னர், அவர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக தனியார் தொலைக்காட்சியின் `பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமல் சென்றுவிட்டார். இதுகுறித்து இன்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'கொரோனாவில் இருந்து குணமடைந்த சில நாள்களிலேயே விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும்' என்றார்.
 
மேலும், 'மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன்பின் ஏழு நாள்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்,' என்றார். "கொரோனா விதிமுறைகளை கமல் மீறினாரா?" என மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "மருத்துவ விதிமுறைகளை மீறக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், கமலுக்கு மருத்துவர்கள் கொடுத்த அறிவுரை என்பது 3ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. 
 
நான்காம் தேதியில் இருந்து இயல்பான பணிகளுக்கு அவர் திரும்பலாம் எனக் கூறிவிட்டனர். அதற்கான மருத்துவ அறிக்கையும் வெளியானது. அதிலும், தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக எந்தக் குறிப்பையும் மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலருக்குத் தகவல் சரியாக சொல்லப்படவில்லை என்பதாகவே இதைப் பார்க்கிறோம்," என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து கேட்டபோது, 'அதைப் பற்றி விசாரிக்கிறேன்' எனக் கூறாமல் விளக்கம் கேட்க உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் கூறிவிட்டார். கமல் சிகிச்சை எடுத்து வந்த மருத்துவமனையில் இருந்து 2ஆம் தேதி வந்த அறிக்கையின்படி மூன்றாம் தேதியே அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டன. தனிமை என்ற கேள்விக்கே அதில் இடமில்லை."
 
"மருத்துவமனையில் இருந்து நேரடியாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத்தான் சென்றார். இத்தனைக்கும் மருத்துவர்களிடம் கூறிவிட்டுத்தான் அவர் சென்றார். அவ்வாறு தனிமைப்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் சென்றிருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் மருத்துவ விதிகள் எதுவும் மீறப்படவில்லை," என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செஞ்சுரி அடிக்கும் காய்கறி விலை; அரசு நடவடிக்கை தேவை! – ஓபிஎஸ் வலியுறுத்தல்!