Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு: என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது?

ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு: என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது?
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (19:49 IST)
இது ஆற்றின் போக்கை மாற்றப் போவதில்லை என்றாலும் நீரோட்டத்தில் நிச்சயம் ஒரு பெரிய சலசலப்பை உண்டாக்கும்.
 

நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழங்கிய தீர்ப்பை 'முழுமனதோடு வரவேற்கிறேன்' என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

"இந்தத் தீர்ப்பு எங்களை நெடுந்தூரம் இட்டுச் செல்கிறது. இது வரையறை இல்லாத ஒரு பிரதேசம். எனினும் இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் நிச்சயம் நிறைவேற்றப்படும். பெண் அதிகாரிகளை பணியில் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது ராணுவத்தின் விருப்பம் அல்ல. 1992 முதலே படிப்படியாக பெண்களை பணிகளில் ஈடுபடுத்தி வருகிறோம். இந்த தீர்ப்பு வரும் வரை கூட இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மெதுவாகத் தோன்றினாலும், மிகவும் விவேகமாக இருக்கவே விரும்புகிறோம்," என்று பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தங்கள் சக ஆண் ராணுவ அதிகாரிகளைப் போலவே சமமான உரிமைகளை இந்தத் தீர்ப்பு பெண் ராணுவ அதிகாரிகளுக்கும் வழங்குகிறது.
தீர்ப்பைப் புரிந்துகொள்ள 'நிரந்தர கட்டளைப் பணி' (permanent commission) என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பெண்கள் ராணுவத்தில் தாங்கள் வகிக்கும் பதவிகளுக்கு என்று வரையறுக்கப்பட்டுள்ள முழு காலத்துக்கும் அப்பதவியில் நீடிக்க 'நிரந்தர கட்டளைப் பணியில்' ஈடுபட வழிவகை செய்யும்.

'நிரந்தர கட்டளைப் பணி' இல்லாதபோது முன்கூட்டியே பதவி ஓய்வு பெற நேரிடும் அல்லது கட்டாயமாக அவர்களது பணிக்காலம் முடித்து வைக்கப்படும்.
'நிரந்தர கட்டளைப் பணி' மூலம் ஒரு பதவிக்கு வரையறுக்கப்பட்டுள்ள முழு காலத்துக்கும் அப்பணியில் இருக்கும் பெண் அதிகாரிகள் பதவி உயர்வு பெறத் தகுதி பெறுவதுடன் பொருளாதார ரீதியான பலன்களையும் கூடுதலாகப் பெற முடியும்.

எனினும் பெண்கள் ராணுவத்தின் எந்தெந்தப் பிரிவுகளில் எல்லாம் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்களோ அந்தப் பிரிவுகளில் மட்டுமே நிரந்தர கட்டளைப் பணி நியமனத்துக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிவகை செய்கிறது.

ராணுவத்தின் எந்தப் பிரிவுகளில் பெண்கள் பணியாற்ற முடியும் எனும் அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தலையிடவில்லை.
இந்தத் தீர்ப்பு ராணுவத்தின் தலைமை சட்ட அதிகாரியாக கருத்தபடும் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல், ராணுவக் கல்விப் பிரிவு, பொறியாளர்கள், ராணுவ விமானப் பிரிவு, ராணுவ வான் பாதுகாப்பு பிரிவு, மின்னணு மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள், ராணுவத் தளவாடங்கள் தொடர்பான பிரிவுகள், ராணுவ உளவுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பெண்கள் நிரந்தரமாகப் பணியாற்ற வழிவகை செய்கிறது.

குறுகிய கால அடிப்படையில் மேற்கண்ட பிரிவுகளில் பணியில் சேரும் பெண்களை நிரந்தர கட்டளைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இதை நிறைவேற்ற மூன்று மாத காலம் அவகாசம் வழக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எது கிடைக்கப்போவதில்லை..
போர் காலங்களில் களத்தில் இறங்கிப் பணியாற்றும் படைகள், பீரங்கிகளை இயக்குபவர்கள், ஆயுதங்களைக் கையாள்பவர்கள் உள்ளிட்ட பணிகளில் பெண்கள் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இந்த தீர்ப்பு அந்த நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

webdunia

பல்வேறு பொறுப்புகளில் பெண்களை ஈடுபடுத்த விரும்புவதாக இந்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாலும் 'களத்தில் கட்டளையிடும்' பொறுப்புகளுக்கு பெண்களை நியமிக்கப் போவதில்லை.

இத்தகைய பொறுப்புகளில் பெண்கள் இல்லாமல் இருப்பது, அவர்களின் பதவி உயர்வை கடுமையாகப் பாதிக்கும்.
பெண்கள் அதிகாரிகள் மட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்தாலும், படை வீரர்கள் மற்றும் பிற பொறுப்புகளில் பெண்கள் நேரடியாக சேர முடியாது.
போர்ச் சூழல்களில் பணியாற்றும் பெண் ராணுவ அதிகாரிகளும் ஆண் ராணுவ அதிகாரிகளுக்கு நிகரான உரிமைகளை பெற முடியும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புரிந்துகொள்ள முடியும் என்றாலும், போர், எல்லைக் காவல் போன்ற ராணுவத்தின் களப்பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை.

இந்திய ராணுவத்தில் என்ன நடக்கும்?
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் காவல் பணிகள், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சியாச்சின் பனிப்பிரதேசம், சீன - இந்திய எல்லை போன்ற இடங்களில் பெண்களை களப்பணியில் ஈடுபடுத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பை இந்திய ராணுவம் தற்போது கொண்டிருக்கவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"சியாச்சின் போன்ற இடங்களில் பணியமர்த்தப்பட்டால், ஐந்து ஆண்களுடன் ஒரு பெண் பல நாட்கள் தங்க நேரிடலாம். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் பணியில் ஈடுபடும்போது ஆண் மற்றும் பெண் ராணுவத்தினர் ஒரே பதுங்குக் குழியில் இருக்க நேரிடும், " என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் கட்டளை அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்பட சமீபத்திய தீர்ப்பு வழிவகுத்துள்ளது.

அப்படி அவர்கள் கட்டளை அதிகாரிகள் ஆகும்போது, அவர்கள் தலைமை தாங்கும் படையினர் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கெல்லாம் பெண் அதிகாரிகளும் செல்ல நேரிடும். அந்த இடங்கள் கடினமானவையாக இருந்தாலும் அவர்கள் செல்ல வேண்டும்.

நிரந்தர கட்டளைப் பணி ஈடுபடுத்தல் மூலம் தற்போது வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களின் எண்ணிக்கையும் இனி அதிகரிக்கும்.

பிற பாதுகாப்புப் படைகளின் நிலை என்ன?
இந்திய விமானப் படை அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களை பணியாற்ற அனுமதித்தாலும், பெரும்பாலும் அவர்கள் அதிகாரிகள் மட்டத்திலேயே உள்ளார்கள். ஜூன் 2019 தரவுகளின்படி இந்திய விமானப் படையில் பணியாற்றும் 13.28% பேர் பெண்கள்.

இந்திய கடற்படை அதிகாரிகள் மட்டத்தில் 6.7% பேர் பெண்களாக உள்ளனர்.
ஜனவரி 2019 நிலவரப்படி, முப்படைகளின் பெரிய படையாக இருக்கும் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 3.89% மட்டுமே.
கடலுக்கு செல்லாத கடற்படையின் பிரிவுகளில் பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
ஆண் மற்றும் பெண் அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்கான கப்பல்களை இந்தியக் கப்பல்படை வாங்கவுள்ளது. இது கடற்படையின் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என கடந்த ஆண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அச்சுறுத்தும் கொரோனா; சொகுசுக் கப்பலில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்..