Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஹுலி கோஷ்: பலூன் சுடுதலில் தொடங்கி, துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வரை

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (13:21 IST)
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த மெஹுலி கோஷிற்கு துப்பாக்கிச்சுடுதலை தொழில்முறையாக செய்ய முடியும் என்று ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.

பொருட்காட்சிகளின் போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பலூன்களை துப்பாக்கியால் சுடும்போதே, துப்பாக்கிகள் மீதும் தோட்டாக்கள் மீதும் மெஹுலிற்கு அதீத ஆர்வம் ஏற்பட்டது. அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமான சிஐடி என்ற தொலைக்காட்சி தொடரும் இவருக்கு பிடித்தமான ஒன்று.

ஆனால், ஒருநாள் உலக அரங்கில் துப்பாக்கிச்சுடுதலில் தனது நாட்டை பிரிதிநிதித்துவப்படுத்துவார் என்று மெஹூலி நினைக்கவில்லை.

அவர் வெறும் 16 வயதில் இருக்கும் போது முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்தார். 2016ஆம் ஆண்டு, புனேவில் நடந்த தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்பது தங்கப்பதக்கங்களை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதோடு, இந்திய ஜுனியர் அணிக்கு தேர்வானார்.

அடுத்தாண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் சர்வதேச அளவில் தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.

வாழ்க்கையை மாற்றிய விபத்து

இந்தியாவின் அனுபவமிக்க துப்பாக்கிச்சுடுதல் வீரரான அபிநவ் பிந்த்ராவை தனது முன்மாதிரியாக பார்க்கிறார் மெஹுலி கோஷ். 2008 பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் விளையாடி தங்கம் வென்றதை தனது வீட்டில் உள்ள சிறிய தொலைக்காட்சி பெட்டியில் பார்த்தபோது, தானும் அதுபோன்ற சாதனையை படைக்க வேண்டும் என்று மெஹுலிக்கு ஊக்கம் வந்தது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த மெஹுலியின் தந்தை ஒரு தினக்கூலி தொழிலாளி, தாய் இல்லத்தரசி. அவர்களது குடும்ப சூழலில், ஒரு விளையாட்டு வீராங்கனையை பயிற்சி கொடுத்து உருவாக்குவது என்பது முடியாத ஒன்றாகவே இருந்தது.

தனக்கு செலவு செய்ய, தான் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுக்க, குடும்பத்தை ஒப்புக்கொள்ள வைக்கவே மெஹுலிக்கு ஓராண்டு ஆனது. ஆனால், அவர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, அதிலிருந்து எந்த பின்வாங்கலும் இல்லை.

அது அவருக்கு அனைத்து வகையிலும் உதவியது. அந்த நேரத்தில் பயிற்சிக்கான சிறந்த இடம் எளிதில் கிடைக்கவில்லை. இதோடு அவருக்கு வேறு ஒரு சவாலும் காத்திருந்தது.

2014ஆம் ஆண்டு, தவறுதலாக ஒரு நபர் மீது இவர் சுட, அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக மெஹுலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளானார் மெஹுலி.

எனினும், அவருக்கு ஆதரவாக நின்ற பெற்றோர், அவரை அனுபவம் வாய்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான ஜாய்தீப் கர்மகரிடம் அழைத்து சென்றனர்.

அதுவே மெஹுலியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

பதக்கங்கள்

ஏனெனில் அதுவரை மெஹூலிக்கு சரியான பயிற்சியாளர் இருக்கவில்லை. கர்மகரிடம் பயிற்சி பெற்றது, அவருக்கு விளையாட்டில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அந்த அகாடமியில் பயிற்சி பெற மெஹுலி, தினமும் 4 மணி நேரம் பயணிக்க வேண்டியது. அவ்வப்போது நடு இரவில்தான் அவர் வீடு திரும்புவார்.

அவரின் கடின உழைப்பு வீணாகவில்லை. 2017ல் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் சர்வதேச தங்கப்பதக்கத்தை வென்றார் மெஹுலி. அதனை தொடர்ந்து அவருக்கு வெற்றிதான். பிறகு பல்வேறு சர்வதேச போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை அவர் வென்றார்.
2018ஆம் ஆண்டு யூத் ஒலிம்பிக் போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் வெண்கலம் வென்று தனது புள்ளிகளில் புதிய சாதனையை படைத்தார். தொடர்ந்து 2019ல் தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்றார் மெஹுலி.

தற்போது ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பையில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே மெஹுலியின் இலக்கு.

இந்தியாவில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் சாதனைகள் மட்டுமே கொண்டாடப்படுவதாக கூறும் மெஹுலி, இது போன்ற விளையாட்டு வீரர்களின் வெற்றிகள் தவிர்க்கப்படுவதாக கூறுகிறார். இந்த நிலை விரைவில் மாறும் என்றும் அவர் நம்புகிறார்.

(மெஹுலி கோஷிற்கு மின்னஞ்சல் மூலம் பிபிசி அனுப்பிய கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments