Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனு ஸ்மிருதி: ஆ. ராசா இந்துக்கள் பற்றி தவறாக பேசியதாக புதிய சர்ச்சை - பின்னணி என்ன?

a raja
, புதன், 14 செப்டம்பர் 2022 (22:12 IST)
மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி, இந்து மதம் போன்றவை தமிழ்நாட்டில் அவ்வப்போது விவாதப் பொருள் ஆவது வழக்கம். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம். பியுமான ஆ. ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்து மதம் குறித்து பேசிய காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
 
 
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்" என்று தொடங்கி மேலும் சில கருத்துகளைக் குறிப்பிட்டிருந்தார்.

 
இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆ. ராசா பேசிய வீடியோ பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்து, "தமிழ்நாட்டின் அரசியல் பேச்சின் அவல நிலை. திமுக எம்.பி மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து, மற்ற சமூகத்தினரை திருப்திப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளார்.தமிழகம் தங்களுக்கு சொந்தமானது என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிருஷ்டவசமானது," என்று பதிவிட்டிருந்தார்.
 
 
 
இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டும் வகையில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக கருத்துக்களை ஆ.ராசா பரப்பி வருவதாக காவல்துறையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது.
 
 
இதைத்தொடர்ந்து, இந்துக்களுக்கு எதிராக ஆ. ராசா பேசியதாக கூறப்படும் கருத்துக்கள், சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
 
 
இந்த சர்ச்சை குறித்து சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஏ. எஸ். பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

 
"ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு கிடைத்து வரும் கவனத்தைத் திசை திருப்ப பாஜக பல விஷயங்களை கையில் எடுக்கிறது. அதில் ஒன்றுதான் ஆ ராசா பேசியதை சர்ச்சையாக்கும் முறை. அவர் ஒன்றும் புதிதாகப் பேசவில்லை. ஏற்கெனவே 150 ஆண்டுகளாக பொது புத்தியில் இருக்கும் விஷயங்களைத்தான் பேசியிருக்கிறார்," என்கிறார் பன்னீர்செலவம்.
 
 
 
"திராவிட இயக்கம் இந்துக்களுக்கு எதிரான ஒன்றாக, பெரியார் காலத்தில் இருந்தே பார்க்கப்படுகிறதே" என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், "பெரியார் மத ரீதியான சொற்றொடரை பயன்படுத்தியது கிடையாது. மதத்தை கடந்த ஓர் அன்பின் அடிப்படையில் உள்ள ஓர் அரசியலை அவர் முன்வைக்கிறார். அதை மத அரசியலுக்குள் சுருக்குவதே அயோக்கியதனம்.
 
 
 
ராசா பேசிய காணொளியில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து கொண்டு சர்ச்சையாக்குவதில் என்ன நியாயம் உள்ளது? அதன் முழு பகுதியையும் வெளியிட வேண்டும்." என்கிறார் பன்னீர்செல்வம்.
 
 
இந்த நிலையில், இந்துக்களுக்கு எதிரான போக்கு என்று கருத்து பரவி வருவதையடுத்து ஆ. ராசா தனது ட்விட்டர் பக்கத்தில், "சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி-வேலைவாய்ப்பு-கோவில் நுழைவில் அவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது? அரசியல் அதிகாரத்தாலும் - பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்?" என்று பதிவிட்டிருந்தார்.
 
 
 
இது குறித்து ஏ. எஸ். பன்னீர்செல்வம் கூறுகையில், "அவர் 'சமூக நீதி'க்கான அடித்தளம் பற்றி பேசுகிறார். இந்த சமூக நீதிக்காக எவையெல்லாம் அடிப்படை என்று பார்த்தால், சக மனிதர்களை அடிமைப்படுத்தும் போக்கும் இல்லாமலும், அவமதிக்கும் செயல்களை செய்யாமலும் இருப்பது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படை சமூக நீதி. இதை எப்படி சர்ச்சைக்குரியதாக மாற்ற முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.
 
 
இந்த வகையில், சமூக நீதி என்பது பல ஆண்டுகளாக திராவிட இயக்கம் கையாளும் ஒன்று. இது பெரியார் காலகட்டத்தில் இருந்து மாறுபட்டு கையாள வேண்டிய சூழல் நிலவுகிறதா என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், "சில விஷயங்கள் வெவ்வேறு விதமாக எல்லாம் கையாள முடியாது. உதாரணமாக, சனாதனத்திற்கு எதிராக புத்தர் காலகட்டத்தில் இருந்து போராடி வருகிறோம். ஆனால், அன்றைக்குதான் போராடினோமே என்று இன்று அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட முடியாது. சில விஷயங்கள், அதாவது சமூக நீதியை நிலைநாட்டும் விஷயங்களுக்கு நாம் தொடர்ந்து போராடி கொண்டுத்தான் இருக்கவேண்டும்," என்றார்.

 
2020இல் இந்த மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேசியிருந்தார். அவரது பேச்சின் ஒரு பகுதியை இந்து வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடங்கங்களில் அதிகமாகப் பகிர்ந்தனர். திருமாவளவன் பெண்களை அவமதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
 
 
பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்புவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவனை விமர்சித்தார்.
 
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனுஸ்மிருதி நூலைத் தடை செய்யவேண்டும் என்று கோரி சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடத்தியது. இதற்கிடையில் திருமாவளவனின் பேச்சுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி