Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாங்கல்ய தோஷம்: தன்னிடம் படிக்க வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்த 'டியூசன் டீச்சர்'

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (13:25 IST)
(இன்று 19.03.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

மாங்கல்ய தோஷத்தில் இருந்து விடுபட தன்னிடம் படிக்க வந்த 13 வயது சிறுவனை, ஆசிரியை பொம்மை திருமணம் செய்து கொண்டதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பஸ்தி பாவா கெல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு மாங்கல்ய தோஷம் காரணமாக நீண்ட நாட்கள் திருமணம் நடக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் ஒரு சாமியாரை சந்தித்தனர்.

இந்த தோஷம் அல்லது குறைபாட்டிலிருந்து விடுபட ஒரு சிறுவனை பொம்மை திருமணம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை தன்னிடம் டியூசன் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவரை தேர்வு செய்துள்ளார்.

மாணவன் வீட்டிற்கு சென்று சிறுவன் ஒருவாரம் தன் வீட்டில் தங்கி இருந்து படிக்கவேண்டும் என கூறி உள்ளார். அதற்கு சிறுவனது பெற்றோர்களும் சம்மதித்து விட்டனர்.

ஒருவாரம் கழித்து சிறுவன் வீடு திரும்பியதும் ஆசிரியை மாணவனை பொம்மை திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் பஸ்தி பாவா கெல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆசிரியையும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மெஹந்தி விழா மற்றும் 'முதல் இரவு உள்ளிட்ட திருமண சடங்குகளை வலுக்கட்டாயமாக செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளை முடித்த பின்னர் ஆசிரியை தனது வளையல்களை உடைத்து விதவையாக அறிவிக்கப்பட்டார். குடும்பத்தினர் இரங்கல் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

புகாரைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை காவல் நிலையத்துக்கு வந்து சமரசம் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் அழுத்தத்தின் பேரில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகாரை திரும்பப் பெற்று உள்ளனர்.

பஸ்தி பாவா கெல் காவல் நிலைய அதிகாரி ககன்தீப் சிங் சேகோன் போலீசாருக்கு புகார் கிடைத்ததை உறுதிப்படுத்தியுள்ளார், ஆனால் இரு வீட்டாரிடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்புகார் திரும்பப் பெறப்பட்டது.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது பெற்றோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சரக்கு லாரி ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை என 1,000 ரூபாய் அபராதம்

சரக்கு லாரியை தலைக்கவசம் அணியாமல் ஒட்டியதற்காக ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஒருவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஜகன்னாத்பூரைச் சேர்ந்த பிரமோத் குமார் ஸ்வெயின் சரக்கு லாரி ஒன்றின் உரிமையாளராக இருந்து வருகிறார். இவர் தனது வண்டியின் அனுமதியை புதுப்பிப்பதற்காக போக்குவரத்து துறை அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பெயரில் விதிக்கப்பட்டிருக்கும் மூன்று அபராதங்களைச் செலுத்துமாறு கூறியுள்ளனர் அதிகாரிகள்.

அம்மூன்று அபராதங்களில், லாரியை தலைக்கவசம் அணியாமல் ஒட்டியதற்காக கடந்த 2020 டிசம்பர் 24 அன்று விதிக்கப்பட்ட ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் செலுத்தி இருக்கிறார் பிரமோத்.

இதுபற்றி பிரமோத் கூறும்பொழுது "என்னுடைய சரக்கு லாரி ஓட்டுவதற்கான அனுமதி காலாவதி ஆகி விட்டது. அதனால், வாகன அனுமதிக்கான கட்டணம் செலுத்த ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால், எனது பெயரில் 3 அபராதங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். அதற்கான தொகையை செலுத்தி ரசீது பெற்று கொண்டேன். அந்த ரசீதில், தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக அபராதம் விதித்து இருப்பது தெரிந்தது" என கூறினார்.

சரக்கு லாரி ஓட்டுனர் வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணிய வேண்டிய தேவையில்லை என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சிறப்பு டிஜிபி நேற்று (18.03.2021 வியாழக்கிழமை) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என தினமணியில் செய்தி வெளியாகி இருக்கிறது.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அரசு விழாக்களில் பங்கேற்க கடந்த மாதம் திருச்சி, புதுக்கோட்டைசென்ற போது பாதுகாப்புக்குச் சென்ற சிறப்பு டிஜிபி, அங்கு பணியில் இருந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து டிஜிபியிடம் புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியை, செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளா் வழி மறித்து, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ய டிஜிபி ஜே.கே.திரிபாதி, சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி சிபிசிஐடி அதிகாரிகள், பாலியல் தொல்லைக் கொடுத்த சிறப்பு டிஜிபி, மிரட்டல் விடுத்த காவல் கண்காணிப்பாளா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். இதில் காவல் கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இவ்வழக்கு தொடா்பாக 2 ஐஜிக்கள், 2 டிஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் ஆகியோர் உள்பட 50 பேரிடம் விசாரணை செய்தனா். சிறப்பு டிஜிபியிடம் கடந்த 13-ஆம் தேதி 5 மணி நேரம் விசாரணை நடந்தது. இதன் அடுத்த கட்டமாக, பெண் அதிகாரியை வழிமறித்து, மிரட்டிய காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை விசாரணை நடந்தது.

பணியிடை நீக்கம்: இந்நிலையில் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு நேற்று (18.03.2021 வியாழக்கிழமை) உத்தரவிட்டது. இந்த உத்தரவு இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது என்கிறது அச்செய்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு முதல்வர், துணை முதல்வர், கனிமொழி வாழ்த்து..!

33 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. சிங்கள ராணுவம் அராஜகம்..!

அஜித், ஷோபனா, பாலையா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்