Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லத்தி - சினிமா விமர்சனம்

லத்தி - சினிமா விமர்சனம்
, சனி, 24 டிசம்பர் 2022 (09:31 IST)
நடிகர்கள்: விஷால், சுனைனா, ரமணா, பிரபு, ஏ. வெங்கடேஷ், தலைவாசல் விஜய், முனீஸ் காந்த், வினோதினி வைத்தியநாதன்; ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம்; இசை: யுவன் சங்கர் ராஜா; இயக்கம்: ஏ. வினோத்குமார்.
 
வீரமே வாகை சூடும் படத்திற்குப் பிறகு விஷால் நடித்து வெளிவரும் திரைப்படம் இது. அயோக்யா, பாயும் புலி, சத்யம், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்த விஷாலுக்கு மீண்டும் ஒரு காவல்துறை திரைப்படம்.
 
சமர் திரைப்படத்திற்குப் பிறகு, சுனைனாவுடன் அவர் இணைந்திருக்கும் படம். இயக்குநர் வினோத்குமாருக்கு இதுதான் முதல் படம்.
 
 இந்தப் படத்தின் கதை இதுதான்: மனித உரிமை மீறல் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு,  6 மாதமாக மனைவி, குழந்தையுடன் வீட்டிலிருக்கிறார் முருகானந்தம் (விஷால்).  மீண்டும் பணியில் சேர அதிகாரிகளை நாடுகிறார். அப்படி ஒரு உயரதிகாரி டிஐஜி கமல் (பிரபு). அவருடைய மகளுக்கு வில்லன் ஒருவனால் பிரச்னை. அவனை பிடித்து வந்து விட்டாலும், டிஐஜியின் கையில் அடிபட்டிருப்பதால், அவனை அடிக்க முடியவில்லை.
 
லத்தி ஸ்பெஷலிஸ்டான முருகானந்தத்தை அடிக்கச் சொல்கிறார். ஆனால், அந்த சம்பவம் வேறு வேறு பிரச்னைகளுக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து முருகானந்தம் எப்படித் தப்புகிறார், அவர் ஏன் முதலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பதுதான் மீதிக் கதை.
 
கதை கொஞ்சம் ஓவர் டோஸா?
இந்தப் படத்திற்கு தற்போது விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகிவரும் நிலையில், பெரும்பாலான விமர்சனங்கள் ஒரு நல்ல ஆக்ஷன் திரைப்படம் மிக நீளமான சண்டைக் காட்சிகளால் சோர்வை ஏற்படுத்துகிறது என்ற கருத்தையே முன்வைத்துள்ளன.
 
 
"முதல் பாதியில் நல்ல தொடக்கத்துக்கான அம்சங்களைக் கொடுக்கும் படம், இரண்டாம் பாதியில் அதனை மறக்கடிக்கும் விதமான ஓவர் டோஸ் சண்டைக்காட்சிகளால் சோர்வை ஏற்படுத்திவிடுகிறது.
 
குறிப்பாக, தர்க்க ரீதியான மீறல்களை கண்டுகொள்ளாமல் படம் தேமேவென நகர்வதுதான் பெரிய சிக்கல். டிஐஜி தரத்திலிருக்கும் அதிகாரியால் ரவுடி ஒருவரை தண்டிக்க முடியாமல் போவது, காவல் துறை, அரசியல் கட்சியினர் என அனைவரும் பயப்படும் தாதா ஒருவரை விஷால் தனி ஆளாக கொல்வது, இரண்டாம் பாதியில் நூற்றுக்கணக்கான ரவுடிகளை அடித்து துவம்சம் செய்யும் அவர், இரும்புக் கம்பியை லத்தியைக்கொண்டு எதிர்ப்பது...
 
இதையெல்லாம் கடந்து, கத்தி குத்து, முதுகில் அரிவாள் வெட்டு, காலில் ஆணிக் குத்து, ரத்தம் வழியும் முகத்துடன் ஃபுல் எனர்ஜியுடன் இருக்கும் நாயகனை இன்னும் தமிழ் சினிமா மறக்கவில்லை.
 
 
 
தவிர, சக காவலர் ஒருவர் ஆபத்தில் இருப்பதை அறிந்தும் சைலன்டாக இருக்கும் காவலர்கள், மண்ணில் புதைந்தும் மீண்டும் எழுந்து வரும் விஷாலின் மகன், வில்லன் ராணா பாலித்தீன் கவரை மாஸ்காக்கி அதற்கு மாஸாக சொல்லும் காரணங்கள் பெரும் அயற்சி. ஒரு சீனில் வைக்கப்படும் சண்டைக்காட்சியை இரண்டாம் பாதி முழுக்க வைத்து இழுத்திருப்பது சோர்வு. இதனிடையே கதையில் வரும் சின்ன ட்விஸ்ட் படு செயற்கைத்தனம்" என்கிறது இந்து தமிழ் திசை.
 
பழக்கப்பட்ட கதை.... ஆனால் விறு,விறு...
"படத்தில் சண்டை இல்லை, சண்டைதான் படமே” என்று சொல்லும் அளவிற்கு இரண்டாம் பாதி முழுவதும் ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கிறது என்று கூறியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் விமர்சனம்.
 
 
 
ஹீரோ - வில்லன் இவர்களுக்குள் நடக்கும் சண்டை தமிழ் சினிமாவிற்கு பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் திரைக்கதையில் ஓரளவிற்கு விறுவிறுப்பை காட்ட முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் வினோத் குமார்.
 
வில்லன்களை எல்லாம் ஒரே இடத்திற்கு வரவழைத்து அழிப்பது என்பதை வேறு படத்தில் நாம் பார்த்திருப்பதாக தோன்றினாலும், விஷால் மற்றும் பீட்டர் ஹெயினின் அர்ப்பணிப்பு அதை மறக்கடிக்க வைக்கிறது.
 
 
 
ஆக்சன் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இந்தப் படம் அமையலாம்.   மொத்தத்தில் சண்டைக் காட்சிகளில் இவர்கள் காட்டியிருக்கும் விறுவிறுப்பையும், பரபரப்பையும், ஓரளவுக்கு திரைக்கதையில் காட்டி இருந்தால்கூட இது சாதாரண படமாக இல்லாமல் சிறப்பான படமாக அமைந்திருக்கும்" என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.
 
தமிழ் சினிமாவில் நாயகர்கள் ஒரு 50 பேரை அடிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர். அதாவது, 500 முதல் ஆயிரம் பேரை அடிக்கிறார் என்கிறது தினமணி நாளிதழின் விமர்சனம்.
 
 
 
"திரைக்கதை உருவாக்கத்தில் படம் முதல் பாதியில் வெற்றி பெற்றிருந்தாலும், இரண்டாம் பாதியில் ஓரளவே கைகொடுத்துள்ளது. வழக்கமான வகையில் திரைப்படம் தொடங்கினாலும் இடைவேளையில் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.  
 
இருந்தாலும் லாஜிக் என்ற ஒன்றை முழுவதுமாக தூக்கி ஓரமாக வைத்துவிட்டு எப்படி படமெடுக்க முடிந்தது என்பது மட்டும் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. அமைச்சரை மிரட்டும் வில்லன், காவலர் விஷாலை பழிவாங்க அவர் சீருடையைக் கழற்றும்வரையில் காத்திருப்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது.
 
பஞ்ச் வசனங்களால் நிறைந்தது தமிழ் சினிமா. இந்தப் படத்தில் நாயகனுக்கும் சேர்த்து வில்லன்கள் பஞ்ச் வசனங்களைப் பேசுகின்றனர்.
 
 
 
 இரண்டாம் பாதி முழுவதும் சண்டைக் காட்சிகள். நம்பும்படியாக சண்டைக் காட்சிகளை எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எப்போதுதான் இந்த சண்டையெல்லாம் முடியும் எனக் கேட்கத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்ல இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார்.
 
ஆம், வழக்கமாக தமிழ் சினிமாவில் நாயகன் ஒரு 50 பேர் வரை அடித்து காலி செய்வார். ஆனால் இந்தப் படத்திலோ நாயகன் விஷால் ஒரு 500 பேரிலிருந்து 1000 பேர் வரை கொலை செய்கிறார்.
 
"ஓடிக்கொண்டே இருக்கும் விஷால்"
 
இரண்டாம் பாதி முழுக்க ஓடிக் கொண்டே இருக்கிறார் விஷால். கண்ணில் அடி வாங்கிறார், கால்களில் இரும்பு கம்பியால் அடி வாங்கிறார், இரும்பு ஆணிகள் கால்களை பதம் பார்க்கின்றன. போதாததற்கு கத்தி குத்தும் வேறு வாங்குகிறார்.
 
இத்தனையையும் வாங்கி விட்டு வில்லனையும் கொன்றுவிட்டு இறுதியாக ஓரமாக நிறுத்தி வைத்திருக்கும் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்கிறார்.
 
ஹாலிவுட்டில் இருக்கும் ‘ஹல்க்’ கூட இவ்வளவு அடிவாங்கினால் இறந்து போயிருப்பார். ஆனால் புரட்சி தளபதி வீரநடை போடுகிறார். "இதெல்லாம் என்ன சார்?" எனக் கேட்கத் தோன்றுகிறது. விஷாலை பழிவாங்க வில்லன்கள் சேர்ந்துள்ளதை காவல்துறை அதிகாரியான முனீஸ்காந்த் மற்றும் சக காவலர்கள் அறிந்து கொள்வதாக காட்சிகள் வருகிறது. அறிந்து கொண்டவர்கள் எதற்காக அறிந்துகொண்டார்கள்? அவருக்கு உதவ ஏன் முன்வரவில்லை?. என்பது புரியவில்லை.
 
 
 
படம் முடியும் போது விஷால் அவரது மகனிடம், “இங்க நடந்ததெல்லாம் அம்மாகிட்ட சொல்லாதே” என்கிறார்.
 
இத்தனை அடியையும் வாங்கிவிட்டு வீட்டுக்கு போய் தடுக்கி விழுந்துவிட்டேன் என சொல்லப் போகிறார் போல" என்று விமர்சித்துள்ளது தினமணி.
 
ரசிகர்களை கவரும் நாயகன்
 
ஆனால், இந்தப் படத்தில் விஷாலின் நடிப்பை ஊடக விமர்சனங்கள் பாராட்டியுள்ளன.  
 
 
 
"திரையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு விழும் மக்களின் கைதட்டல்களில் விஷால் உழைப்பிற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
 
இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விடும் விஷால், சென்டிமென்டிலும் கலக்கியிருக்கிறார். மற்ற படங்களை விட இப்படத்தில்  மாஸ் காட்சிகளை குறைத்து, இயல்பான நடிப்பையே வெளிப்படுத்தி அதன் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் விஷால்." என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.
 
 
 
"நடுத்தர குடும்பத்தைச்சேர்ந்த கான்ஸ்டபிளை பிரதிபலிக்கும் விஷால், நடிப்பில் யதார்த்தத்தை கூட்டுகிறார். சென்டிமென்ட்டில் ஸ்கோர் செய்யும் அவரின் நடிப்பு தன் மகனுக்காக கெஞ்சும் இறுதிக்காட்சியில் மீட்டரைத் தாண்டியிருப்பதை உணர்த்துகிறது. அதேசமயம் கதாபாத்திரத்திற்கான உழைப்பையும், சண்டைக்காட்சிகளில் அவரது மெனக்கெடலும் திரையில் பளிச்சிடுகிறது. சுனைனா, பிரபு, மாஸ்டர் லிரிஷ் ராகவ், தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், ரமணா, வினோத் சாகர் கதைக்கு தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர்" என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
 
 
 
சுனைனா போன்றோரின் நடிப்பையும் பாராட்டியுள்ளது தினமணி.
 
"விஷாலுக்கு ஜோடியாக வரும் சுனைனா திரையை வசீகரிக்கிறார். நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் தோன்றும் அவரின் காட்சிகள் அழகாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.  அதேபோல துணைக் கதாபாத்திரங்களில் வரும் நடிகைகள் முனீஸ்காந்த், பிரபு, தலைவாசல் விஜய், மிஷா கோஷல் உள்ளிட்டவர்கள் மிகக்குறைந்த நேரமே திரையில் வருகின்றனர். எனினும் அதுவே போதுமானதாய் இருக்கிறது. வில்லனாக நடித்துள்ள நடிகர் ரமணா நன்றாகவே நடித்திருக்கிறார்" என்கிறது தினமணி நாளிதழின் விமர்சனம்.
 
 
 
ஊடக விமர்சனங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஆக்ஷன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கான ஒரு தேர்வாக இந்தப் படம் இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய வகை கொரோனா: இந்தியாவில் அதிரடியாய் வந்த மாற்றங்கள்!