Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை கொடூரமாக துன்புறுத்திய மகனுக்கு சிறை - ஆண்டுக்கணக்கில் காட்டிக்கொடுக்காத தாய்

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (23:31 IST)
தாயை கொடூரமாக துன்புறுத்திய மகனுக்கு சிறை - ஆண்டுக்கணக்கில் காட்டிக்கொடுக்காத தாய்
 
எச்சரிக்கை: இந்த கட்டுரையில் வரும் சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
 
பெற்ற தாய் என்றும் பாராமல் பட்டினிப் போட்டு, அடித்துத் துன்புறுத்திய மகனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 56 வார சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஏன்டி கோ ஜு ஹுவா (Andy Koh Ju Hua) என்ற அந்த 30 வயது நபர், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
 
தன் தாயை குளிக்கவோ, உரக்கப் பேசவோ, நல்ல ஆடைகளை அணியவோ அந்த மகன் அனுமதிக்கவில்லை என்பதும் முரட்டுத்தனமாக தன் தாயை தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
தேசிய பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு மேற்கொண்டபோது, தனது தாயை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார் ஏன்டி கோ ஜு ஹுவா.
 
அவருக்கு 50 வாரங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வாதிட்டது.
 
பெற்ற தாயை மோசமாக நடத்தியதுடன் மன ரீதியிலும் வேதனைப்படுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏன்டி கோ ஜு ஹுவாவின் மோசமான செயல்பாடு சிங்கப்பூரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
வீங்கிய முகத்துடன் 12 மணி நேரம் நிற்க வைத்து கொடுமை
ஒருமுறை தன் தாயின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார் ஏன்டி. இதனால் குத்துப்பட்ட இடம் வீங்கிப்போனது. இதையடுத்து ஐஸ் கட்டி மூலம் தமக்குத்தாமே ஒத்தடம் கொடுத்துக் கொள்ளுமாறு தன் தாயிடம் கூறியிருக்கிறார் ஏன்டி.
 
பாத்திரம் கழுவும் பகுதியில் தாயை நிற்க வைத்து கையில் ஐஸ் கட்டியை கொடுத்தவர், அடுத்த 12 மணி நேரங்களுக்கு அவரை உட்கார அனுமதிக்கவில்லை. தனது அறையில் இருந்தபடியே அந்த 68 வயது பெண்மணியை நோட்டமிட்டுள்ளார் ஏன்டி.
 
ஒத்தடம் கொடுக்கமால் இருந்தாலோ, உட்கார முயற்சி செய்தாலோ கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் மிரட்டியுள்ளார்.
 
சில சமயங்களில் தன் பேச்சைக் கேட்காவிட்டால் சுத்தியல் கொண்டு தாயின் பிறப்புறுப்பை அடித்து சிதைக்கப் போவதாகவும் கூறியுள்ளார். ஒருமுறை கோபத்தின் உச்சியில் கையில் கிடைத்த ஒரு ரிமோட் கன்ட்ரோல் கருவியை எடுத்து தாயின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட காயத்தின் வடு இன்றளவும் அந்த மூதாட்டியின் தலையில் உள்ளது.
 
கிழிந்து துணிகளை மட்டுமே அணிந்த மூதாட்டி
எந்த காரணத்தை முன்னிட்டும் வீட்டில் இருந்து தன் தாய் வெளியே தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார் ஏன்டி.
 
வீட்டின் அழைப்பு பொத்தானை (Calling Bell) யார் அடித்தாலும் அந்த மூதாட்டி பதிலளிக்கக் கூடாது. நல்ல மற்றும் புதிய ஆடைகளை அணியக் கூடாது, அண்டை வீட்டாரிடம் பேசக்கூடாது போன்றவை ஏன்டி பிறப்பித்த சில உத்தரவுகளாகும். அந்த மூதாட்டி எப்போதுமே கிழிந்த, பழைய ஆடைகளைத்தான் உடுத்தி வந்துள்ளார்.
 
ஏண்டி
குடிநீரைத் தவிர வேறு எந்த திரவத்தையும் அவர் பருக அனுமதி இல்லை. சில சமயங்களில் பட்டினி கிடந்துள்ளார்.
 
மகனின் இத்தகைய கொடுஞ்செயல்களை அந்த மூதாட்டி ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? காவல்துறையில் புகார் அளித்திருக்கலாமே? என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
 
சில தருணங்களில் ஏன்டியின் தாய் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அச்சமயங்களில் உறவினர்களது வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.
 
ஒருமுறை மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். மற்றொரு சமயம் பாதுகாப்பான இடத்தில் உறவினர்கள் தங்க வைத்துள்ளனர். எனினும் மீண்டும் தனது வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.
 
சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்
கொரோனா எதிர்ப்புத்திறன் குழந்தை: சிங்கப்பூரில் மருத்துவத்துறையை ஆச்சரியமூட்டிய பிரசவம்
மேலும் தன்னால் மகனுக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது, மகனின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அந்த மூதாட்டி காவல்துறையை அணுகவே இல்லை.
 
ஒவ்வொரு முறையும் மகனைக் காப்பாற்றிய மூதாட்டி
2017ஆம் ஆண்டில் இருந்துதான் தாயை துன்புறுத்த தொடங்கி உள்ளார் ஏன்டி. அடுத்த ஆண்டில் தன் தாயை பல மணி நேரம் மண்டியிட வைத்துள்ளார். இதையடுத்து தனது உறவினர் ஒருவரை உதவி கேட்டு தொடர்பு கொண்டுள்ளார் அந்த மூதாட்டி. மேலும் அடிவயிற்றில் வலிப்பதாகவும் கூறியுள்ளார்.
 
அந்த உறவினர் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்ற போது, அதை ஏற்க மறுத்த அந்த பாசத் தாய், மருத்துவமனைக்கு சென்ற போதும் கூட தாம் கால் தவறி கீழே விழுந்ததில் இடுப்பில் அடிபட்டதாக கூறி உண்மையை மறைத்துள்ளார்.
 
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலோக தாழ்ப்பாளைக் கொண்டு தாயை தாக்கியுள்ளார் ஏன்டி. இதில் மூதாட்டியின் பிறப்புறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. சில விஷயங்களால் தாம் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறி இவ்வாறு தாக்கியுள்ளார் ஏன்டி.
 
மகனைச் சமாளிக்க முடியாததால் வேறு வழியின்றி தனது சகோதரரை உதவிக்கு அழைத்திருக்கிறார் அந்த மூதாட்டி.நேரில் சென்று பார்க்கும்போது வீங்கிய முகத்துடனும் இடுப்புப் பகுதியில் ரத்தக் கரையுடனும் காட்சியளித்த மூதாட்டியைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் அவரது சகோதரர்.
 
இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நாசி எலும்பு முறிந்திருப்பதாகவும், உடலில் பல சிராய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ரத்தக் காயங்களாலும், மாதவிடாய்க்குப் பிறகு பெண்ணுறுப்பில் ஏற்பட்ட ரத்தப் போக்கினாலும் மூதாட்டிக்கு ரத்த சோகை இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
 
அவரது நிலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் நேரில் வந்தபோது கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி மகனைக் காப்பாற்றி உள்ளார் அவரது தாய்.
 
மனம் மாறாத மகன்; புகார் அளித்த தாய்
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் தனது போக்கை ஏன்டி கோ மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியேறி உறவினரிடம் தஞ்சம் புகுந்தார் அம்மூதாட்டி. இதையடுத்து அந்த உறவினர் 'குடும்ப வன்முறை' தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
 
மிகவும் பலவீனமாகவும் அழுக்காகவும் காட்சியளித்த அந்த 68 வயதான தாய், இம்முறை மகனைக் காப்பாற்ற முற்படவில்லை. தமக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் பெற்ற மகன்தான் முகத்தில் குத்தியதாக தெரிவித்தார். தமது தாடையும் உதடுகளும் வலிப்பதாக மூதாட்டி கூறியதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மகன் ஏன்டி மூன்று முறை தன் தாயின் முகத்தில் குத்தியது தெரிய வந்தது.
 
இதற்கிடையே, வழக்கு விசாரணையின்போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஏன்டி, தண்டனையைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
 
மேலும், தமது குற்றச்சம்பவங்கள் தொடர்பான சில தகவல்களை அவர் மறுத்தார். தம் வீட்டில் சுத்தியல் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தாம் இத்தகைய அறிவற்ற செயலில் ஈடுபட்டதற்கான காரணம் தமக்கே புரிபடவில்லை என்றார்.
 
மேலும், தமக்கு மனநலப் பிரச்னை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
ஏன்டி கோ தற்போது தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் விடுப்பு எடுத்த அவர், பின்னர் படிப்பைத் தொடர பல்கலைக்கழகத்துக்கு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஏன்டி கோவுக்கு 56 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
"நான் ஏன் இத்தகைய அறிவற்ற செயல்களில் ஈடுபட்டேன் என்று தெரியவில்லை. நான் என் படிப்பை தொடர விரும்புகிறேன். என் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். மேலும் மீதமுள்ள நாட்களில் அவரை நன்கு கவனித்துக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்," என்று கூறியுள்ளார் ஏன்டி கோ.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments