Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேல் – காசா வன்முறை: வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடத்தை தகர்த்த இஸ்ரேல்

இஸ்ரேல் – காசா வன்முறை: வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடத்தை தகர்த்த இஸ்ரேல்
, சனி, 15 மே 2021 (23:19 IST)
காசாவில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் இடம் பெற்றிருந்த கட்டடத்தை தகர்த்த இஸ்ரேல்.
 
காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல்.
 
இந்த தாக்குதல் சனிக்கிழமை பிற்பகல் நடந்தது.
 
முன்னதாக ஜலா டவர் என்ற அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ஜாவத் மெஹ்தியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி அந்தக் கட்டடத்தை தாக்கவிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் அதை காலி செய்துகொள்ளும்படியும் கூறியுள்ளார். இத்தகவலை ஜாவத் மெஹ்தி கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறியுள்ளது.
 
பத்திரிகையாளர்கள் தங்கள் கருவிகளை எடுத்துக்கொள்ள கூடுதலாக ஒரு பத்து நிமிடம் அவகாசம் தரும்படி ஜாவத் அந்த அதிகாரியிடம் கெஞ்சுவதை ஏ.எஃப்.பி. செய்தி முகமை பார்த்துள்ளது. ஆனால், மறுமுனையில் பேசிய அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.
 
கத்தார் அரசு நிதியுதவியோடு நடக்கும் அல் ஜசீரா செய்தி சானல், அந்த கட்டடம் வான் தாக்குதல் மூலம் தகர்க்கப்படுவதை நேரலையாக ஒளிபரப்பியது.
 
 
 
"அல் ஜசீரா மௌனமாகாது," என அந்த தொலைக்காட்சியின் ஆங்கில செய்தி வாசிப்பாளர் ஹல்லா மொஹிதீன் உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
 
இந்த கட்டடத்தில் இருந்து 11 ஆண்டுகளாகப் பணியாற்றிய அல் ஜசீரா செய்தியாளர் சஃப்வத் அல்-கஹ்லௌத் இந்த தாக்குதல் பற்றிக் கூறும்போது, "இந்தக் கட்டடத்தில் இருந்து பல நிகழ்வுகள் குறித்து செய்தி அளித்துள்ளோம். தொழில்முறை, தனிப்பட்ட அனுபவங்களை நேரலையாக அளித்துள்ளோம். எல்லாம் இப்போது இரண்டு நொடியில் அழிந்துவிட்டது" என்று கூறினார்.
 
 
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஹமாஸ் குழுவின் உளவுத்துறை அலுவலகங்களுக்கு சொந்தமான "ராணுவத்தின் ஆயுதங்கள்" இருப்பதாக தெரிவித்திருந்தது.
 
இருப்பினும் அந்த கட்டடத்தின் உரிமையாளர் ராணுவத்தை சேர்ந்த யாரும் அங்கு இருக்கவில்லை என்று காசாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபுவாலோஃபிடம் தெரிவித்துள்ளார்.
 
அந்த கட்டடத்தில் ஊடக நிறுவனங்களும், பிற வர்த்தகமும், 60 குடியிருப்புகளும் மட்டுமே இருந்தன என்றும் கட்டட உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரேலால் அழிக்கப்பட்ட கட்டடங்களில் இந்த கட்டடம் மிகப்பெரியது.
 
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் ஜென் சாக்கி, "நாங்கள் இஸ்ரேலை நேரடியாக தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது முக்கிய பொறுப்பு என தெரிவித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
 
ஐரோப்பாவில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக பேரணி
பாரிஸ் நகரில் கலவரம் வெடித்துவிடும் என பேரணி கலைக்கப்பட்டது.
பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,
பாரிஸ் நகரில் கலவரம் வெடித்துவிடும் என பேரணி கலைக்கப்பட்டது.
 
இதற்கிடையில் ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக பேரணிகள் நடைபெற்றன.
 
பிரான்ஸின் பாரிஸில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பேரணியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
 
இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை.
 
 
பெர்லினில் நடைபெற்ற பேரணி
 
இருப்பினும் பிற நகரங்களான லியான் மற்றும் மார்செலேயில் நூற்றுக்கணக்கானவர்கள் அமைதியான பேரணியில் ஈடுபட்டனர்.
 
ஸ்பியினின் மெட்ரிட் நகரிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களையும், பாட்டில்களையும் தூக்கி அடித்தனர்.
 
லண்டனிலும் "பாலத்தீனத்தை விடுவிக்க வேண்டும்" என்ற முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். மேலும் இஸ்ரேல் வான் தாக்குதலை நிறுத்த வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். பிரிட்டன் அரசு இதில் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள்.
 
என்ன சொல்கிறது இஸ்ரேல்?
பென்னி
பட மூலாதாரம்,REUTERS
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், மேற்கு கரையில் பாலத்தீனத்துடன் மோதல் அதிகரிப்பதை தாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
 
"நான் ஜூடே மற்றும் சமாரியாவில் உள்ள பாலத்தீனர்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன், ஜூடே மற்றும் சமாரியாவில் எந்த பதற்றத்தை உருவாக்கவும் இஸ்ரேல் விரும்பவில்லை. இருப்பினும் எந்த ஒரு சூழலுக்கும் தயாராகவே உள்ளது," என தெரிவித்துள்ளார். ஜூடே மற்றும் சமாரியா என்பது மேற்கு கரையின் விவிலிய பெயர் ஆகும்.
 
"காசாவில் ஹமாஸ் குழுவினரால் மக்கள் துயரப்படுகின்றனர். ஜூடே மற்றும் சமாரியாவில் உள்ள பாலத்தீனியர்கள் அமைதியையும், நிலையான பொருளாதாரத்தையும் அனுபவிக்கலாம்," என அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கடந்த தினத்தில் ஹமாஸ் ஒரு பெரிய விலையை கொடுக்க நேர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
என்ன பிரச்னை?
சனிக்கிழமை காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை நடத்தியது. பாலத்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகனைகளை ஏவினார்கள்.
 
கடந்த ஐந்து நாட்களாக நடந்து வரும் இந்த தாக்குதல், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வன்முறை என குறிப்பிடப்படுகிறது.
 
கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இந்த தாக்குதல், கிழக்கு ஜெருசலேம் நகரத்தில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னையால் அதிகரித்தது.
 
இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் என இருதரப்பினருமே புனித தளமாகக் கருதும் இடத்தில், இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலால், பகைமை அதிகரித்தது.
 
இஸ்ரேல் காசா மோதல்
பட மூலாதாரம்,GETTY IMAGES
அந்த இடத்திலிருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை எச்சரித்த பிறகு, ஆயுதமேந்திய இஸ்லாமிய போராளிகள் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகனைகளை ஏவியது. பதிலுக்கு இஸ்ரேலும் பாலத்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தியது.
 
இந்த தாக்குதலில் 133 பேர் காசாவிலும், எட்டு பேர் இஸ்ரேலிலும் உயிரிழந்து இருக்கிறார்கள். சனிக்கிழமை நடந்த ஒரு விமானப் படை தாக்குதலில், மேற்கு காசா நகரத்தின் அகதிகள் முகாமில் தங்கி இருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக பாலத்தீன மருத்துவ அமைப்பு கூறுகிறது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம்.
 
காசாவிலிருக்கும் போராளிகள் இஸ்ரேலின் பீர்ஷிபா நகரத்தைக் குறி வைத்து தாக்கினார்கள்.
 
வெள்ளிக்கிழமை, இந்த மோதல் மேற்கு கரைக்கு பரவியது. அதில் குறைந்தபட்சமாக 10 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டார்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கிறார்கள். இஸ்ரேல் படையினர் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், உண்மையான துப்பாக்கி குண்டுகள் போன்றவைகளைப் பயன்படுத்தினர். பாலத்தீனர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞர்களை ஊக்குவிக்க விளையாட்டு குழுக்கள்