Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்; பதில் நடவடிக்கை எடுத்தோம்' - சீன ராணுவம்

Advertiesment
'இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்; பதில் நடவடிக்கை எடுத்தோம்' - சீன ராணுவம்
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (09:08 IST)
இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு கரையை ஒட்டி அமைந்துள்ள ஷெண்பாவோ மலைப் பகுதி அருகே மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை , திங்களன்று இந்திய ராணுவம் சட்டவிரோதமாக கடந்து வந்தது என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருந்த சீன ராணுவ ராணுவ வீரர்களை நோக்கி இந்தியப் படையினர் எச்சரிக்கையாக துப்பாக்கியால் சுட்ட பின்பு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீன எல்லை பாதுகாப்பு படையினர் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்றும் சீன ராணுவத்தின் வெஸ்டன் தியேட்டர் கமாண்ட்-ன் செய்தி தொடர்பாளர் சீனியர் கர்னல் சாங் ஷூலி தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையாக துப்பாக்கியால் சுடுவது என்பது பதற்றமான சூழல்களில், எதிர்த்தரப்பை நோக்கி சுடாமல், வானை நோக்கிச் சுடுவதாகும்.

இந்தியப் படையினர் சட்டவிரோதமாக மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து வந்தது இந்தியா மற்றும் சீனா இடையே உள்ள ஒப்பந்தங்களை கடுமையாக மீறும் செயல்; இது அப்பிராந்தியத்தில் பதற்றநிலை தூண்டுவதுடன், தவறான புரிதல்கள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியா மற்றும் சீனா இடையேயான 3,488 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைக்கோடு மெய்யான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு என்று கூறப்பட்டாலும், இதற்கென தெளிவான வரையறை எதுவும் இல்லை.

சீனா ஒரு கோட்டையும் இந்தியா ஒரு கோட்டையும் எல்லைக் கோடு என்று கருதுகின்றன.

இதன் காரணமாக இரண்டு நாடுகளுமே எல்லையில் இருக்கும் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்று இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கருதுகின்றன.

தங்கள் பிராந்தியம் என்று கூறி இந்திய ராணுவம் சீன ராணுவம் ஆகிய இரு நாட்டு ராணுவங்களும் ஒரே பகுதிக்கு ரோந்து செல்லும் போது ஒருவரையொருவர் எதிர் கொள்ளும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சாங் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்த இந்திய படையினரை உடனடியாக பணிநீக்கம் செய்து எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தங்கள் படையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்தியாவை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சீனப் படையினரை தூண்டும் விதமாக துப்பாக்கி பயன்பாடு நிகழ்த்திய இந்தியப்படையினர் மீது விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாது என்று இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை
இந்தியா - சீனா இடையே 3,500 கி.மீ எல்லை உள்ளது, இரு நாடுகளும் தற்போதைய எல்லையின் நிலையை ஏற்கவில்லை. இந்த இரு நாடுகளுக்கும் இடையே 1962-இல் ஒரு போரும் நடந்துள்ளது.

முன்னதாக, ஜூன் 15 அன்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாடுகளின் வீரர்கள் கடுமையாக மோதிக் கொண்டார்கள். அதில் 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். அப்போது முதல் எல்ஏசி பகுதிகளில் பதற்றத்தை குறைக்க இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் பதற்றங்கள் இன்னும் தணியாமல் இருப்பது இன்றைய சம்பவம் மூலம் உறுதியாகியிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், எல்ஏசி எனப்படும் அசல் கட்டுப்பாட்டு கோடு சம்பவம், சீனாவுடன் 1962ஆம் ஆண்டில் ஏற்பட்ட பதற்றத்துக்கு பிந்தைய மிக மோசமான நிலைமை என்று கூறியிருந்தார்.

"இது நிச்சயமாக 1962 க்குப் பிறகு மிக மோசமான நிலைமை. 45 ஆண்டுகளுக்குப் பிறகும், சீனாவுடனான மோதலில் ராணுவ உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எல்லையில் இரு தரப்பிலிருந்தும் துருப்புக்களை அனுப்புவது முன்னெப்போதும் இல்லாதது."

எல்லையில் சமாதானத்தை ஏற்படுத்துவது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான சம உறவுகளில்தான் சாத்தியமாகும் என்று இந்தியா சீனாவிடம் கூறியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

3 பெரிய காரணங்கள்
சீனாவின் பண்டைய ராணுவ தளபதி சுன் ஜூ, இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 'The Art of War' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார், "எதிரிகளிடம் சண்டையிடாமல் தோற்கடிப்பதே சிறந்த போர்க் கலையாகும்."

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் சாணக்கியரின் கொள்கைகள் முன்னோடியாக கருதப்படுவது போலவே, இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை சீனர்கள் இன்றும் பின்பற்றுகின்றனர்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்போது நடந்து வரும் எல்லை பதற்றத்தைப் புரிந்து கொள்ள, 'சிறந்த போர் கலை' என்ற இந்த உத்தியையும் மனதில் கொள்வது அவசியமாகும்.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: சமீபத்திய மோதலுக்கு 3 பெரிய காரணங்கள் உள்ளன அவை என்ன என்பதை இந்தக் கட்டுரை விரிவாக விவரிக்கிறது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு ஆபத்து தான்... எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்!