Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா, ரஹானே: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (21:30 IST)
சிவக்குமார் உலகநாதன்
 
ஆண்டிகுவாவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெற்றி பெற 419 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் போட்டி என்பதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே இருந்தது.
 
இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் தனது அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தார்.
 
ஆட்டத்தின் முதல் நாளில் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக சூழல் இருந்தது.
 
மாயங்க் அகர்வால் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் 5 மற்றும் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருநாள் போட்டிகளில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
 
கே. எல். ராகுல் 44 ரன்கள் எடுக்க, ரஹானே மட்டும்தான் இந்திய பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தார். 10 பவுண்டரிகளின் துணையுடன் அவர் 81 ரன்கள் எடுத்தார்.
 
ஜடேஜா அரைசதம் எடுத்தார். இறுதியில் தனது முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்கள் எடுத்தது.
 
இஷாந்தின் மிரட்டல் பந்துவீச்சு
 
தொடர்ந்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் இருந்து திணறியது.
 
மிக துல்லியமான பந்துவீச்சு மற்றும் அதிரடி பவுன்சர்களால் மேற்கிந்திய தீவுகள் அணியை நிலைகுலைய வைத்த இஷாந்த் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தனது முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 222 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
தனது இரண்டாவது இன்னிங்சில் அதிரடி மற்றும் நிதான ஆட்டம் கலந்து இந்தியா நம்பிக்கையுடன் தொடங்கியது.
 
சதமடித்த ரஹானே: விஹாரி 93 ரன்கள்
விராட் கோலி அரைசதம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் பொறுமையாக விளையாடிய ரஹானே சதமடித்தார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய விஹாரி 93 ரன்கள் எடுத்தார்.
 
7 விக்கெட்டுகள் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்தது.
 
இதனால் வெற்றிபெற 419 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இமாலய இலக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
மிக பெரிய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே நிதானமின்றி விளையாடினர். அந்த அணியின் பல பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.
 
குறிப்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஐஸ்ப்ரீத் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சை மேற்கிந்திய தீவுகள் அணியால் சமாளிக்கமுடியவில்லை
 
எட்டு ஓவர்கள் பந்துவீசிய பும்ரா 7 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இந்தியாவின் வெற்றியை மேலும் எளிதாக்கியது..
 
இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் என தான் விளையாடிய அனைத்து வெளிநாடுகளிலும் 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
 
ரஹானே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
 
பும்ரா, இஷாந்த், முகமது ஷமி ஆகிய மூன்று இந்திய வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசியது ஒருபுறம் இருந்தாலும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் இந்த போட்டியில் மிக மோசமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.
 
419 ரன்கள் என்பது இமாலய இலக்கு என்றாலும் மேற்கிந்திய தீவுகள் அணி இலக்கை நோக்கி செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை, மிகவும் மோசமான ஷாட்கள், விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்த வண்ணம் இருந்தபோதும், அதனை தடுத்து நிறுத்த எந்த பேட்ஸ்மேனும் முயலவில்லை.
 
டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்று ஒருகாலத்தில் அனைத்து நாடுகளுக்கும் மேற்கிந்திய பேட்ஸ்மேன்கள் கற்றுத்தந்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் 'அது பழைய காலம், அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்பதுபோல அந்த அணியின் பேட்டிங் இருந்தது.
 
அதிரடி பேட்டிங் மற்றும் அதே சமயத்தில் விக்கெட்டுகளை தக்கவைத்து அதிக அளவில் ரன்கள் குவிப்பது, பிறகு தங்கள் புயல்வேக பந்துவீச்சாளர்கள் மூலம் எதிரணியை நிலைகுலைய வைத்து பெரும் வெற்றி பெறுவது என்பதே 70, 80 மற்றும் 90களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றி ஃபார்முலாவாக இருந்தது.
 
ஹெயின்ஸ், ரிச்சர்ட்ஸ், லாரா, ரிச்சர்ட்ஸன், ஹூப்பர் போன்ற பேட்ஸ்மேன்கள் எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர்.
 
லாரா
பிற்காலத்தில் சந்தர்பால், சேர்வான், கெயில் போன்றோர் தங்களால் முடிந்தளவு மேற்கிந்திய தீவுகள் அணியின் பாரம்பரியத்தை காப்பாற்றினார்.
 
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
 
காலியான இருக்கைகள் நிரம்பிய மைதானங்கள் மேற்கிந்திய தீவுகள் அணியின் எதிர்கால கிரிக்கெட்டை குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை எதிர்காலத்தில் கேள்விக்குறியாக ஆக்கியுள்ளது.
 
முன்னதாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள், போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
 
டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments