Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபிக்கு உடனே ஜாமீன் - என்ன நடந்தது?

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (21:26 IST)
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு. இந்த உத்தரவு வெளியான சற்று நேரத்திலேயே அவருக்கு ஜாமீன் வழங்கி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்.
 
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் இருந்தபோது, அவருடன் பணியிலிருந்த சக பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து ராஜேஷ்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 
இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ராஜேஷ்தாஸ் குற்றவாளி என நீதிபதி உத்தரவிட்டார்.
 
இன்று அதிகாலை முதலே வழக்கத்தை விட சற்று பரபரப்பாக இருந்தது விழுப்புரம் நகரத்தின் மையத்திலிருக்கும் மாவட்ட நீதிமன்ற வளாகம்.
 
பாதுகாப்புக்காக நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காலை முதல் பரபரப்பாக காணப்பட்ட விழுப்புரம் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபியும், எஸ்பி கண்ணன் இருவரும் 10 மணிக்கு காரில் வந்து இறங்கினர்.
 
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி புஷ்பராணி காலை 11.20 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
 
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராம் விதிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த எஸ்பி கண்ணனுக்கு 500 ரூபாயை அபராதமாக விதித்தார் நீதிபதி.
 
கடந்த 2021ஆம் ஆண்டு பணியிலிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சிறப்பு டிஜிபி மீது தமிழக அரசின் உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக புகார் அளிக்க சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை நடுவழியில் தடுத்து நிறுத்தி கார் சாவியை பிடுங்கி, முன்னாள் டிஜிபிக்கு உதவியதாக அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
 
விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி இந்த வழக்கை விசாரணை செய்தார். வழக்கு தொடர்பாக 68 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
 
அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணைக்கு பிறகு தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர்.
 
இதையடுத்து இவ்வழக்கில் வருகிற 16-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி அறிவித்திருந்தார்.
 
இன்று காலை அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் ராஜேஷ்தாஸ் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
 
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது 345(1), 352/A, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த பிரிவுகளின் கீழ் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இரண்டு பிரிவின் கீழ் தலா பத்தாயிரம், மற்றொரு பிரிவின் கீழ் 500 ரூபாய் அபராதம் என மொத்தமாக 20 ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
 
டிஜிபிக்கு உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணன் என்பவருக்கு 341 பிரிவின்கீழ் ரூ.500 மட்டும் அபராதம் விதித்து, விழுப்புரம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
 
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
 
அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.
 
அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் உடன் பணியிலிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் முன்வைக்கப்பட்டது.
 
தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டரீதியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 
இந்த புகார் தொடர்பாக சிறப்பு டிஜிபி மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
 
இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது.
 
138 முறை இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது.
 
அதுபோல் முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆகியோரின் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
 
அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர்.
 
அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வக்கீல் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் வக்கீல் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
 
இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
 
கடந்த 2 வருடமாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
 
பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் இரண்டு பிரிவுகளில் தலா பத்தாயிரம் ரூபாய் உட்பட மொத்தம் 20, 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூபாய் 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
தீர்ப்பு குறித்து பேசிய அரசு வழக்கறிஞர் அம்ஜத் அலி , நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
 
“பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்யவும் வழி உள்ளது,” என்று தெரிவித்தார்.
 
தொலைந்து போன ஆவணங்கள்
 
வழக்கு விசாரணை நடந்து வந்தபோது வழக்கின் ஆவணங்கள் தொலைந்ததாக அதிகாரிகளால் கூறப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தாண்டி, சிறை தண்டனை விதிக்கப்பட்டது நிச்சயம் நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்க உதவியாக இருக்கும் என்று வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டாளருமான லூசியா தெரிவித்தார்.
 
“இந்த சமூகத்தில் பெண் எந்த நிலையில் இருந்தாலும் போராடித்தான் நீதியை பெற வேண்டியிருக்கிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கும் இதே நிலைதான் இருக்கிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யும்போது தீர்ப்பு மாற்றி அளிக்கப்படும். அத்தியூர் விஜயா போன்ற வழக்குகள் இதற்கு உதாரணம். அதுபோல எதுவும் இந்த வழக்கில் நடக்கக்கூடாது,” என்று லூசியா கூறினார்.
 
மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு ஜாமீனும் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்.
 
ஜூலை 17ஆம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதி புஷ்பராணி 30 நாட்களுக்குள் விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்