Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கு கயிறுகள் தயாரித்துக் கொடுத்த சிறை: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கா?

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (14:13 IST)
நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை வரும் ஜனவரி 22ஆம் தேதி நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிகாரில் உள்ள சிறை ஒன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான 10 கயிறுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளது.
 
2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் அந்தக் கயிறுகளைத் தயாரிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, டிசம்பர் 14ஆம் தேதி அவை அந்த மாநிலத்தின் சிறைத்துறை இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
"தூக்கிலிடுவதற்கான கயிறுகளைத் தயாரிக்கும் நீண்ட பாரம்பரியம் பக்சர் சிறைச் சாலைக்கு உள்ளது. இங்கு தயாராகும் கயிறுகள் பயன்படுத்தப்படுமா என்று தெரியவில்லை. இவை வலிமையானவை என்றாலும் மெல்லிய பஞ்சை கொண்டு தயாரிக்கப்படுவதால் நீண்ட காலம் இருக்காது," என்று அந்த சிறையின் கண்காணிப்பாளர் விஜய் குமார் அரோரா பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஒரு கயிறைத் தயாரிக்க மூன்று நாட்கள் தேவைப்படும். குறைவான அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, பெரும்பாலும் கைகளாலேயே அவை செய்யப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
 
கடைசியாக இங்கு உற்பத்தி செய்யப்பட்ட கயிறு ஒன்றின் விலை 1,725 ரூபாய் என்றும் சந்தை நிலவரத்தைப் பொறுத்து அது மாறும் என்று அவர் கூறியுள்ளார்.
 
குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டவுடன் முடிச்சு அவிழாமல் இருக்கும் வகையிலும், கழுத்தைச் சுற்றி இறுக்கமாக இருக்கும் வகையிலும் இந்தக் கயிறுகள் தயாரிக்கப்டுகின்றன.
 
"152 இழைகளைக் கொண்ட நூல் இவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தூக்குக் கயிற்றில் சுமார் 7000 நூலிழைகள் இருக்கும்," என்று விஜய் குமார் அரோரா கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கும் இங்கு தயாரிக்கப்பட்ட தூக்குக் கயிறு மூலமாகவே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்கிறது பி.டி.ஐ செய்தி.
 
நிர்பயா வழக்கின் பின்னணி
2012 டிசம்பர் 16: டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.
 
2012 டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.
 
2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
 
2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
 
2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
 
2017 மே: டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
 
2019 டிசம்பர்: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஏற்கனவே பிற கைதிகளின் மறு ஆய்வு மனுக்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.
 
2020 ஜனவரி 7: ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்