Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் மோதல்: '3 நாட்களில் 27 குழந்தைகள் பலி' - போர்க்கள நிலவரம் பற்றி ஐநா தகவல்

ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் மோதல்: '3 நாட்களில் 27 குழந்தைகள் பலி' - போர்க்கள நிலவரம் பற்றி ஐநா தகவல்
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (13:41 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டையின்போது, கடந்த மூன்று நாட்களில் மட்டும் குறைந்தது 27 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது.

"குழந்தைகளுக்கு எதிரான கடுமையான உரிமை மீறல்கள் மிகவும் விரைவாக அதிகரித்து வருவது" அதிர்ச்சியளிப்பதாகக ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் கூறியுள்ளது.

தாலிபன்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாகாணங்களின் தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறி பிறகு பல பகுதிகளிலும் அவர்கள் முன்னேறி வருகின்றனர்.

சண்டையை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச அழைப்புகளை தாலிபன்கள் நிராகரித்துவிட்டனர்.

கடந்த மாதத்தில் மட்டும் தாலிபன்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த மூன்று நாட்களில் கந்தஹார், கோஷ்ட் மற்றும் பக்தியா ஆகிய மூன்று மாகாணங்களில் 27 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் சுமார் 136 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்று யுனிசெஃப் கூறுகிறது.

"பூமியில் மிக மோசமான இடங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருந்து வந்தது. ஆனால் சமீபத்திய வாரங்களில், குறிப்பாக கடந்த 72 மணிநேரங்களில் அது மிகவும் மோசமாகிவிட்டது" என்று யுனிசெஃப் ஆப்கானிஸ்தானின் சமந்தா மோர்ட் பிபிசியிடம் கூறியுள்ளார்.

பெரும்பாலும் சாலையோர குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தூங்கிக்கொண்டிருந்தபோது வீடு குண்டுவீச்சில் சிதறியதாக ஒரு தாய் யுனிசெஃப் பிரதிநிதியிடம் கூறினார். அந்தச் சம்பவத்தில் தனது 10 வயது மகனுக்கு "பயங்கரமான தீக்காயங்கள்" ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தாக்குதலுக்கு அஞ்சி பல குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் வெட்டவெளியில் தூங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது..

குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்துத் தரப்பினருக்கும் யுனிசெஃப் அழைப்பு விடுத்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் இப்போது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன். அமெரிக்கா தலைமையிலான படைகள் 20 ஆண்டு ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டுவிட்டன.

அதன் பிறகு தாலிபன்கள் வேகமாக கிராமப்புறங்களை கைப்பற்றினர், இப்போது பெரு நகரங்களைக் குறிவைத்துள்ளனர்.

அண்மையில் மிக முக்கியமான வடக்கு நகரமான குண்டூஸை தாலிபன்கள் கைப்பற்றினர்.

270,000 மக்கள் வசிக்கும் இந்த நகரம் கனிம வளம் நிறைந்த வடக்கு மாகாணங்களுக்கான நுழைவாயிலாக கருதப்படுகிறது. இது தஜிகிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது, அபின் மற்றும் ஹெராயின் கடத்தலுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

2001க்கு முன்னர் இது தாலிபன்களுக்கு ஒரு முக்கிய வடக்கு கோட்டையாக இருந்தது. அதை மீண்டும் கைப்பற்றியிருப்பது முக்கிய மைல்கல்லாகக் கவனிக்கப்படுகிறது. இந்த நகரத்தை தாலிபன்கள் 2015 மற்றும் 2016 இல் கைப்பற்றினர், ஆனால் அதை நீண்ட காலமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை.

ஆஃப்கனில் இப்போது மோதல் ஏன்?

இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு தாலிபன்களின் அரசு புகலிடம் தருவதாகக் கூறி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.

அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அதன் பின்னரே ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன. வெளிநாட்டுப் படைகளின் இருப்பால் தாலிபன்கள் கை ஓங்காமல் இருந்தது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.

இரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனான எல்லைக் சாவடிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளர்.

எல்லைச் சாவடிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் வரும் வாகனங்கள் கொடுக்கும் கலால் வரி மூலம் தாலிபன்கள் பெருமளவு பொருள் ஈட்ட முடியும்

இந்த அமைப்பு எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளிலும் கைப்பற்றியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்களுக்கு தக்காளி சாதம், ரோஸ் மில்க்!