Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காவது திருமணத்திற்கு பெண் தேடும் 60 குழந்தைகளின் தந்தை

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (23:08 IST)
பாகிஸ்தானின் ஹாஜி ஜான் முகமதுவிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று 60வது குழந்தை பிறந்தது. இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
 
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவை சேர்ந்த சர்தார் ஹாஜி ஜான் முகமது தனது 60வது குழந்தை கடந்த ஞாயிறு அன்று பிறந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
 
பிபிசியிடம் பேசிய அவர், தனது குழந்தைகளில் 55 பேர் உயிருடன் இருக்கும் நிலையில், ஐந்து குழந்தைகள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஆகிவிட்டதாகக் கூறினார். ஜான் முகமது 60 குழந்தைகளையும் தனது 3 மனைவிகள் மூலம் பெற்றுள்ளார்.
 
இவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதோடு நின்று விடமாட்டேன், அல்லாஹ் விரும்பினால் இன்னும் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வேன் என்றார். இதற்காக அவர் நான்காவது திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளார். 50 வயதான சர்தார் ஜான் முகமது கான், குவெட்டா நகரின் கிழக்கு பைபாஸ் அருகே வசிக்கிறார். மருத்துவராகப் பணியாற்றும் இவர், அதே பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். 60வது குழந்தையாக மகன் பிறந்துள்ளதாகவும் அவனுக்கு குஷால் கான் எனப் பெயரிட்டுள்ளதாகவும் ஹாஜி ஜான் தெரிவித்தார். "குஷால் கானின் தாயை அவர் பிறப்பதற்கு முன்பே உம்ராவுக்கு அழைத்துச் சென்றேன், எனவே நான் அவரை ஹாஜி குஷால் கான் என்று அழைக்கிறேன்," என்றார் அவர். தனது 60 குழந்தைகளின் பெயர்கள் நினைவிருக்கிறதா என்று கேட்டதற்கு, 'ஏன் இல்லை? நியாபகம் இருக்கிறது' என்று பதில் கூறினார். 2050ஆம் ஆண்டில் உலகின் மொத்த மக்கள்தொகை வளர்ச்சியில் ஐம்பது சதவீத பங்களிப்பை வழங்கும் உலகின் எட்டு நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 1960களில் இருந்து உலகளவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. 2020இல் இந்த விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது, பாகிஸ்தானில் இது 1.9 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது.
 
 
நான்காவது திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அதற்காகப் பெண் தேடி வருவதாகவும் சர்தார் ஜான் முகமது தெரிவித்தார்.
 
அவர், "எனது நான்காவது திருமணத்திற்குப் பெண் தேட உதவுமாறு எனது நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். வயதாகிக் கொண்டே போகிறது. எனவே விரைவில் நான்காவது திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்," என்றார்.
 
அதிக குழந்தைகளைப் பெற விரும்புவது தனது விருப்பம் மட்டுமல்ல, தனது மனைவிகளும் அதையே விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். ஜான் முகமது கூறுகையில், தனது சில மகன்கள் மற்றும் மகள்கள் 20 வயதுக்கு மேல் உள்ளனர். ஆனால் அவர்கள் படித்துக் கொண்டிருப்பதால் அவர்கள் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிவித்தார்.
 
நெருக்கும் நிதி நிலைமை
 
ஹாஜி ஜான் முகமது தனக்கு பெரிய தொழில் எதுவும் இல்லை என்றும் கிளினிக்கில் வரும் வருமானம் தான் குடும்பத்தைப் பராமரிக்க உதவுகிறது என்றும் கூறினார். இதற்கு முன்பு குழந்தைகளின் செலவுகள் தொடர்பாக அதிக சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கவில்லை என்றும் ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சில நிதி சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், "வியாபாரம் ஸ்தம்பித்துள்ளது. மாவு, நெய், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, அனைத்து பாகிஸ்தானியர்களும் சிரமங்களை எதிர்கொள்கிறோம்,” என்று வருத்தம் தெரிவித்தார்.
 
 
தனது குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தனது கடமை என்றும் அவர்களுக்காக யாரிடமும் உதவி கேட்காமல், தனது கடின உழைப்பால் செலவுகளை ஈடுகட்ட முயல்வதாகவும் கூறினார். ஹாஜி ஜான், அனைத்து குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, தன் குழந்தைகளின் கல்விக்காகவும் அதிக பணம் செலவழித்து வருவதாகக் கூறினார். "குழந்தைகளின் செலவுகள் தொடர்பாக யாரிடமும் உதவி கோரவில்லை. ஆனால் எனது குழந்தைகள் குடிமக்கள் என்ற உரிமையை அரசிடம் இருந்து பெற வேண்டும்," என்று அவர் கூறினார்.
 
'குழந்தைகளுக்கு பஸ் வேண்டும்'
 
சர்தார் ஜான் முகமது, தானும் பயணம் செய்வதை விரும்புவதாகவும் தனது குழந்தைகள் பாகிஸ்தான் முழுக்கச் செல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார். தனது பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தபோது அவர்களைக் காரில் ஏற்றிச் செல்வது இலகுவாக இருந்ததாகவும் தற்போது அவர்களை காரில் ஏற்றிச் செல்வது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்தார். எனவே குழந்தைகள் பயணம் செய்ய அரசு உதவ வேண்டும் என்று அவர் கூறினார். "அரசு சார்பாக எனக்கு ஒரு பஸ் கொடுத்தால், என் குழந்தைகளை பாகிஸ்தான் முழுவதும் எளிதாக அழைத்துச் செல்ல முடியும்," என்று ஜான் முகமது கூறுனார். பலுசிஸ்தானில் அதிக குழந்தைகளுக்கு தந்தை என்ற பெருமையுடன் இருக்கும் இரண்டாவது நபர் சர்தார் ஜான் முகமது தான். இவருக்கு முன்னதாக, பலுசிஸ்தானின் நுஷ்கி மாவட்டத்தில் உள்ள அப்துல் மஜீத் மெங்கல் என்ற நபர் 6 திருமணங்களைச் செய்து 54 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
 
அப்துல் மஜீத் மெங்கல் கடந்த மாதம் தனது 75வது வயதில் காலமானார். அவரது இரண்டு மனைவிகளும் 12 குழந்தைகளும் அவர் வாழ்ந்த காலத்திலேயே இறந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments