Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5000 பாம்புகளை மீட்டிருக்கும் தந்தை, மகள் : சினிமா ஒளிப்பதிவாளர் சமூக ஆர்வலராக மாறியது எப்படி?

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (13:36 IST)
”நாம் வாழும் இந்த பூமிக்கு இதற்கு முன்னதாக நாம் வந்திருக்கிறோமா என்று நமக்கு தெரியாது, இதற்கு பிறகு மற்றொரு முறை வருவோமா என்பதும் நமக்கு தெரியாது. எனவே இருக்கும் இந்த ஒரு வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும். நம்மை ஈர்க்கும் அனைத்து விஷயங்களுக்குள்ளும் இறங்கி முயற்சித்து விட வேண்டும்” என்கின்றனர் முத்துபாண்டியும், அவரது மகள் ஹரிணியும்.

சென்னை, ரெட் ஹில்ஸ் பகுதிக்கு 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் பண்டிக்காவனூர் ஊராட்சியில், `ஆனந்த இல்லம்’ என்ற பெயரில் ஹெச்.ஐ.வி., குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தை கவனித்துகொள்ளும் பொறுப்பில் 30ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார் முத்துபாண்டி. ஒரு காப்பகத்தைக் கவனித்துகொள்ளும் பொறுப்பில் இருந்துகொண்டே இதுவரை அவர் 5000 பாம்புகளை மீட்டிருக்கிறார்; அவரது மகள் ஹரிணி 19 வயதில் 500 பாம்புகளை மீட்டிருக்கிறார். யார் இவர்கள்? இது எப்படி சாத்தியமானது?

மனம் போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்

”எனது சொந்த ஊர் தூத்துக்குடி. ஆனால் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போது நான் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தேன். அதேசமயத்தில் சிறு சிறு பத்திரிக்கைகளுக்கு நேர்காணல்கள் எடுத்துகொடுக்கும் வேலைகளும் செய்து வந்தேன். அப்படி நேர்காணலுக்காக நான் சென்ற ஒரு இடம்தான் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்று பிபிசியிடம் பேசத் துவங்குகிறார் முத்துபாண்டி.

அவர் தொடர்ந்து பேசுகையில், “அது 1993ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் அப்போதுதான் ஹெச்.ஐ.வி., பற்றி மக்களுக்கு அறிமுகமாகிறது. அனைவரும் அந்த நோய் குறித்து அச்சமும், வெறுப்பும் அடைந்திருந்த நிலையில் மனோரமா என்ற மருத்துவர் ஒருவர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சிகிச்சையளிக்க வேண்டுமென முயற்சி செய்தார். அவரை நேர்காணல் செய்வதற்காகத்தான் நான் சென்றிருந்தேன். ஆனால் அந்த நேர்காணலில் அவரது கருத்தை உள்வாங்கிய எனக்கு, அவருடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயணிக்க வேண்டுமென தோன்றியது.

அந்த நேர்காணல் முடிந்த பிறகு, `பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியில், நான் உங்களுக்கு இறுதிவரை துணையாக இருப்பேன்` என்று வாக்குறுதியளித்தேன். அதன் அடிப்படையிலேயே இன்றுவரை எனது பயணம் தொடர்கிறது” என்று கூறுகிறார் முத்துபாண்டி.

“ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியான சூழலில் வளர்வதற்கு, புறநகர் பகுதியில் காப்பகத்தை அமைப்பதற்கு முடிவு செய்து, பண்டிக்காவனூர் ஊராட்சியை தேர்ந்தெடுத்தோம். குழந்தைகள் நிம்மதியாக, அவர்களுக்கு பிடித்த வகையில் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் அது புறநகர் பகுதி என்பதால், அங்கே பாம்புகள் வந்தன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நானே பாம்புகளை மீட்டு வெளியே கொண்டுபோய் விட ஆரம்பித்தேன். தொடர்ந்து அடிக்கடி பாம்புகள் வர ஆரம்பித்தன. அதனால் பாம்புகளை பிடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நுட்பமான விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

எங்கள் காப்பகத்திற்கு வரும் பாம்புகளை நான் கையாள்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களது வீடுகளுக்குள் வரும் பாம்புகளையும் மீட்பதற்காக அழைத்தனர். அப்படியே 30கிமீ சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாம்புகளை கண்டால், என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். எனக்கும் இதில் ஈடுபாடு இருந்ததால், இதை ஒரு சேவையாக செய்து வருகிறேன். இதுவரை 5000க்கும் அதிகமான பாம்புகளை பிடித்திருக்கிறேன். கண்ணாடி விரியன், கட்டுவிரியன் போன்ற அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் இதில் அடக்கம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.

”ஏதோ ஒரு சின்ன சின்ன புள்ளியில் துவங்கும் விஷயங்கள் என்னை தொடர்ச்சியாக அடுத்தடுத்த தளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. என் மனம் போகும் போக்கில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அப்பாவை போல் பாம்பு மீட்பரான மகள்

தனது தந்தை பாம்புகளை கையாள்வதை சிறு வயதிலிருந்தே கவனித்து வந்த ஹரிணிக்கும், அதன் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தான் சிறுமியாக இருக்கும்போதே, பாம்புகளை கைகளில் பிடித்து பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதாக கூறுகிறார் ஹரிணி.

பிபிசியிடம் பேசிய அவர், “சில நேரம் பாம்புகளை மீட்பதற்காக என் தந்தை செல்லும் இடங்களில், அன்பளிப்பாக பணம் வழங்குவார்கள். ஆனால் அவர் அதை மறுத்துவிடுவார். இந்த வேலையை அவர் ஒரு சேவையாக செய்து வருகிறார். ஒரே நாட்களில் வெவ்வேறு இடங்களில் 2, 3 பாம்புகளைக் கூட அவர் மீட்டிருக்கிறார். அதேபோல் மீட்கப்படும் பாம்புகளை பத்திரமாக எடுத்துச்சென்று, அடர்காட்டுப் பகுதிகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் விட்டுவிடுவார். இதெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு பாம்புகள் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரை பார்த்து நானும் கற்றுக்கொள்ள துவங்கினேன்.

முதலில் விஷமற்ற தண்ணீர் பாம்பு, பச்சை பாம்பு ஆகியவற்றை எனது கைகளில் கொடுத்து பழக்கினார். பாம்புகளை பிடிக்கும் போது கழுத்து பகுதிகளில் பிடித்து லாக் செய்ய வேண்டும், எப்போதும் பாம்பிற்கும் நமக்கும் குறிப்பிட்ட இடைவேளை இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். அப்படியே நானும் பாம்புகளை மீட்பதில் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்துவிட்டேன்” என்று கூறுகிறார் ஹரிணி.

“எனக்கு பாம்புகளை கையாள்வதில் ஒருபோதும் பயம் ஏற்பட்டதில்லை. சிலர் பாம்புகளை பார்த்து அறுவறுப்பு கொள்வார்கள். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு அப்படியான உணர்வு ஏற்பட்டதில்லை. இதுவரை அப்பாவின் வழிகாட்டுதலுடன் 500 பாம்புகளை மீட்டிருக்கிறேன். அப்பா இல்லாத சமயங்களில் நான் மட்டுமே கூட சென்றிருக்கிறேன்” என்று பிரமிப்புடன் கூறுகிறார் ஹரிணி.

`என்னை விட என் மகளுக்கு துணிச்சல் அதிகம்`

”என்னுடைய மகளால் நஞ்சுள்ள பாம்புகளை எளிதாக கையாள முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல பாம்பை மீட்கும்போது, அது என்னை கடித்துவிட்டது. அப்போது சற்று உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்தசமயத்தில் அவளுக்கு 12 வயதுதான். என்னிடம் வந்த அவள், “அப்பா பாம்பு கடித்துவிட்டதற்காக, இனி பாம்புகளை மீட்கும் பணியை விட்டுவிடக்கூடாது. நீ மீண்டும் முயற்சி செய்யவேண்டும். பாம்புகளை மீட்க வேண்டும். குறைந்தது ஒரு பாம்பையாவது நீ மீட்க வேண்டும். அதன்பின் உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு. ஏனென்றால் இப்போது நீ பாம்புகள் மீட்பதை விட்டுவிட்டால், அது உன் வாழ்வில் ஒரு அச்சமாக மாறிவிடும்” என்று அறிவுரை வழங்கினாள்.

அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த சிறு வயதில், இவளுக்குள் எப்படி இத்தனை அளவு பக்குவம் வந்தது என பிரமிப்பாக இருந்தது.

அந்த சம்பவத்திற்கு பின் மீண்டும் நான் பாம்புகளை மீட்கும் பணியில் நம்பிக்கையுடன் வந்ததற்கு என் மகள்தான் முக்கிய காரணம். அதேசமயம், தற்போது பல தற்காப்பு உபகரணங்களுடன் இந்த பணியை கவனமாக செய்து வருகிறோம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.

“நாங்கள் பாம்புகளை மீட்கச் செல்லும் இடங்களில் என் மகளை ஒரு கதாநாயகி போல அனைவரும் பார்க்கிறார்கள். ஒரு தந்தையாக எனக்கு அது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மனிதத்தையும், இந்த பூமியையும் நேசிக்கிறோம்

”நான் இப்போது எம்.பி.ஏ படிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். அதன்பின் சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு விலங்குகளுக்காக தனி காப்பகம் அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று கூறுகிறார் ஹரிணி.

அவரைத் தொடர்ந்து பேசிய முத்துபாண்டி, “இப்போது எனக்கு 60 வயதாகிறது. இதுவரை எனக்கு என்ன தோன்றியதோ அதை மட்டுமே செய்து வந்திருக்கிறேன். மனிதர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அதே அளவு நேசம், மற்ற உயிரினங்கள் மீதும் இருக்கிறது. ஏனென்றால் ‘இந்த உலகில் மனிதர்கள்தான் கடைசியாகத் தோன்றிய உயிரினம். எனவே மனிதர்களை விட விலங்குகளுக்குத்தான் இந்த பூமியின் மீது அதிக உரிமை இருக்கிறது. அதன் காரணமாகவே அவைகளின் மீது அன்பும், மரியாதையும் எங்களுக்கு இருக்கிறது’.

ஆனால் என் குடும்பத்திற்காக நான் இதுவரை எதுவும் செய்யவில்லை. என்னுடைய முடிவுகள் அனைத்திற்கும் என் மனைவி துணையாகயிருந்தார். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் இப்போது எதிர்காலம் குறித்த அச்சம் எட்டிப்பார்க்கிறது. அதனால் மீண்டும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், மனிதத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. மீதமிருக்கும் என் வாழ்நாளில் இந்த பிரபஞ்சம் எனக்கு துணையாக வரும் என்று என் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார் முத்துபாண்டி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்: அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்

புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது: தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் உரை..!

’குளத்துல கூட தாமரை மலரக்கூடாது’! ஆய்வுக்கு சென்ற அமைச்சர் சேகர் பாபு உத்தரவு!

ஒரே வாரத்தில் பிறந்த 9 இரட்டையர்கள்.. அனைவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண்..ஆச்சரிய தகவல்..!

டிரம்ப், ஹாரிஸ் யார் ஜெயித்தாலும் இந்திய-அமெரிக்க உறவு மேம்படும்: அமைச்சர் ஜெய்சங்கர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments