Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொம்மன், பெள்ளி: ''நீலகிரி மலையில் இருந்து முதல் முறையாக சென்னை வந்தோம்'' - 'யானை பாகன்' தம்பதி நெகிழ்ச்சி

Bomman Belli
, புதன், 15 மார்ச் 2023 (16:22 IST)
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் காட்டுநாயகன் சமூகத்தைச் சேர்ந்த யானை பாகன் தம்பதியான பொம்மன் - பெள்ளியின் உண்மை கதையை வெளிக்கொண்டு வந்த 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதை அடுத்து, யானை பாகன் தம்பதியை தமிழ்நாடு அரசு இன்று கெளரவித்தது.

இதையொட்டி இந்த தம்பதி முதன் முதலாக நீலகிரி மலையில் இருந்து சென்னை நகருக்கு வந்த அனுபவத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதியை அழைத்து இருவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். அத்துடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவர் வழங்கினார்.

முதுமலை யானைகள் காப்பகத்தில் பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் பொம்மன், பெள்ளி, இதுவரை நீலகிரி மலையை தவிர பிற வெளியூர்களுக்கு அதிகம் சென்றதில்லை என்றும் முதன் முறையாக சென்னை நகர்ப்புறத்துக்கு வந்து முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது மிகவும் வியப்பைத் தந்தாக கூறுகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய பொம்மனும் பெள்ளியும், தங்களது வாழ்க்கை கதையை ஆவணப்படமாக உலக மக்கள் பலரும் பார்த்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ந்ததாக தெரிவித்தனர்.

''நாங்கள் யானை குட்டியை வளர்த்த கதையை உலகம் முழுவதும் பலரும் பார்க்கிறார்கள். எங்களைப் பற்றிய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது என்பது மிகவும் பெருமையாக உள்ளது. மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. சென்னை நகருக்கு முதல் முறையாக வந்திருக்கிறோம். முதல்வரை நேரில் சந்திப்போம் என்பதை நாங்கள் கனவில் கூட நினைத்ததில்லை,'' என்று இருவரும் கூறினர்.

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி எப்படி பராமரித்தனர் என்பதை மையமாகக் கொண்டதுதான் தி எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம். அதில் யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் காட்சிகளை பலரும் வியந்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

யானை ரகுவை பற்றிப் பேசிய பொம்மன், ''முதலில் எங்களிடம் யானை குட்டி வந்தபோது மோசமாக காயமடைந்த நிலையில் இருந்தது. மருத்துவர்கள், அதிகாரிகள் எங்களிடம் யானையை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என விளக்கினார்கள். எங்கள் குடும்ப உறுப்பினராகத்தான் ரகுவை பார்த்தோம். நாங்கள் டீ குடித்தால், ரகுவுக்கு ஒரு டப்பாவில் பாலை ஊற்றிக் கொடுப்போம். எங்களில் ஒருவராக யானை குட்டி வளர்ந்ததால், எங்கள் பேரன், பேத்திகள் எங்களை பார்க்க வரும்போது, யானைக் குட்டி அவர்களுடன் விளையாடும்,'' என யானையுடன் இருந்த நினைவுகளை பகிர்ந்தார்.

இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சேர்ந்த ஒரு கலவையான மொழியில் யானையுடன் பேசியதாகவும், அதற்கு யானை கட்டுப்படும் என்றும் கூறுகிறார் பெள்ளி.

''ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் யானையை எப்படி பராமரிக்கிறோம் என்று அவ்வப்போது வந்து படம் எடுப்பார்கள், அதுதான் படமாக வரப்போகிறது, அந்த படத்திற்கு விருது கிடைக்கப்போகிறது என்று அப்போது தெரியாது. இந்த படம் விருது பெற்ற பின்னர், எங்களை போன்ற யானை பராமரிப்பாளர்களின் வாழ்க்கையைப் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி,'' என்கிறார் பெள்ளி.

பெள்ளியிடம் பாசமாக தலையை சாய்த்து யானை படுத்துக்கொள்ளும் காட்சி வைரலாக சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. ''யானைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எங்களுக்கு மன கஷ்டமாக இருக்கும். இப்போது ரகு யானை கும்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களுக்கு கிடைத்த வெற்றி,'' பெள்ளி.

பொம்மன், பெள்ளியை கெளரவித்ததுடன், முதுமலை மற்றும் தெப்பக்காடு யானை காப்பகத்தில் உள்ள 91 பணியாளர்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் யானை பராமரிப்பாளர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு ரூ. 9.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமை மேம்படுத்த ரூபாய் ஐந்து கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு அறிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை: அமைச்சர் நிதின்கட்கரி..!