Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மேலும் ஒரு மலேசியரை தூக்கிலிட்ட சிங்கப்பூர் - பின்னணி என்ன?

Advertiesment
Malaysian
, வெள்ளி, 8 ஜூலை 2022 (13:55 IST)
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மேலும் ஒரு மலேசியர் நேற்று சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளார். மனித உரிமை ஆர்வலர்கள் இறுதிவரை போராடியும் தூக்குத் தண்டனையை ஒத்தி வைக்கவோ, அந்த மலேசியருக்கான தண்டனையைக் குறைக்கவோ முடியவில்லை.


தூக்கிலிடப்பட்ட மலேசியர் 32 வயதான கல்வந்த் சிங் என்பவர் ஆவார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற வழக்கின் முடிவில் கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்.

கடந்த 2013ஆம் ஆண்டு 60.15 கிராம் எடையுள்ள டயமார்ஃபின் (Diamorphine) போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்தின் பேரில் சிங்கப்பூரில் கைதானார் குல்வந்த். மேலும் 120.9 கிராம் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டப்பட்டார்.

கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான நோட்டீஸ் கல்வந்த் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஜூலை 7ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து, அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கினர். மனித உரிமை ஆர்வலர்கள் பதற்றம் அடைந்தனர்.

கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் முன்பு கடந்த புதன்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது. கல்வந்த் சிங்கை தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்ற அதே வேளையில், அவரைக் காப்பாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஒரே நாளில் இருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

இம்முறை 48 வயதான நோராஷரி என்ற சிங்கப்பூர் நபர் ஒருவரும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டுள்ளார்.

தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர், தமது இறுதி முயற்சியாக சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் கல்வந்த் சிங்.

"கூரியர் சேவை போன்று போதைப்பொருளை கொண்டு சேர்க்கும் பணிக்காக மட்டுமே நான் பயப்படுத்தப்பட்டேன். காவல்துறையுடன் நான் முழுமையாக ஒத்துழைத்தேன். ஆனால், நீதிமன்றம் இதைப் பரிசீலிக்கவில்லை," என்று தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார் கல்வந்த் சிங்.

ஆனால், தூக்குக் கயிற்றில் இருந்து தப்பிக்க இந்த முயற்சியும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்திருந்தாலும், அதில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன. அதற்கான விதிமுறைகளை அரசாங்கமே வகுத்துள்ளது.

கடத்தல் செய்து சிக்கும் ஒருவர், தாம் அறிந்த போதைப்பொருள் கும்பல் தொடர்பாக துப்பு கொடுத்து, அக்கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டால் தண்டனைக் குறைப்புக்கு வழியுண்டு. அந்த வகையில், கல்வந்த் சிங்கும் துப்பு கொடுத்தார். ஆனால், அது அவரின் உயிரைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை.

என்ன செய்தார் கல்வந்த் சிங்?

பொதுவாக போதைப்பொருள் கடத்துவோர் எவ்வாறு சிக்குவார்களோ, அப்படித்தான் கல்வந்த் சிங்கும் சிக்கினார். ஏப்ரலில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கத்தின் கதையும் இவருடையதும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு கல்வந்த் சிங்கும், மொஹம்மத் யாசிட் என்பவரும் சிங்கப்பூர் போலீசாரிடம் சிக்கினர். இருவரிடம் இருந்தும் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் இருவருக்கும் மூளையாகச் செயல்பட்டவர்தான் கல்வந்த் சிங்குடன் நேற்று தூக்கிலிடப்பட்ட நோராஷரி. இவர் இரண்டு ஆண்டுகள் கழித்து 2015ல் கைதானார்.

நோராஷரி சிங்கப்பூருக்கு வெளியே கொடுக்கும் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வருவது கல்வந்த் சிங்கின் வேலை. பின்னர் அவர், மொஹம்மத் யாசிட்டிடம் அதை ஒப்படைப்பார்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்டது போதைப்பொருள் என்பது தெரியாது என்றும், கூரியர் சேவையைப் போல், ஓரிடத்தில் பெற்றுக்கொண்ட பொருளை, வேறொரு இடத்தில் ஒப்படைப்பது மட்டுமே தனது வேலை என்றும் விசாரணையின்போது குறிப்பிட்டார் கல்வந்த் சிங். அவருடன் கைதான மொஹம்மத் யாசிட்டும் இதே விளக்கத்தைதான் அளித்தார்.

எனினும் விசாரணையின் முடிவில் கல்வந்த் சொன்னதை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால், மொஹம்மத் யாசிட் தான் கூரியர் சேவையைப் போல் பயன்படுத்தப்பட்டார் என்பதை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

15 கிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் பிடிபடுபவர்களுக்கு அந்நாட்டுச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அப்படித்தான் மலேசியாவை சேர்ந்த 34 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

அவர் அறிவுசார் குறைபாடு உள்ளவர் என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோதும், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.

தூக்கிலிடப்பட நாள் குறிக்கப்பட்ட நிலையில், திடீரென கொரோனா தொற்றுக்கு ஆளானார் நாகேந்திரன். இதனால் அவருக்கான தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. அவர் அளித்த கருணை மனுவை சிங்கப்பூர் அதிபர் நிராகரித்தார்.

அதன் பிறகு மேல் முறையீட்டு நீதிமன்றத்தை அணுகினார் நாகேந்திரன். இந்த முயற்சிகள் அனைத்துமே அவரது கழுத்தில் தூக்குக்கயிறை மாட்டுவதற்கான நாள்களை ஒத்திவைக்க உதவியதே தவிர, அவரைக் காப்பாற்ற கைகொடுக்கவில்லை.

கல்வந்த் சிங்கின் பின்னணி என்ன?

மலேசியாவில் கேமரன் மலை பகுதியைச் சேர்ந்தவர் கல்வந்த் சிங். கடந்த 1990ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு மூத்த சகோதரி ஒருவர் உள்ளார்.

கல்வந்த் சிங்கின் தந்தை கடந்த ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். பன்னிரெண்டு வயதிலேயே தாயை இழந்தார் கல்வந்த் சிங்.

தோட்டத்தொழிலாளியாக வேலை பார்த்து அவரது தந்தை பின்னர் டாக்சி ஓட்டுநரானார்.

கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் கல்வந்த். மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தீவிர ரசிகர். 17 வயதில் பள்ளிப்படிப்பைக் கைவிட்டு, சுற்றுலா வழிகாட்டி, டிரக் ஓட்டுநர், உணவக தொழிலாளர் எனப் பல்வேறு வேலைகளைப் பார்த்து வந்துள்ளார்.

2011ஆம் ஆண்டு மலேசிய எல்லை மாநிலமான ஜோகூருக்கு சென்றுவிட்டார் கல்வந்த். அங்கிருந்து தினமும் சிங்கப்பூருக்குச் சென்று வர முடியும். அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சவக்கிடங்கு ஊழியராக சிலகாலம் பணியாற்றி உள்ளார்.

கடந்த மாத தொடக்கத்தில் கல்வந்த் சிங்கின் சகோதரி சோனியாவும், அவரது உறவுப்பெண் கெல்வினாவும் சிங்கப்பூர் சிறையில் அவரை சந்தித்துப் பேசினர். கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பு அது.

மீண்டும் இம்மாதம் 9ஆம் தேதி சகோதரரை சந்திக்க இருந்தார் சோனியா. ஆனால் அவரால் செல்ல முடியவில்லை.

எனவே, தன் சகோதரரை கடைசியாக ஒருமுறை சந்திக்க சோனியா கோரிக்கை விடுத்தார் என்றும் சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சகோதரியின் குழந்தை மீது கல்வந்த் மிகுந்த பாசம் காட்டி வந்துள்ளார். சகோதரி பணிக்குச் சென்ற பிறகு குழந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிட்டது தனது தம்பிதான் என்று வெதும்புகிறார் சோனியா.

கல்வந்த் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், போதைப்பொருள் வழக்கில் இவர் கைதானதும் அந்தப் பெண்ணின் நிலை என்னவாயிற்று என்பது தெரியவில்லை என்றும் ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

எதிர்ப்பு தெரிவிக்கும் சர்வதேச மன்னிப்பு சபை

இரண்டு ஆண்டுகளாக மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்திருந்தது சிங்கப்பூர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதன் மூலம், அங்கு தூக்கிலிடப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் உயரத்தொடங்கியது. இதையடுத்து, மனித உரிமை ஆர்வலர்களும் தங்கள் போராட்டங்களைத் தொடங்கினர்.

சிங்கப்பூரில் தற்போது 60 பேர் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிகிறது. நடப்பாண்டில் மட்டும் இதுவரை நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் சிங்கப்பூரில் குற்றம் புரிந்தவர்களை தூக்கிலிடும் புதிய அலை எழுந்திருப்பதாக கருதத் தோன்றுகிறது என சர்வதேச மன்னிப்பு சபையின் மலேசிய பிரிவு கவலை தெரிவித்துள்ளது.

அனைத்துலகச் சட்டங்களை சிங்கப்பூர் அரசாங்கம் மீறுவதாகவும் அனைத்துலக மன்னிப்பு சபையின் ஆய்வுப் பிரிவு இயக்குநரான எமர்லைன் கில் (Emerlynne Gil) தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை மூலம் ஆசிய பிராந்தியத்தில் பல பில்லியன் டாலர் போதைப்பொருள் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் தடுத்துவிட முடியாது என்றும் வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

சில மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் கட்டாய மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போதைப்பொருளுக்கு எதிரான கடும் சட்டங்கள் இருப்பது அவசியம் என்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க இந்தச் சட்டங்கள் வெகுவாக உதவுவதாகவும் கூறுகிறது சிங்கப்பூர் அரசு.

மரண தண்டனையை அந்நாடு தற்காக்கும் வேளையில், சிங்கப்பூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான கிர்ஸ்டன் ஹன் (Kirsten Han) அத்தண்டனையை ஒழிக்கும் நோக்கில் தொடர்ந்து தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கடும் தண்டனைகள் காரணமாக பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்ற முடிகிறது: சண்முகம்

இதற்கிடையே, போதைப் பொருள் கடத்தலுக்காக விதிக்கப்படும் கடும் தண்டனைகள் காரணமாக பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்ற முடிகிறது என்கிறார் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம்.

அண்மையில் பிபிசிக்கு அளித்துள்ள விரிவான பேட்டி ஒன்றில், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அந்நாட்டின் கடுமையான நிலைப்பாட்டுக்காகவும், மரண தண்டனையை தக்கவைத்துக்கொள்வது தொடர்பிலும் சிங்கப்பூர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

"சிங்கப்பூரின் கடுமையான சட்டங்களை விமர்சிப்பவர்கள், அந்தச் சட்டங்கள் சிங்கப்பூரர்களின் வாழ்வை காப்பாற்றுகிறது, பாதுகாக்கிறது என்பதை கவனிக்கத் தவறிவிட்டனர்" என்கிறார் அமைச்சர் சண்முகம்.

ஒரே ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் தூக்கிலிடப்படுவதில் பிபிசியின் கவனம் குவிந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், தென்கிழக்கு ஆசியாவில் மோசமாக உள்ள போதைப்பொருள் நிலவரம் குறித்தும், ஆயிரக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளது குறித்தும் கவனம் செலுத்தவில்லை என்று 'BBC's HARDtalk' நிகழ்ச்சியில் பங்கேற்றபோது குறிப்பிட்டார்.

"போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதன் மூலம், அவ்வாறு கடத்தலில் ஈடுபட நினைப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்த முடிகிறது. கடத்தலில் ஈடுபடுபவர் பணம் சம்பாதிக்க விரும்புகிறார். ஆனால், இதன் மூலம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறார். மேலும் அவர்களுடைய குடும்பங்களையும் அழித்துவிடுகிறார்," என்றார் அமைச்சர் சண்முகம்.

போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது துயரச் செயலாகப் பார்க்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், மறுபக்கம் போதைப்பொருளை உபயோகிப்பதால் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பது வெறும் புள்ளிவிவரங்களாக மாறிவிடுகிறது என்றார்.

போதைப்பொருள் பயன்பாடு, கடத்தல் தொடர்பாக கடந்த 1990களில் சிங்கப்பூரில் 6,000 பேர் ஆண்டுதோறும் கைதாகி வந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்றும் அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.

கடந்த முப்பது ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வட்டாரத்தில் அதிக அளவிலான போதைப் பொருள்கள் உள்ளன என்றும் கடுமையான தண்டனைகள் இல்லையெனில் சிங்கப்பூருக்கு சிக்கல் ஏற்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு - நடந்தது என்ன?