Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

அமெரிக்கா தொடங்கி உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் சரிவு - இந்தியா தாக்குப் பிடிக்குமா?

Advertiesment
Stock Market Crash

Prasanth Karthick

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (12:05 IST)

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்களன்று இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. காலை 9.15 மணிக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகள் சரிந்தது. பின்னர் இந்தச் சரிவு 2,600 புள்ளிகள் வரைச் சென்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் தொடக்கத்திலிருந்தே சரிவைச் சந்தித்து, நாளின் இறுதியில் 24,055 என்ற அளவில் முடிவடைந்தது. கடந்த வியாழன் அன்று 25,000 என்ற அளவில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, ஜப்பான், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளின் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பங்குச் சந்தைகளிலும் இதே நிலை தான்.
 

உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தது ஏன்?
 

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம்


 

உலக பங்குச் சந்தைகளில் காணப்பட்ட இந்தச் சரிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்று பங்குச்சந்தைகளில் வர்த்தகம் நடந்து கொண்டிருக்கும்போது, அமெரிக்கா நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் வெளியானது.
 

இந்த தரவுகளில், அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 4.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என தெரியவந்தது. மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தை எட்டியுள்ளதை இது உணர்த்துகிறது.
 

அதுமட்டுமல்லாது அமேசான், இன்டெல் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் மோசமாக இருந்ததால், வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் 2.4%க்கும் அதிகமாகச் சரிந்தது. இன்டெல் நிறுவனம் கடந்த வாரம் 15,000 பேரை வேலையில் இருந்த நீக்கவுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

வேலைவாய்ப்பு குறித்த எதிர்மறையான தரவுகளால் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியான அமெரிக்கா மந்தநிலையை நோக்கிச் செல்லக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உருவானது. அதுதான் அமெரிக்க பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.
 

இந்தியா- அமெரிக்கா இடையே நேர இடைவெளி, 9 மணிநேரங்கள் மற்றும் 30 நிமிடங்கள் ஆகும். இதனால், வழக்கமா இந்தியப் பங்குச் சந்தைகள் முடிவடைந்த பிறகு, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தான் அமெரிக்க பங்குச்சந்தை துவங்கும் என்பதால் வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தையில் பாதிப்பு இல்லை.
 

அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், திங்கள் அன்று வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே சரிவைச் சந்தித்தன.
 

ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் குறியீட்டெண்கள் 2 சதவீதம் சரிந்தன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனப் பங்குகள் 3.7 சதவீதம் வரை சரிந்தன.
 

ஆசியப் பங்குச் சந்தைகளில் சரிவு


 

இந்தியா மட்டுமல்லாது ஆசியாவின் மற்ற பங்குச் சந்தைகளிலும் இது எதிரொலித்தது.

தைவானின் முக்கிய பங்குச்சந்தை குறியீடும் 7.7 சதவீதம் சரிந்தது. தைவானின் ‘சிப்’ தயாரிக்கும் நிறுவனமான டிஎஸ்எம்சி-யின் (TSMC) பங்குகள் 8.4 சதவீதம் சரிந்தன.
 

தென் கொரியாவின் கேஓஎஸ்பி KOSP) குறியீடு 6.6 சதவீதம் சரிந்தது. சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து சிப் தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தன.
 

திங்கட்கிழமையன்று ஜப்பான் பங்குச்சந்தை குறியீட்டெண் நிக்கேய் 13 சதவீதம் சரிந்து, ஒரே நாளில் 4,451 புள்ளிகளை இழந்தது.
 

2011 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு ஜப்பானின் நிக்கேய் இவ்வளவு பெரிய இழப்பைக் கண்டதும் இதுவே முதல் முறை.
 

ஆனால் இதற்கு காரணம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் மட்டுமல்ல. ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஜப்பான் நாணயமான யென் மதிப்பு உயர்ந்து வருவதும் ஒரு காரணம்.
 

மூன்று வாரங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பான் யென் மதிப்பு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவற்றின் தாக்கம் காரணமாக அங்கு பங்குச்சந்தை சரிவு காணப்படுகிறது.
 

கிரிப்டோகரன்சிகளும் சரிவைச் சந்தித்துள்ளன. ஒரு பிட்காயின் விலை 53 ஆயிரம் டாலர்களை எட்டியது. இது பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மிகக்குறைந்த அளவாகும். ஹாங்காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன.
 

இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவு தொடருமா?


 

ஜூலை 2ஆம் தேதிக்குப் பிறகு முதல்முறையாக திங்கட்கிழமை அன்று, நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் நிஃப்டி 24,074 என்ற அளவில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பாக மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் (ஜூன் 4) 2,000 புள்ளிகள் வரை சரிந்தது நிஃப்டி.
 

இன்றும் (6.08.2024) கூட அமெரிக்க பொருளாதார மந்தநிலை தொடர்பான அச்சங்களின் தாக்கம் பல பங்குச்சந்தைகளில் தெரிந்தது.
 

பங்குச் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் பொருளாதார நிபுணரும், தனிநபர் முதலீட்டு ஆலோசகருமான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
 

“இப்போது ஏற்பட்டிருப்பதை மிகப் பெரிய வீழ்ச்சி என்று சொல்ல முடியாது. 25 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரத்திற்குத்தான் வந்துள்ளது. சந்தை தன்னை சரிப்படுத்திக் கொள்கிறது (correction) என்று சொல்லவே 10 சதவீதமாவது புள்ளிகள் குறைய வேண்டும். அப்படியானால், 22,500க்கு வந்தால்தான் correction. வீழ்ச்சி என்று சொல்ல வேண்டுமானால் 20 சதவீதம் குறைய வேண்டும். அப்படியானால், 19,999ஆகவாவது குறைய வேண்டும். அந்த அளவுக்குக் குறைந்தால் அதனை கரடிச் சந்தை என்று சொல்லலாம்.
 

சந்தை எப்போதுமே மேலும் கீழுமாக சென்றுகொண்டிருக்கும். தற்போது இந்தியாவில் இரண்டு நாட்கள் புள்ளிகள் குறைந்திருப்பதை அப்படித் தான் பார்க்க வேண்டும்,” என்கிறார் அவர்.
 

ஏன் இப்படி நடக்கிறது?


 

"அமெரிக்காவில் வேலைவாய்ப்பு எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. இரண்டரை லட்சம் பேருக்கு வேலை கிடைக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால், 1,14,000 பேருக்குத்தான் வேலை கிடைத்தது. ஆகவே வேலைவாய்ப்பின்மை 3.6லிருந்து 4.3ஆக உயர்ந்தது. கடந்த இரண்டாண்டுகளில் இது அதிகம்.
 

இதனால் அமெரிக்காவில் பொருளாதார மந்தம் வந்ததாக பேச ஆரம்பித்தார்கள். ஆனால், பொருளாதார மந்தம் இல்லை. முதல் காலாண்டில் 1 சதவீதமும் இரண்டாவது காலாண்டில் 2.8 சதவீதமும் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. பொருளாதார மந்தம் என்றால், இரண்டு காலாண்டுகளாவது, வளர்ச்சி பின்னோக்கி இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி சற்று குறைவாக இருப்பதாக வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், சந்தையைப் பொறுத்தவரை இதனை எதிர்மறையாகப் பார்க்கிறது. இதனால்தான் அமெரிக்கப் பொருளாதாரச் சந்தையில் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதேசமயம், பசிபிக்கின் மற்றொரு பக்கத்தில், ஜப்பானில் வேறு ஒரு விஷயம் நடந்தது." என்று பிபிசியிடம் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் கூறினார்.
 

ஜப்பான் பங்குச் சந்தையில் நிகழும் மாற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஆனந்த் ஸ்ரீநிவாஸன், "ஜப்பானில் கடந்த 40 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பெரிய மாற்றமில்லை. விலைவாசி உயர்வும் இல்லை. சம்பள உயர்வும் இல்லை. ஒரு பொருளாதார தனித்தீவாக இருந்தது. வட்டி விகிதம் பூஜ்யமாகவே இருந்தது. இந்த நிலையில், கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பாக வட்டி விகிதம் 0.1 சதவீதமாக ஆக்கப்பட்டது. பிறகு 0.25 ஆக்கப்பட்டிருக்கிறது.
 

இதனால், ஜப்பானில் யென்னின் மதிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. யென்னின் மதிப்பு ஒரு டாலருக்கு 141 யென் என்ற அளவுக்கு உயர்ந்தது. செவ்வாய்க்கிழமையன்று காலையில் ஜப்பானின் பங்குச் சந்தை 9 சதவீதம் உயர்ந்தது. எல்லாம் சரியாகிவிட்டது என பலரும் கருதினார்கள். ஆனால், முழுமையாக சரியாகவில்லை. மற்றொரு பக்கம், ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போர் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. இதுவும்தான் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் ஏற்ற இறக்கத்திற்குக் காரணம்" என்றார்.
 

இந்தியா தாக்குப் பிடிக்குமா?


 

"இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கு ஏற்பட்டிருப்பது நீண்ட காலப் பிரச்னை. சமீபகாலமாக பலர் வங்கிகளில் உள்ள பணத்தை எடுத்து பங்குச் சந்தைகளில் முதலீடுசெய்ய ஆரம்பித்துள்ளார்கள். நேரடி முதலீடாகவும் மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பங்குச் சந்தை மூலமாகவும் இது நடந்தது. மற்றொரு பக்கம் futures & Options என்ற வர்த்தகமும் நடந்தது. சந்தைகளை நன்றாக அறிந்து வைத்தவர்கள், பெரிய அளவில் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்கள் இதைச் செய்வார்கள்" என்று இந்திய பங்குச் சந்தை குறித்து விளக்கினார், ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
 

“ஆனால், சமீப காலமாக பல புரோக்கிங் நிறுவனங்கள் சிறு முதலீட்டாளர்களையும் இதில் ஈடுபடுத்தின. இதில் 90 சதவீதம் பேர் இழப்பைத்தான் சந்திப்பார்கள் என இந்திய பங்குச் சந்தைகளின் கட்டுப்பாட்டு அமைப்பான செபி பல முறை எச்சரித்துவிட்டது. இதில் லாபம் சம்பாதிக்கும் foreign institutional investors (FII) தங்கள் லாபத்தை வெளியில் எடுத்துச் செல்கின்றனர்.
 

மற்றொரு பக்கம் பொதுமக்கள் வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பது குறைய ஆரம்பித்திருக்கிறது. வங்கிகளில் வட்டி மிகக் குறைவு என்பதால், பொதுமக்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொரு பக்கம் தங்கத்திலும் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். வங்கிகளில் பணம் போட்டுவைப்பது குறைய ஆரம்பித்ததால், கடன் கொடுக்க வங்கிகளிடம் பணம் இல்லை. இது ஒரு பொருளாதார சிக்கல்.
 

அத்துடன், மியூச்சுவல் ஃபண்ட்களில் நிதி குவிவதால், எப்போதெல்லாம் சந்தைகள் வீழ்ச்சியடைகிறதோ அப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடுகள் சந்தையை பெரும் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுகின்றன. இது எவ்வளவு நாட்களுக்கு நடக்குமென பார்க்க வேண்டும்" என்கிறார் அவர்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?