Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

Advertiesment
கடும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் இலங்கையில் அவசரநிலை பிரகடனம்
, சனி, 2 ஏப்ரல் 2022 (08:15 IST)
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கையில் நேற்று நள்ளிரவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜனாதிபதி வீட்டின் முன் நடைபெற்ற மக்கள் போராட்டம் வன்முறையாக மாறிய ஒருநாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு கோழித் தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பால்மாவு, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.
 
நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன அல்லது மூடப்பட்டிருக்கின்றன. இதனால் நீண்ட நேர மின்வெட்டும் ஏற்படுகிறது. அதிகபட்சமாக, வியாழக்கிழமை மாலையில் டீசல் கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர். இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன.
 
பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதாக, ஜனாதிபதி பதவி விலகக் கோரி நேற்று முன்தினம் இரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.
 
இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் காவல்துறை தரப்பில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை ஜீப் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தையடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச. இதுகுறித்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனாரத் நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிவிப்பில், "பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கவும் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 1) நள்ளிரவில் வெளியானது. 
 
இந்த அவசரநிலை பிரகடனம் மூலம் சந்தேகத்திற்கிடமானவர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

49.00 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!