Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திப்பு சுல்தானின் வெற்றியை பறைசாற்றும் ஓவியங்கள் – சுமார் ரூ.6 கோடி-க்கு ஏலம்!

Advertiesment
திப்பு சுல்தானின் வெற்றியை பறைசாற்றும் ஓவியங்கள் – சுமார் ரூ.6 கோடி-க்கு ஏலம்!
, வியாழன், 31 மார்ச் 2022 (14:10 IST)
கடந்த 1780 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை வீழ்த்திய இந்திய பேரரசர்களின் பிரம்மாண்ட வெற்றியை விவரிக்கும் ஓவியம் லண்டனில் ஏலம் விடப்பட்டது.
 
இந்த ஓவியம் 6 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டிற்கு (இந்திய மதிப்பில் 6.28 கோடி) விற்கப்பட்டுள்ளதாக சதபீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மைசூர் ராஜ்ஜியத்தின் சுல்தான் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோர் புகழ்பெற்ற பொல்லிலூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை தோற்கடிப்பதைக் காட்டும் ஓவியங்கள்.
 
"மைசூரின் புலி" என்று அழைக்கப்படும் திப்பு சுல்தான், 1799 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்படும் வரை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் எதிரியாக இருந்தார். வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள், பொல்லிலூரில் நடந்தவற்றை விவரிக்கும் இந்த ஓவியத்தை, "காலனித்துவத்தின் தோல்வியை சித்திரிக்கும் சிறப்புமிக்க இந்திய படம் என்று சொல்லலாம்" என்று விவரித்துள்ளார்.
 
18 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் எழுச்சியை, 'தி அனார்ச்சி' என்ற தனது புத்தகத்தில், ஆவணப்படுத்தியுள்ளார் டால்ரிம்பிள். அவர் இது ஒரு பலமான தோல்வி என்றும் இந்த போர் கிட்டதட்ட இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
 
பொல்லிலூரில் தனது முதல் கட்டளையைப் பெற்ற திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுக்கு எதிராக 'ஒரு பெரும் அலையை' உருவாக்கினார் என்று டால்ரிம்பிள் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
1784 ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த போரின் காட்சிகளை திப்பு சுல்தான் வரைய கோரினார். மைசூரின் அப்போதைய தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள அவரது அரண்மனை டாரியா தௌலத் பாக்கின் சுவர்களில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த ஓவியங்கள் இரண்டு முறை காகிதத்திலும் மையால் வரையப்பட்டுள்ளன.
 
இந்த ஓவியங்களில் ஒன்று 2010 ஆம் ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்டது. அதனை கத்தாரில் உள்ள இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் வாங்கியது. அதன்பின் திப்பு சுல்தானின் தோல்விக்குப் பிறகு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த கர்னல் ஜான் வில்லியம் ஃப்ரீஸ் என்பவரால் இது இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டது. அவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக அதை பாதுகாத்து வந்தது. பின், 1978 ஆம் ஆண்டு, கலைப் பொருட்களை சேகரிப்பவர் ஒருவரிடம் அதை விற்றனர்.
 
அதன்பின் கலைப் பொருட்களை சேகரிப்பவர், 2010-ல் அந்த ஓவியங்களை விற்றார். சதபீ நிறுவனம் இப்போது ஏலம் விடும் இரண்டாவது ஓவியத்தின் தோற்றம் தெளிவாக இல்லை. இது ஃப்ரீஸால் கையகப்படுத்தப்பட்டதைப் போலவே உள்ளது. இது ஒரு பிரிட்டிஷ் அதிகாரியால் இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது.
 
1980க்களின் முற்பகுதியில், இது முதன்முதலில் ஏலத்தில் வைக்கப்பட்டது. "ஆனால் அதற்கு முந்தைய 100 ஆண்டுகளில் அதற்கு என்ன ஆனது என்று எங்களுக்குத் தெரியாது", என்று சதபீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெனடிக்ட் கார்ட்டர் பிபிசியிடம் கூறுகிறார்.
 
1780 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி காலையில் என்ன நடந்தது என்ற கொடூரமான விவரங்களை தெளிவாகவும், பிரம்மாண்டமாகவும், இந்த ஓவியம் சித்தரிக்கிறது. அந்த காலத்தில், அப்போதைய மெட்ராஸிலிருந்து சிறிது தொலைவில் உள்ள பொல்லிலூர் என்ற கிராமத்திற்கு அருகே கர்னல் வில்லியம் பெய்லி தலைமையிலான கிழந்திந்திய கம்பெனிப் படைகளை திப்பு பதுங்கியிருந்து திடீரென தாக்கினார். அதன்பின் ஹைதர் அலியின் படைகள் வந்த சமயம், "கிட்டதட்ட கிழக்கிந்திய படைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன", என்று டால்ரிம்பிள் கூறுகிறார்.
 
இந்த ஓவியம் 32 அடி நீளமுள்ளது, 10 தாள்களில் நீண்டுள்ளது. திப்பு தனது படைகளை யானையின் மேல் இருந்து கண்காணிப்பதை காட்டுகிறது. ஓவியத்தின் மறுமுனையில், ஒரு பல்லக்கில் இருக்கும் காயமடைந்த அதிகாரியைச் சுற்றி ஒரு சதுரத்தை உருவாக்கும் போது, அவரது குதிரைப்படை இருபுறமும் உள்ள கம்பெனிப் படைகளைத் தாக்குகிறது. "இது ஓர் அற்புதமான தலைசிறந்த படைப்பு. இதற்கு முன் இத்தகைய ஓவியம் உருவானது இல்லை" என்று டால்ரிம்பிள் பிபிசியிடம் கூறுகிறார்.
 
அதனால்தான் தங்களின் தோல்விக்கு பிறகும், கர்னல் ஃப்ரீஸ் போன்ற பிரிட்டிஷ் அதிகாரிகளால் இந்த ஓவியங்கள் வரைய கோரப்பட்டன என்று நம்புகிறார் டால்ரிம்பிள். வெலிங்டனின் வருங்கால டியூக் ஆர்தர் வெல்லஸ்லியின் உத்தரவின் கீழ் இருந்த கம்பெனி, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஓவியங்களை மீட்டெடுத்தபோது இரண்டு ஓவியங்களும் ஆயத்த வரைபடங்களாக செய்யப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி போரில் தோல்வியடைந்த பிறகு, சுவரோவியங்களை வெள்ளையடிக்க திப்புவே உத்தரவிட்டார்.
 
அந்த படங்கள் "நம்பமுடியாத அளவுக்கு இருந்தன. மேலும் அவற்றை வர்ணம் பூசுவது அமைதி ஏற்படுவதற்காக செயலாக இருக்கலாம்.", என்று டால்ரிம்பிள் கூறுகிறார். திப்பு சுல்தானின் தோல்விக்கு பிறகும், அவரது போர் உத்திகளுக்காக பிரிட்டிஷ் அரசு அவர் மீது மதிப்பு கொண்டிருந்தது.
 
அதனால், பொல்லிலூர் போரின் ஆதாரங்களாக விளங்கும் இந்த ஓவியங்கள் பிரிட்டிஷார் பாதுகாப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிங்க..! – பிரதமரிடம் கோரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்!