Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (15:04 IST)
தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கூடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கும் முடிவிற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவுசெய்தது. அதன்படி, 13,000 இளநிலை பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிப்புகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்பட்டன.
 
அரசின் இந்த முடிவை எதிர்த்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றோர் சங்கத்தின் தலைவர் ஷீலா சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
 
"2013ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஏராளமானவர்கள், அப்போதிருந்த 'வெயிட்டேஜ்' முறையால் ஆசிரியர் பணியில் சேர முடியவில்லை. அவர்களுக்கு தற்போதுவரை பணி வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட அறிவிப்பு ஏதுமில்லை. இதனால், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குத் தேவையானவர்களை பணியில் நியமித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனால், தகுதியற்றவர்கள் பணிக்குச் சேரும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணிவாய்ப்பைப் பெற இயலாத சூழல் ஏற்படும். ஆகவே தமிழ்நாடு அரசு 23ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டுமென" அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
 
இந்த வழக்கு நேற்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "முறையான வழிகாட்டுதல்கள் இன்றி ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது. இது ஏற்கத்தக்கதல்ல. இது ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களைப் பணியில் அமர்த்த வாய்ப்பாக அமைந்துவிடும்" என்று குறிப்பிட்டார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பதுதான் அரசின் முடிவு எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், "நிரந்தரமாக ஆசிரியர்களைப் பணியமர்த்துவதில் அரசுக்கு என்ன பிரச்னை?" என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், தற்காலிகமாக ஆசிரியர்களைப் பணியமர்த்தும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். வழக்கு ஜூலை எட்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments