Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வகை வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா?

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (10:27 IST)
புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதாகவும் அதன் பாதிப்பு அதிகமென்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 8ஆம் தேதி திங்கட்கிழமை, தமிழ்நாட்டில் I/A3i என புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் பரவின.

இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இதுபோல செய்திகளைக் கிளப்பிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.

உண்மையில், கொரோனா வைரஸில் I/A3i என்பது புதிய வகையா? இந்த வகை கொரோனா வைரஸின் சக்தி தீவிரமானதா? இப்படி ஒரு செய்தி எப்படிப் பரவியது?

மேலே குறிப்பிட்ட அனைத்து செய்திகளுக்கும் அடிப்படை, https://www.biorxiv.org/ இணைய ஆய்விதழில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரைதான். ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி (CSIR-CCMB), டெல்லியில் உள்ள இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஜீனோமிக்ஸ் அண்ட் இன்டக்ரேடிவ் பயாலஜியைச் (CSIR-IGIB) சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு, முதற்கட்ட முடிவுகளை வெளியிட்டிருந்தனர்.

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களைச் சுருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி (CSIR-CCMB). அந்தச் சுருக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்களே ஊடகங்களில் பூதாகரமாகப் பரவின.

இதையடுத்து, ஜூன் 8ஆம் தேதி ஒரு தகவலை ட்விட்டரில் வெளியிட்டது CSIR-CCMB. அதாவது "இந்தப் புதிய வைரஸானது (Clade A3i) ஏற்கனவே உள்ள (Clade A2a) வைரஸைவிட அபாயகரமானது என்று சொல்லவோ, அபாயம் குறைவானது என்று சொல்லவோ எவ்வித ஆதாரமும் இல்லை" என்று கூறியது. இதற்குப் பிறகே இது தொடர்பான வதந்திகள் சற்றே குறைந்தன.

சிஎஸ்ஐஆர் - சிசிஎம்பியின் ஆய்வின் பின்னணி

2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவின் வூஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து, உலகப் பெருந்தொற்றாக மாறியது. ஜூன் 9ஆம் தேதிவாக்கில் 71 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். SARS-CoV-2 என அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் தொடர்ந்து திடீர் மாற்றமடைந்து, உலக அளவில் பல்வேறு cladeகளாகப் பிரிந்தது. தொடர்ந்தும் பிரிந்து கொண்டிருக்கிறது. இம் மாதிரி இந்த வைரஸ் பிரிவதைப் புரிந்துகொள்வது, நோயை அறிதல், கட்டுப்படுத்துதல், தடுத்தல், வியூகம் வகுத்தலில் உதவுகிறது. ஆகவே, இது தொடர்பான ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன.
உலகம் முழுவதும் பல நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள கொரோனா வைரஸின் மரபணு வரிசையை இதற்கென உள்ள open-source இணைய தளங்களில் வெளியிடுகின்றன. இதனால், இந்த வைரஸ் எம்மாதிரி மாற்றமடைகிறது என்பதை ஆய்வு செய்யும் வைய்ப்பு உலகம் முழுவதுமுள்ள ஆய்வாளர்களுக்குக் கிடைக்கிறது.

கொரோனா வைரஸைப் பொறுத்தவரை 15 நாட்களுக்கு ஒரு முறை அவை திடீர் மாற்றம் அடைகின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய மாற்றமும் ஒரு புதிய வகையாகக் கருதப்படுகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான வகைகள் இப்படி உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மரபணு வரிசைகள் அனைத்தும் இதற்கென உள்ள இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைத்த கொரோனா வைரசின் மரபணு வரிசையை (Genome Sequence) ஆய்வுக்குள்ளாக்க ஹைதராபாதில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி, டெல்லியில் உள்ள இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஜீனோமிக்ஸ் அண்ட் இன்டக்ரேடிவ் பயாலஜியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முடிவுசெய்தனர்.

ஆய்வு நடத்தப்பட்டது எப்படி?

இந்த 361 மரபணு மாதிரிகளில், முதலாவது வகையான A2a என்ற வகைதான் பெரும்பான்மையாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, A3, B, B4 வகையைச் சேர்ந்த மாதிரிகள் இருந்தன. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 57 சதவீத மரபணு வரிசைகள் இந்தப் பிரிவுகளுக்குள் அடங்கிவிட்டன. ஆனால், மீதமுள்ள மரபணு வரிசைகள் இந்த cladeகள் எதிலும் பொருந்தவில்லை.

Nextstrain என்ற ஆய்வுக் குழு கொரோவை வைரஸின் பிரிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. Nextstrain அதுவரை வெளியிட்டிருந்த எந்த வகையோடும் இந்த மாதிரிகள் பொருந்தவில்லை.
இவற்றைத் தொடர்ந்து ஆய்வுசெய்தபோது, இந்த வகை A1a, A3 ஆகியவற்றிலிருந்து பிரிந்திருக்கலாம் எனத் தெரிந்தது. ஆகவே, இந்தப் புதிய வகைக்கு A3i பெயரிடலாம் என ஆய்வாளர்கள் திட்டமிட்டனர். ஆனால், Nextstrain ஆய்வுக்குழுவினரும் இது போலவே தாங்கள் கண்டுபிடிக்கும் வகைக்கு பெயர் சூட்டுவதால், குழப்பம் ஏற்படாமல் இருக்க இந்தப் புதிய வகைக்கு Clade I/A3i எனப் பெயரிடப்பட்டது. இந்தப் புதிய மரபணு வரிசை பெரும்பாலும் இந்தியாவில் கிடைத்த கொரோனா மாதிரிகளில்தான் கிடைக்கிறது.

இந்தியாவில் கிடைத்த கொரோனா வைரஸ்களின் மரபணு வரிசைகளை வைத்துப் பார்க்கும்போது இந்த I/A3i வகையே 41.2 சதவீத மாதிரிகளில் இருந்துள்ளது. கொரோனா வைரஸின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 19 மாநிலங்களில் 16 மாநிலங்களில் இந்த வகை இருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லிஆகிய மாநிலங்களில் இந்த வகை அதிகமாக இருக்கிறது. பிஹார், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்த வகை மாதிரிகள் கிடைத்தன.

உலக அளவில், இதுவரை பிரித்தறியப்படாத கொரோனா வைரஸ்களில் 3.5 சதவீதம் இந்த I / A3i சேர்ந்ததாகவும் அறியப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட Centre For Cellular And Molecular Biology, "இந்த வைரஸ் தொகுதி 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட நோய்ப் பரவலின் போது உருவாகி இந்தியாவில் பரவியிருக்கலாம். இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட SARS-CoV2 மாதிரிகளில் 41% இந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது. உலக அளவில் 3.5% இந்த வகையைச் சேர்ந்தது" என்று குறிப்பிட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள், இன்னும் சக ஆய்வாளர்களால் (Peer Review) இன்னும் மதிப்படப்படவில்லை.

இந்தியாவில் மே 25ஆம் தேதிவாக்கில், ஒட்டுமொத்தமாக 361 கொரோனா மரபணு வரிசைகள் பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை பகிரப்பட்டுள்ள 361 கொரோனா மரபணு வரிசைகள் பொதுவாக ஐந்து க்ளஸ்டர்களாக வகைப்படுத்தப் படுகின்றன. இவற்றில் A2a, A3, B, B4 ஆகிய வகைகள் ஏற்கனவே அறியப்பட்டவை.

எல்லா உயிரினங்களையும்போலவும் கொரோனா வைரஸும் திடீர் மாற்றத்திற்கு (Mutation) உள்ளாகிறது. திடீர் மாற்றம் என்பது அவற்றின் மரபணு வரிசையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம்.

தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் நுண்ணுயுரியாளர் ராஜுவிடம் இது குறித்துக் கேட்டபோது, "புதுவகை வைரஸ் என்று சொல்வதெல்லாம் தவறானது. இது போன்ற தகவல்களையெல்லாம் புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜிதான் வெளியிட வேண்டும். அல்லது உலக சுகாதார நிறுவனம் வெளியிட வேண்டும். அதுவே அதிகாரபூர்வமானது" என்கிறார்.

மேலும், SARS-CoV-2 தொடர்ச்சியாக திடீர் மாற்றம் செய்துவரும் ஒரு வைரஸ்; இப்போதும் அப்படி நடந்திருக்கலாம். ஆகவே இப்போது புதிதாக உருவாகியிருக்கும் இந்த I / A3i வகை, கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது, அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்கிறார் ராஜு.

இதுபோன்ற தகவல்கள், ஆய்வாளர்களுக்கு உதவுமே தவிர நோய்த் தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்கிறார் அவர். இதனை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தகவல்களைப் பரப்புவது பதற்றத்தையே ஏற்படுத்தும் என்கிறார் ராஜு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை காணும் பொங்கல்.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த பழவேற்காடு நிர்வாகம்..!

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

62 பேர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீராங்கனை.. நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? போலீஸ் ஆட்சியா? அன்புமணி கேள்வி..!

ஒரு பெண் பாதிக்கப்படும்போது இந்த ஆட்சி, அந்த ஆட்சி என பிரித்து பேசுவதா? குஷ்பூ ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments