Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா ஊரடங்கு: ‘’ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்கிறோம், ஆனால், சாப்பாட்டுக்கு வழியில்லை’’

Advertiesment
கொரோனா ஊரடங்கு: ‘’ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்கிறோம், ஆனால், சாப்பாட்டுக்கு வழியில்லை’’
, புதன், 24 ஜூன் 2020 (23:28 IST)
''ஓவ்வொரு நாளும் மாலை நேரம், 7 முதல் 11 மணி வரை எங்கள் வேலையில் 'பீக் அவர்'' (Pear Hour) என்போம். அவ்வளவு பரபரப்பாக இருக்கும். ஒரு நிமிடம்கூட ஒய்வு கிடைக்காது. அப்போதெல்லாம் நினைப்பேன் ஹோட்டலுக்கு யாருமே சாப்பிட வரவில்லையென்றால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று? அதிக பணிச்சுமையால் அந்த எண்ணம் எனக்கு தோன்றியிருக்கலாம்'' என்று சென்னையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் ஜேக்கப் பிபிசியிடம் நினைவுகூர்ந்தார்.

''ஆனால், இப்போது தான் புரிகிறது அப்படிப்பட்ட சூழல் எங்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கிவிடும் என்று. பரபரப்பான அந்த வாழ்க்கைக்கு எப்போது திரும்புவோம் என்று ஏங்குகிறேன். எப்போது அது சாத்தியமாகும் என தெரியவில்லை'' என்று ஜேக்கப் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசால் கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மிகவும் கடுமையாக தொழில்களில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அடங்கும்.
பெரும் சிக்கலில் ஹோட்டல்கள்

மே மாதத்தில் சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஒரு சில உணவகங்கள் திறக்கப்பட்டாலும், உணவகத்தினுள் அமர்ந்து உண்ண அனுமதி இல்லாததால் இத்துறை கடும் நட்டத்தை சந்தித்துள்ளது.

நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், துரித உணவகங்கள், தொழிற்சாலைகளில், கல்லூரிகளில் உள்ள கேண்டீன் உணவகங்கள் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஹோட்டல் துறையில் பணியாற்றும் எண்ணற்ற ஊழியர்களின் ஊதியம் குறைவு என்பதாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்து பெரு நகரங்களில் பணியாற்றுபவர்கள் என்பதாலும் இவர்களின் சிரமங்கள் இரட்டிப்பாகின்றன.

அதேவேளையில், வருமானம் எதுவும் இல்லாமல் தனது ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க முடியாத உரிமையாளர்களின் சிரமம் வேறு விதமாக உள்ளது.

பரபரப்பான வாழ்க்கை, தினமும் உயர்தர உணவு, நல்ல ஊதியம், பகட்டான சீருடை என்றே நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றுபவர்கள் குறித்து ஒரு பொதுவான கருத்து சமூகத்தில் உள்ளது.
நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது?

ஆனால், அங்கு பணியாற்றுபவர்கள் கூறுவது வேறுவிதமாக உள்ளது. கொரோனா ஊரடங்கால் தனது வருமானத்தில் பெரும் பகுதியை இழந்துவிட்டதாக கூறிய ஜேக்கப், ஹோட்டல் பணியாளர்கள் சந்தித்துள்ள பாதிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

''சென்னையின் மைய பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் நான் பணியாற்றுகிறேன். பலர் நினைப்பது போல நாங்கள் அதிகம் சம்பாதிப்பதில்லை. பொதுவாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சமையல் துறையில் பணியாற்றும் செஃப்களுக்கு மற்றவர்களை விட சம்பளம் சற்று கூடுதலாக இருக்கும்''

''அதேவேளையில் உணவு பரிமாறுபவர்கள், அவர்களின் மேற்பார்வையாளர்கள், ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் என பல துறைகள் நட்சத்திர ஹோட்டல்களில் உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஊதியம் சற்று குறைவாகதான் இருக்கும். இவர்களின் சேவை பிடித்துப்போய் வாடிக்கையாளர்கள் தரும் டிப்ஸ் எனப்படும் அன்பளிப்பு இவர்களின் மாத குடும்ப சுமையை குறைக்க பெரிதும் உதவும்'' என்று விவரித்தார்.

''கொரோனா ஊரடங்கால் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் பலருக்கும் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனக்கு வேலை போகவில்லையென்றாலும் கடந்த 2 மாதங்களாக 40 சதவீதம் மட்டுமே ஊதியம் கிடைக்கிறது. எந்த வாடிக்கையாளரும் வராத நிலையில், எங்களுக்கு எப்படி டிப்ஸ் கிடைக்கும்? நாங்கள் எப்படி குடும்பத்தை நடத்த

 முடியும்? என்று அவர் வினவினார்.

''வேலை போகவில்லையே, நீ அதிர்ஷ்டக்காரன்தான் என்கிறார்கள்; இதற்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. நிர்வாகத்திடம் எதுவும் கேட்கமுடியாது. கேட்டால் இருக்கும் வேலையும் போக வாய்ப்புண்டு'' என்று ஜேக்கப் மேலும் கூறினார்.

''ஊருக்கே உணவு அளிக்கும் பணியில் இருக்கிறேன் என்று நான் கர்வப்பட்டதுண்டு. ஆனால், இன்று எனது குடும்பத்துக்கே சாப்பாட்டுக்கு வழியில்லாத சூழல் வந்துவிடும் போல் உள்ளது'' என்றார்.

 
''ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்க்கிறோம். ஆனால், சாப்பாட்டுக்கு வழியில்லை என்பது எவ்வளவு கொடுமை. வேலை இழந்த பல நண்பர்கள் இந்த நிலையில் தான் உள்ளார்கள்''

''பெரும்பாலான 5 நட்சத்திர ஹோட்டல் பணியாளர்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இருப்பதில்லை. அதனால் இந்த நெருக்கடியை கடக்க எங்களுக்கு எந்த உதவிக்கரமும் இல்லை. மீண்டும் ஹோட்டல்கள் திறக்கப்பட்டாலும், பழைய மாதிரி நிலைமை திரும்ப பல மாதங்கள் ஆகலாம் என்று கூறுகிறார்கள். ஒரு கனவு போல இவற்றை கடந்துவிட முடியாதா என நினைக்கிறேன்'' என்று ஜேக்கப் குறிப்பிட்டார்.

உரிமையாளர்களுக்கு என்ன பிரச்சனை?

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால், நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள் மட்டுமல்ல, தொழில்துறை கேட்டரிங் (Industrial catering) பிரிவை சேர்ந்த எண்ணற்ற பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அருகேயுள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் கேண்டீன் நடத்தி வரும் கார்த்திகேயன் மயில், தான் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

''பொதுவாக பாதிப்பு என்று பேசினால் அது பணியாளர்களுக்கு மட்டும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. பணியாளர்களுக்கு பணி இழப்பு, பண இழப்பு என பாதிப்புகள் இருக்கும் நிலையில், ஹோட்டல், கேண்டீன் போன்றவற்றை நடத்திவருபவர்களால் தங்களின் சிரமங்களை கூட வெளியில் கூற முடியாது''
Image captionகார்த்திகேயன்

''ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 25க்கு ஓரிரு நாட்கள் முன்னர் கல்லூரி மூடப்பட்ட நிலையில், நான் நடத்தி வரும் கேண்டீன் மூலம் எனக்கு எந்த வருமானமும் இல்லை. அது பரவாயில்லை. ஆனால், எனது செலவுகள் குறையவில்லை. அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை'' என்றார் கார்த்திகேயன்.

''வெளி மாநிலங்களை சேர்ந்த பலர் என்னிடம் வேலை பார்க்கிறார்கள். உடனடியாக அவர்களை ஊருக்கு போக சொல்ல முடியாது. அவர்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்வது என் பொறுப்பு. அதனை நான் தவிர்க்க முடியாது''

''அது மட்டுமல்லாமல், என்னிடம் பணியாற்றும் பெரும்பாலனவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் முழு சம்பளம் தந்துள்ளேன். மே, ஜூன் மாதங்களிலும் இவர்களின் ஊதியத்தில் நான் பெரிய பிடித்தம் செய்யவில்லை. வெளியூர், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்கள் இவர்கள் அனுப்பும் பணத்தை எதிர்பார்த்து காத்திருப்பர். அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது'' என்று அவர் மேலும் கூறினார்.

''கேண்டீன் நடத்துவது தினமும் போர் புரிவது போல தான். ஆனால் கொரோனா காலம் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு, இதுவரை சந்தித்திராத போர் சூழலை சந்திக்க வேண்டி வரலாம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை எப்போது சீராகும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ''ஒன்றும் புரியவில்லை. பரபரப்பாக கேண்டீன் நடத்தி வந்தபோது காலை 4 மணிக்கே எழுந்துவிடுவேன். இப்போது எந்த வேலையும் இல்லாத நிலையிலும் அவ்வாறே எழுகிறேன். ஆனால், ஏராளமான குழப்பங்கள் மற்றும் கவலைகள் சூழ தற்போது பொழுது விடிகிறது. எல்லா துயரங்களும் ஒருநாள் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

ஏன் இந்த கடும் பாதிப்பு?

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் தொடர்பான பணியிடங்களில் பாதிப்பு கடுமையாக இருப்பதன் காரணம் குறித்து நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றியவரும், தற்போது உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு முக்கிய சமையல் சாதனங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டுவருபவருமான ஆர். ஸ்ரீநிவாசன் பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''கொரோனா பாதிப்பால் உலகெங்கும் ஹோட்டல் துறையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும் பல மாதங்கள் இந்த தாக்கம் இருக்கலாம்'' என்று கூறினார்.

''கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கால் முதலில் பாதிக்கப்பட்டது ஹோட்டல் தொழில் தான், இந்த பிரச்னை சரியான பிறகு, கடைசியாக மீள்வதும் இந்த துறையினராகதான் இருக்கும். காரணம் மக்களுக்கு முழுமையான நம்பிக்கை வர வேண்டும்''

''இதற்கு முன்பு உணவகங்களில் சாப்பிட்டால் குறிப்பிட்ட ஒரு உணவு குறித்து, அது தங்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு உண்டாக்குமோ என அஞ்சுவர். இனி உணவகங்களுக்கு செல்வதே பாதுகாப்பா என்ற எண்ணம் ஏற்பட கொரோனா காரணமாகிவிட்டது. மக்களின் பாதுகாப்பு ரீதியிலான அச்சங்களை போக்குவது குறிப்பிட்ட உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் கடமை; இதற்கு அரசின் உதவியும், வழிகாட்டுதலும் அவசியம்'' என்று ஸ்ரீநிவாசன் மேலும் கூறினார்.

''இந்த கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றுபவர்கள்தான். ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, சிறு மற்றும் நடுத்தர உணவகங்கள் தங்களால் முடிந்தவரை செயல்பாட்டினை தொடங்கினர். அவர்களால் பழைய மாதிரி வணிகம் செய்ய முடியாவிட்டாலும் பார்சல் ஆர்டர்களில் கவனம் செலுத்துகின்றனர்''

''ஆனால் நட்சத்திர ஹோட்டல்களின் முக்கிய வருமானம் அங்கு தங்குபவர்கள் செலுத்தும் அறை வாடகை தான். கடந்த 3 மாதங்களாக எந்த நட்சத்திர ஹோட்டலிலும், கொரோனா பரிசோதனை, சிகிச்சை அல்லது இது தொடர்பாக தங்கியிருக்கும் மருத்துவ பணியாளர்களை தவிர வேறு எந்த வாடிக்கையாளரும் இல்லை. இதனால் சென்னை என்றில்லை, பல பெரு நகரங்களிலும் நட்சத்திர ஹோட்டல் பணியாளர்களுக்கு பெருமளவில் பணி இழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்று ஸ்ரீநிவாசன் நினைவுகூர்ந்தார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

''நட்சத்திர ஹோட்டல்களில் முக்கிய அம்சங்களாக கருதப்படுபவை பார் மற்றும் காஃபி ஷாப்கள் தான். இவை எப்போது இயங்கும்? அதுவரை இவற்றில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை''

இந்த நிலைக்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு பதிலளித்த அவர், ''கொரோனா ஊரடங்குக்கு பிறகு, பணி இழப்பு மற்றும் பொருளாதார இழப்பை சந்தித்த சினிமா, போக்குவரத்து, ஊடகத்தினர் என பல துறைகளிலும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அந்த துறைசார் சங்கங்கள் தங்களால் முடிந்த உதவி அல்லது குறைந்தபட்சம் நம்பிக்கையாவது அளித்துள்ளன'' என்றார் அவர்.

''ஹோட்டல் துறையில் பணியாளர்களின் நலனை காக்க எந்த அமைப்பும் இல்லை. இந்த துறையில் உள்ள சங்கங்கள், அமைப்புகள் உரிமையாளர்கள் சார்ந்தது தான். அவை எப்படி தொழிலாளர்களின் சிரமத்தை கவனிக்கும?. மேலும் அதிக அளவு ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றும் இந்த துறையில், இவர் போனால், நாளை வேறு ஒருவரை பணியில் அமர்த்தி விடலாம் என்ற எண்ணம் உள்ளது. இந்நிலை மாறவேண்டும்'' என்று ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.

இந்தியாவில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் சம்பந்தப்பட்ட பணிகளில் கிட்டத்தட்ட 4.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கொரோனா பாதிப்பால் இந்த துறையில் கிட்டத்தட்ட 3 கோடி பேருக்கு பணி இழப்பு ஏற்படாலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த துறை மீள்வதற்கு அரசின் உதவி தேவை என்பது இத்துறையில் பணியாற்றுபவர்களின் கோரிக்கையாக உள்ளது.

அரசின் உதவிகள் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மட்டுமே கிடைக்காமல், இதில் பணியாற்றும் எண்ணற்ற தொழிலாளர்களின் சிரமங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடும் நதி நீர்…என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர்… கமல்ஹாசன் கவிதை