Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பெரும் வெற்றி: ‘அதிமுக ஆட்சி நீடிப்பது நரேந்திர மோதி கையில்தான் இருக்கிறது’ - ஏ.எஸ். பன்னீர்செல்வன்

Webdunia
சனி, 25 மே 2019 (12:11 IST)
இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியிருக்கும் நிலையில் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுவது என்ன என்பது குறித்து தி ஹிந்து நாளிதழின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ். பன்னீர்செல்வனிடம் உரையாடினார் முரளிதரன் காசிவிஸ்வநாதன். பேட்டியிலிருந்து:



கே. 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. பாரதீய ஜனதாக் கட்சி கூடுதல் இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதா?

ப. எல்லோருமே என்ன சொன்னார்கள் என்றால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆனால், கடந்த ஆண்டில் பெற்ற இடங்களைவிட குறைவான இடங்களைப் பிடித்தே ஆட்சிக்கு வரும் என்று பொதுவான கருத்து இருந்தது. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானபோது, இந்த எண்ணம் உடைந்து போனது. ஆனால், அந்தக் கருத்துக் கணிப்பில் சிக்கல் இருக்கலாம், அந்த கணிப்பு பொய்யாகும் என சொல்லப்பட்டது.

ஆனால், நடந்தது என்னவென்றால், 1985ல் ராஜீவ் காந்தி பெற்ற வெற்றிக்கு அடுத்த மிகப் பெரிய வெற்றியை மோதி தலைமையிலான பா.ஜ.க. பெற்றிருக்கிறது. ஆனால், இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்பதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.

முதல் முறையாக ஜாதியைவிட மதம் முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது. ஜாதி என்ற பிரிவினைக்குள் வெறுப்பு என்ற விஷயம் இல்லை. தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் அது இருக்கும். தலித்துகளாக இருந்தாலும் ஓபிசிக்களாக இருந்தாலும் தங்களுக்கு கூடுதலான அதிகாரம் வேண்டும், சலுகைகள் வேண்டும், வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்ற விஷயங்களைத்தான் அது வலியுறுத்தும்.

ஆனால், இந்தச் ஜாதிப் பிரிவினையை மிக மோசம் என்று சொல்லிவிட்டு அதைவிட மோசமான மதவாதத்தை முன்வைப்பது எந்தவிதத்தில் மேம்பட்டது எனப் புரியவில்லை.

இதன் நீண்ட கால விளைவுகளை இனிமேல்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பா.ஜ.க. என்பது 1980களில் இருந்து மோதி - அமித் ஷா இணையவர் வரும்வரை ஒரு குழு தலைமையேற்கும், முடிவுகளை எடுக்கும் கட்சியாகத்தான் இருந்தது. அத்வானியும் வாஜ்பாயியும்கூட, இருவேறு கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். கருத்து மோதலுக்கான இடம் தலைமையில் இருந்தது.

2014க்குப் பிறகு தலைமையில் பெரிய அளவு அதிகாரம் குவிக்கப்பட்ட ஒரு அமைப்பாக பா.ஜ.க. மாறுகிறது. இந்த பா.ஜ.கவுக்கும் ஆரம்பகால பா.ஜ.கவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இது புதிய பா.ஜ.க. இந்த புதிய பா.ஜ.கவில் எல்லா அதிகாரங்களும் தலைமையிடம் குவிக்கப்பட்டுள்ளன.

இது என்ன செய்யுமெனத் தெரியவில்லை. இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் அதிகாரம் கீழ்மட்டம் வரை பகிரப்பட்ட கட்சிகள்தான் நல்லது என்பது பொதுவான புரிதல். அந்த புரிதலுக்கு எதிரான நிலையைத்தான் இந்த வெற்றி காட்டுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸிற்குக் கிடைத்த தோல்வியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து சில மாதங்களிலேயே இவ்வளவு பெரிய பின்னடைவை ஆளும்கட்சி சந்தித்த நிகழ்வை நாம் இதுவரை பார்த்ததில்லை. ராஜஸ்தானில் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால், 25 இடங்களையும் பா.ஜ.கவிடம் இழந்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, அக்கட்சியின் அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டு, பிரியங்கா காந்தியோடு சேர்ந்து பொது செயலாளராக்கப்பட்டார். காங்கிரசின் தலைமுறை மாற்றத்திற்கான அடையாளமாக அது பார்க்கப்பட்டது.


ஆனால், அப்படி யார் அடையாளம் காட்டப்பட்டார்களோ, அவர்களே தோற்றுப் போகிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?


ஆனால், ஒரு விஷயத்தில் பா.ஜ.க. சொல்வதை ஏற்க முடியாது. இந்தத் தேர்தலின் மூலம் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அது தவறு. ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெற்றிருக்கிறார். நவீன் பட்நாயக் வெற்றிபெற்றுள்ளார். காங்கிரசிலும் பல வாரிசுகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். பா.ஜ.கவிலும் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆகவே வாரிசு அரசியலுக்கு எதிரான வெற்றி என்பதை ஏற்க முடியவில்லை.

இது தவிர்த்த பா.ஜ.கவின் வெற்றிக்கான மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள கால அவசாகம் தேவைப்படும்.

கே. தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தேசிய அளவில் உள்ள பா.ஜ.க. ஆதரவு மனப்போக்கிற்கு எதிராக இந்த வெற்றியை அந்தக் கூட்டணி அடைந்திருக்கிறது...

ப. 1977லில் இருந்தே தமிழ்நாட்டின் வாக்களிக்கும் தன்மை என்பது தேசிய போக்கிற்கு எதிராக பல தருணங்களில் இருந்திருக்கிறது. 1977ல் நெருக்கடி நிலைக்குப் பிறகு நாடு முழுவதும் இந்திரா காந்தி தோற்றபோது, தமிழகத்தில் காங்கிரசிற்கு பெரும் வெற்றி கிடைத்தது. 1989ல் ஃபோபர்ஸ் விவகாரத்தில் ராஜீவுக்கு எதிரான அலை உருவாகி, காங்கிரசை பல மாநிலங்கள் புறக்கணித்தன. ஆனால், தமிழ்நாட்டில் தேசிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகளும் அதில் இருந்த தி.மு.கவும் வெற்றிபெறவில்லை.

2014ல் நாடே மோதிக்கு ஆதரவாக வாக்களித்தபோது மக்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களித்தார். 37 இடங்களை அக்கட்சி பிடித்தது. அதனால், இதில் ஏதும் புதிதாக இருப்பதாகத் தெரியவில்லை.

கே. தற்போது தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களை எதிர்க்கட்சியான தி.மு.க. பிடித்திருப்பதால் எந்தப் பலனும் இருக்காது என்று சொல்லப்படுகிறது..

ப. பலன் என்பது ஆட்சியில் இருந்தால்தான் கிடைக்கும் என சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. மத்திய அமைச்சர் பதவியைக் கொடுக்க வேண்டும் என நினைத்தால், பா.ஜ.க. அவர்கள் கட்சியில் தமிழ் பேசும் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக மந்திரி பதவியை அளித்துவிட முடியும்.



உதாரணமாக 1989ல் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறாத தி.மு.கவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம்தந்தார் வி.பி. சிங். அது மாநிலங்களவை மூலமாகத்தான் தரப்பட்டது.


தமிழ்நாட்டிற்குத் தர வேண்டுமென்ற மனமிருந்தால் அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கும். கூட்டுறவு கூட்டாட்சி என்று கருதி, இதில் எல்லா மாநிலங்களுக்கும் தார்மீக உரிமை என்று பார்த்தால் இதன் அர்த்தம் வேறு. பதிலாக, அமைச்சர் பதவி என்பது தாங்கள் கொடுக்கும் கொடை என்று பார்த்தால் அதன் அர்த்தம் வேறு.

அரசியலில் ஒரு சாரர், இந்த உரிமைகளைக் கொடையாகப் பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இது இழப்பாகத்தான் தெரியும். ஆனால், தார்மீக உரிமையாகப் பார்ப்பவர்கள் இதனை எப்படி சரிசெய்ய முடியும் எனப் பார்ப்பார்கள். நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

கே. இதே கேள்வியை வேறு மாதிரி கேட்டால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று கூட்டணி அரசு அமைந்திருந்தால் அந்த அமைச்சரவையில் தி.மு.க. இடம் பெற்றிருக்கும். இப்போது அப்படி நடக்காததால் இத்தனை தி.மு.க. உறுப்பினர்களைத் தேர்வுசெய்தும் பலனில்லை என்பதுதான் ஒரு சாரரின் வாதம்.

ப. 2014ல் இருந்தே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேபினட்டில் இல்லை. 1996ல் இருந்து 2016 வரை தொடர்ச்சியாக தமிழகத்திற்கு கேபினட்டில் இடம் இருந்தது. 1996ல் கிட்டத்தட்ட 9 பொருளாதாரம் சார்ந்த அமைச்சரவைகள் தமிழர்கள் கையில் வந்தது.

ப. சிதம்பரம் நிதியமைச்சராகவும் முரசொலி மாறன் வர்த்தகத்துறை அமைச்சராகவும் வெங்கட்ராமன் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் ஆனார்கள். ஜெயந்தி நடராஜன் உள்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சரானார். அருணாச்சலம் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் டி.ஆர். பாலு பெட்ரோலியத் துறை அமைச்சரானார்.

அப்போது துவங்கி, 2014ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சி முடியும்வரை ஓங்கியே இருந்தது. அதனால் கிடைத்த பலன்கள் தமிழகத்திற்கு நிச்சயம் உண்டு.

எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தாலும் தங்கள் மாநிலத்திற்கு ஏதோ ஒருவகையில் சலுகை செய்கிறார்கள். எல்லா அமைச்சர்களுமே இதைச் செய்கிறார்கள். இதை வெறும் மாநிலப் பாசமாக மட்டும் பார்க்க முடியாது.

தங்களுடைய வாக்காளர்களுக்கு ஏதோ செய்ய வேண்டுமென நினைக்கிறார்கள். அதைச் செய்கிறார்கள். 2014க்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேபினட்டில் இடம்பெறாததால், இரண்டு இழப்புகள். ஒன்று எந்த கேபினட் கமிட்டியிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை.



பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி, பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டி ஆகியவற்றில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாததால், முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதுகூட தமிழகத்திற்குத் தெரிவதில்லை. உதாரணமாக, நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வரப்போவதாக நிர்மலா சீத்தாராமன் சொல்கிறார்.

ஆனால், அவர் தில்லிக்குச் செல்லும்போது, அப்படி கிடைக்காது என்பது தெரிகிறது. ஆக, இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்பதே தெரியவில்லை. 2014வரை, சில முடிவுகள் நமக்கு சாதகமாக கிடைக்கவில்லை என்றாலும் அது ஏன் அப்படி நடக்கவில்லை என்பதை நாம் அறிந்திருந்தோம். ஆகவே, இந்த கேபினட் கமிட்டிகளில் இல்லாமல் போவது மிகப் பெரிய இழப்புதான்.

2014க்குப் பிறகு பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சரானாலும் அவர் கேபினட் அமைச்சராகவில்லை. இணை அமைச்சராகத்தான் இருந்தார். அவர் எந்த முக்கியமான கேபினட் கமிட்டியிலும் உறுப்பினராக இருந்திருக்க முடியாது. சில கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருக்கலாம்.

இப்போது கிடைத்துள்ள தேர்தல் முடிவுகளின்படி, தமிழகத்திலிருந்து பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.கவின் உறுப்பினரான தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவியைக் கொடுக்கலாம். ஆனால், முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராகிறவர்கள் பொதுவாக சிறப்பாக செயல்படுவதில்லை.


கே. தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலில் பெருமளவு இடங்களைப் பெற்றாலும் தற்போதைய தமிழக அரசை பெரும்பான்மை இழக்கச் செய்யும்வகையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை, மோடி எதிர்ப்பு வாக்குகளாக எடுத்துக்கொள்ளலாமா?

ப. தற்போதைய தமிழக ஆட்சி நீடிப்பதும் செல்வதும் பிரதமர் மோதி கையில்தான் இருக்கிறது. தற்போது காலியான 22 இடங்களில் 13 இடங்களை வென்றிருக்கிறார்கள். ஆக, 13 அ.தி.மு.க. இடங்களை தி.மு.க. பிடித்திருக்கிறது என்றுதான் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க. தன்வசமிருந்த இடங்களை இழந்திருக்கிறது.



இது தவிர, 11 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் முடிவை வைத்துதான் இந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மையை முடிவுசெய்ய முடியும். விடுமுறைக் காலம் முடிந்த பிறகு நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம். அதைவைத்துத்தான் இந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மை தீர்மானிக்கப்படும்.

தவிர, நமக்குத் தெரியாமல் அதிருப்தியில் பலர் இருக்கலாம், தோப்பு வெங்கடாச்சலம் போல. ஆனால், அது வெளியில் வராமல் இருப்பது மத்திய அரசின் கையில் இருக்கும். வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு இடம் இருக்கிறதா என பார்க்க வேண்டும். இடம் கிடைக்கவில்லையென முடிவுசெய்தால், மாநிலத்திலும் அ.தி.மு.கவைக் கைவிட்டுவிட்டார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

கே. இந்தத் தேர்தல் முடிவுகள் வேறு எதையாவது உணர்த்துகிறதா?

ப. தமிழ்நாடு எப்போதுமே தேர்தலில் முடிவெடுக்கும்போது ஒரே மாதிரி சிந்தித்து முடிவெடுக்கிறது என்பது மீண்டும் தெளிவாகியிருக்கிறது. வடக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் ஒரே மாதிரி வாக்களித்திருக்கின்றன. 2016 தேர்தல் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அப்போதுதான் கொங்கு மண்டலம் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு மாறாக வாக்களித்தது. இப்போது மீண்டும் மாநிலம் தழுவிய போக்கிற்குத் திரும்பியிருக்கிறது தமிழகம்.

கே. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றிருக்கின்றன. தமிழக அரசியலில் வெற்றிடம் நீடிப்பதை இது காட்டுகிறதா?



ப. 1977ல் இருந்து, தி.மு.கவும் வேண்டாம்; அ.தி.மு.கவும் வேண்டாம் எனக் கருதும் ஒரு ஓட்டு வங்கி தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. 10-14 சதவீதம் வாக்காளர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

இந்த வாக்குகளை முதலில் மூப்பனார், பிறகு வைகோ, பிறகு விஜயகாந்த் ஆகியோர் பெற்றனர். இப்போது கமலும் சீமானும் பெற்றிருக்கின்றனர். இவர்களில் யாராவது ஒருத்தர் நிலையாக இருந்து இதை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறார்களா என்று பார்த்தால், அப்படி யாருமே செய்யவில்லை.

1989ல் மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் 25 இடங்களைப் பெற்றது. அப்போது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. காங்கிரசைவிட ஒரு இடத்தைத்தான் கூடுதலாகப் பிடித்தது. ஆனால், காங்கிரஸ் அதிலிருந்து மேலே ஏறவேயில்லை. அதற்கு அடுத்த தேர்தலிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து, கிடைத்தவாய்ப்பைத் தவறவிட்டார்கள்.

பிறகு, 1996ல் மிகப் பெரிய வாக்கு வங்கி மூப்பனாருக்குக் கிடைத்தது. ஆனால் விரைவிலேயே அதனை அவர் இழந்தார். 1996ல் த.மா.காவுக்கு இருந்த செல்வாக்கும் இப்போது 2019ல் ஜி.கே. வாசன் தலைமையில் உள்ள த.மா.காவுக்கு இருக்கும் செல்வாக்கும் எப்படியிருக்கிறது என்பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.

விஜயகாந்த் தொடர்ச்சியாக தனியாக செயல்பட்டிருந்தால் அவருடைய 12 சதவீத வாக்கு அதிகரித்திருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. 1993ல் தி.மு.கவில் மிகப் பெரிய பிளவுக்குக் காரணமாக இருந்த ஒருவர், தற்போது ஒரு சிறிய கூட்டணி கட்சியாக மாறியிருக்கிறார். இவர்கள் நிலையில்லாமல் இருந்ததுதான் காரணம். இது வைகோ, மூப்பனார், விஜயகாந்த் மட்டுமல்ல, நெடுமாறன், குமரி அனந்தனுக்கும் பொருந்தும்.

கே. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியும் தே.மு.தி.கவும் பெரும் இழப்பை சந்தித்திருக்கின்றன. அவர்களுடைய அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ப. தே.மு.திகவின் அரசியல் எதிர்காலம் முடிந்துவிட்டது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியை அப்படி சொல்ல முடியாது. அதற்கு ஒரு சாதி பின்னணி இருக்கிறது. தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு எம்.பிக்கள் கிடைத்திருப்பதால், அதன் எதிர் துருவமாக தன்னைக் கருதும் பா.ம.க. அவ்வளவு சீக்கிரம் காணாமல் போகாது.

பா.ம.கவின் ஆதரவு தளம் சுருங்கியிருக்கலாம். பேரம் பேசும் வலிமை குறைந்திருக்கும். ஆனால், அக்கட்சி புறக்கணிக்கத்தக்க கட்சியாகிவிடாது.

கே. இடதுசாரிகள் இந்தத் தேர்தலில் மிகக் குறைவான இடங்களையே பெற்றிருக்கிறார்கள். அவர்களது அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும்?

ப. இன்று இந்தியாவில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு உலகம் தழுவிய ஒரு பிரச்சனை. உலகம் முழுவதும் வலதுசாரி அரசியல் மேலோங்கியிருக்கிறது. ட்ரம்ப், சின்ஸோ அபே, எர்துவான், மோடி, ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சி என தொடர்ச்சியாக அது நடந்துவருகிறது.

இம்மாதிரியான சூழலில் இடதுசாரிகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் வழக்கத்திற்கு மாறானது. 2004ல் இடது முன்னணி சுமார் 66 இடங்களைப் பிடித்தது. இப்போது ஒற்றைப்படை எண்ணிக்கைக்கு வந்துவிட்டது. இதை வெறும் அந்தக் கட்சியில் உள்ள பிரச்சனையாக சுருக்கிவிட முடியாது.

தவிர, பிரபுல் புத்வாய் சுட்டிக்காட்டியதைப்போல இடதுசாரிக் கட்சிகள் ரொம்பவுமே அதிகாரம் மையத்தில் குவிக்கப்பட்ட அமைப்பாக இருக்கிறது. இதில் இடதுசாரிகளுக்கும் பா.ஜ.கவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. முதலில் மாநில கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதிலிருந்து அவர்கள் சீர்திருத்தங்களைத் துவங்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments