Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"புதின் ஒரு போர்க் குற்றவாளி" என்று முதல் முறையாக கூறிய பைடன்; சீறிய ரஷ்யா - நடந்தது என்ன?

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (11:59 IST)
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக "போர்க் குற்றவாளி" என்று குறிப்பிட்டுள்ளது இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.
 
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது பைடன் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
ரஷ்ய அதிபர் புதினை கண்டிக்க பைடன் இதுபோன்ற சொல்லாடலை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை பைடன் "அவரது இதயத்திலிருந்து பேசியதாக" கூறியது.
 
இந்த நிலையில், பைடனின் கருத்துக்கு பதிலளித்துள்ள ரஷ்யா, இது "மன்னிக்க முடியாத சொல்லாட்சி" என்று தெரிவித்துள்ளது.
 
"உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த குண்டுகளுக்கு பின்னணியில் உள்ள ஒரு நாட்டின் அதிபரின் இத்தகைய சொல்லாட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் மன்னிக்க முடியாதவை என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ்ஸிடம் அந்த நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
 
எதிர்ப்பாராத கருத்தை பைடன் தெரிவித்த தருணம்
 
அமெரிக்க நேரப்படி, புதன்கிழமையன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, பத்திரிகையாளர் ஒருவர், "இதுவரை நடந்ததை பார்த்த பின்பு, நீங்கள் புதினை ஒரு போர்க் குற்றவாளி என்று அழைப்பதற்கு தயாராக உள்ளீர்களா?" என்று கேட்டார்.
 
இந்த கேள்விக்கு முதலில் 'இல்லை' என்று பதிலளித்த பைடன், பிறகு உடனடியாக, "நான் குறிப்பிடுவேனா என்று கேட்டீர்களா? ஆம், அவர் ஒரு போர்க் குற்றவாளி என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
 
யுக்ரேனில் நடந்த தாக்குதலின் "காட்டுமிராண்டித்தனமான" படங்களைப் பார்த்த பிறகு பேசிய பைடன் இதை அதிகாரபூர்வ அறிவிப்பாக இல்லாமல், தனது இதயத்திலிருந்து பேசியதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி பின்னர் விளக்கம் அளித்தார்.
 
மேலும், போர்க்குற்றங்களை தீர்மானிப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறையில் தனியே சட்டச் செயல்முறை இருப்பதாகவும், அதற்கான பணிகளும் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் பேச்சு
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த பேச்சு வெளிவருவதற்கு முன்னதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், புதன்கிழமையன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
 
அப்போது ஸெலென்ஸ்கியின் "தைரியமான தலைமை மீது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்" என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோஸி தெரிவித்தார்.
 
இதையடுத்து பேசிய ஸெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.
 
ஸெலென்ஸ்கி தன்னுடைய உரையில், ரஷ்ய படைகளுடன் போரிட்டு வரும் யுக்ரேன், 9/11 (செப்டம்பர் 11 தாக்குதல்) போன்ற தாக்குதலை தினந்தோறும் எதிர்கொண்டு வருவதாக, தெரிவித்தார்.
 
யுக்ரேன் வான் பரப்பை 'நோ ஃப்ளை சோன்'ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பது குறித்து, அமெரிக்கா மற்றும் நேட்டோவை அவர் மீண்டும் வலியுறுத்தினார். அப்போது, "என் நாட்டு வானத்தை பாதுகாக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
 
மேலும், கடந்த காலங்களில், 1941ல் பேர்ள் ஹார்பர் தாக்குதல் மற்றும் செப்டம்பர் 11, 2001 தாக்குதலை நினைவில்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், அதேபோன்ற தாக்குதல்களை யுக்ரேனிய மக்கள் தினமும் அனுபவித்து வருவதாக தெரிவித்தார்.
 
இந்த நிலையில், யுக்ரேனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர்கள் (612 மில்லியன் பவுன்ட்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments