Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தியாவில் பறக்க தற்காலிக தடை

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தியாவில் பறக்க தற்காலிக தடை
, புதன், 13 மார்ச் 2019 (09:36 IST)
ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து இந்தியாவும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தமது வான் எல்லையில் பறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு இந்தியா இம்முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறது.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். முன்னதாக 5 மாதங்களுக்கு முன்பு இந்தோனீசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான இதே ரக விமானம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த 189 பேரும் இறந்தனர்.
 
ஐந்து மாத இடை வெளியில் ஒரே ரக விமானம் இரண்டு பெரும் விபத்துகளை சந்தித்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து தடை விதித்து வருகின்றன.
 
''இந்த விமானங்களில் முறையான மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பாக இயக்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படும் வரை இந்திய வான் எல்லையில் அவை பறக்க அனுமதிக்கப்படாது. பயணிகள் பாதுகாப்பே எப்போதும் முக்கியமானது'' என்று கூறிய இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இத்தடையை உடனடியாக அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
 
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு முகமை முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இந்த ரக விமானம் இயங்குவதற்கான அனுமதியை நிறுத்திவைப்பதாக அறிவித்தது.
 
நேற்று பிரிட்டனும் சீனாவும் இதே போன்ற தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அமெரிக்காவில் செனட்டர்களிடம் இருந்து அழுத்தம் வந்தபோதும் அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையமான எஃப் ஏ ஏ இந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
 
இதுவரை முறையாக எந்த செயல்திறன் குறைபாடும் இல்லை. ஆகவே போயிங் 737 மேக்ஸ்-8 விமானம் பறப்பதற்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
இந்தியாவைப் பொருத்தவரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மட்டுமே சுமார் 13 போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து இவ்விமானங்களின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிர்மலாதேவி: ஏன் தெரியுமா?