Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏர் இந்தியா - ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தால் மீண்டெழுமா?

Flight
, புதன், 15 பிப்ரவரி 2023 (23:18 IST)
சாதனை நிகழ்வாக, ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா நிறுவனம் இறுதி செய்துள்ளது. "உலகத்தரத்திலான கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கி வருகிறோம்" என இது குறித்து டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
 
இந்த ஒப்பந்தத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திடம் இருந்து 460 விமானங்களை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் ஏர் இந்தியா நிறுவனம் நவீனமயமாகும் எனவும் வியக்கத்தக்க வகையில் நிறுவனம் விரிவுபடுத்தப்படும் எனவும் சந்திரசேகரன் தெரிவித்தார்.
 
ஏற்கனவே கடன் பிரச்னையில் சிக்கியிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமமே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் வாங்கியது. ஏர் இந்தியாவின் பல விமானங்கள் காலாவதியான நிலையில், அதன் விமானங்களை நவீனமயமாக்க ஐந்தாண்டு திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியது. அந்த வகையில், இத்திட்டத்தின் முதலாவது புதிய விமானம் இந்தாண்டின் இறுதியில் இயக்கப்படும்.
 
இந்தியாவில் அதிகரித்துவரும் விமான வணிக சந்தையில் ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய வலுவான இருப்பை மீண்டும் தக்க வைப்பதற்கான முயற்சியாக இந்த ஒப்பந்தம் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
என். சந்திரசேகரன்: தமிழர், விவசாயி, அரசுப்பள்ளி மாணவர் - இன்று பெரும் தொழில் தலைவர் - 12 தகவல்கள்
 
"இந்த ஒப்பந்தம், ஏர் இந்தியாவின் விமான தொகுப்பை லுஃப்தான்சா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் நேரடியாக ஒருங்கிணைக்கிறது. இந்த இரு விமான நிறுவனங்களும் ஸ்டார் அலையன்ஸ் எனப்படும் உலகின் மிகப்பெரிய வான் போக்குவரத்து கூட்டணியாகும்" என, விமான போக்குவரத்து ஆய்வாளர் மார்க் மார்ட்டின் தெரிவித்தார்.
 
"வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான பெரிய திட்டமாக இது எனக்குத் தெரிகிறது. ஏனெனில், இந்த விமான நிறுவனங்களுக்கு ஸ்டார் அலையன்ஸ் பரம எதிரியாக இருந்து வருகிறது" என அவர் தெரிவித்தார்.
 
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உலகின் மற்ற பகுதிகளுக்குப் பயணிக்க இந்தியர்கள் பெரும்பாலும் எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ், எட்டிஹாட் மற்றும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒப்பந்தத்தால் இந்த நிலைமை மாறும் என மார்ட்டின் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
 
A350s போன்ற பரந்த விமானங்களை கையகப்படுத்துவது, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே இடைவிடாமல் பயணிக்கும் விமானங்கள் மூலம் நேரடியாக அந்நாட்டு சந்தைகளில் ஊடுருவ ஏர் இந்தியாவை அனுமதிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் அதிகளவிலான இந்திய புலம்பெயர்ந்தோருக்கு விமான சேவையை அளிப்பதற்கான லாபகரமான வழித்தடங்களாக இந்த நாடுகள் உள்ளன.
 
ஆனால், வளைகுடா நிறுவனங்களின் மீது இருக்கும் "விசுவாசம்" மற்றும் வாடிக்கையாளர்களுக்காக விலையை குறைப்பதை தொடங்கி வைக்கும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், விமான போக்குவரத்தில் அந்நிறுவனங்களின் ஏகபோக செல்வாக்கை சவால் செய்வது எளிதானது அல்ல என, இந்தியாவை மையமாகக் கொண்ட விமானப் போக்குவரத்து இணையதளமான லிவ் ஃப்ரம் எ லௌஞ்ச்-இன் (LiveFromALounge) நிறுவனர் அஜய் அவ்தானி கூறுகிறார்.
 
 
மோசமான, பராமரிக்கப்படாத கேபின்கள், செயல்படாத பொழுதுபோக்கு அமைப்புகள் மற்றும் உடைந்த சார்ஜிங் பாயிண்ட்கள் ஆகிய வாடிக்கையாளர்கள் எழுப்பும் குறைகளால், ஏர் இந்தியா நிறுவனம் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
புதிய விமானங்கள் கொண்டு வரப்படும்போது வாடிக்கையாளர்கள் "மேம்பட்ட அனுபவத்தைப் பெறுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டாலும், அப்போதும் மனித வளங்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கான பற்றாக்குறை நீடிக்கும் என அவ்தானி கூறுகிறார்.
 
 
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தால் நிறுவப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகும், 1950களில் இந்திய அரசால் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பும், இந்நிறுவனம் உலகளாவிய விமான போக்குவரத்து சேவைக்கான நிலையான நிறுவனமாக கருதப்பட்டது.
 
ஆனால், அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் அரசாங்கங்களின் தவறான நிர்வாகத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கடன் சுமை ஏற்பட்டது. மேலும், அதன் புகழை மீட்டெடுக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்தன. பின்னர், 2021ஆம் ஆண்டில் 2.4 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏர் இந்தியாவை டாடா குழுமமே வாங்கியது. 68 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்திடமே சென்றது.
 
"ஏர் இந்தியா முதலீடுகளில் இருந்து விலகுவதாக எழும் விமர்சனங்களை இந்த ஒப்பந்தம் அமைதியாக்கும். இந்திய அரசாங்கத்தின் கீழ், ஏர் இந்தியா நிறுவனம் மேம்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் ஆராயப்படவில்லை," என, ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் ஜித்தேந்திர பார்கவா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் அதன் திறனை உண்மையாக உணர்ந்து, A350s போன்ற ஐந்தாம் தலைமுறை விமானங்களை திறம்பட இயக்க, மென்பொருள் அமைப்புகள், பராமரிப்பு மற்றும் மனித வள திறன்கள் உள்ளிட்ட அதன் செயல்பாடுகளை விரைவாக நவீனமயமாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
"இந்த முயற்சியில் ஏர் இந்தியா நிறுவனம் வெற்றி பெற்றால், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இந்தியாவின் தனித்துவத்தை உலகுக்கு எடுத்துச் செல்வார்கள்," என மார்ட்டின் கூறுகிறார்.
 
உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த ஏர் இந்தியா நிறுவனம், "இந்திய பயணிகளுக்கு அப்பால் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும். மேலும் இணைப்பு விமான போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்" என்று அவ்தானி கூறினார். இதற்காக உள்கட்டமைப்பு மற்றும் அதன் வழித்தட வலைப்பின்னலை அந்நிறுவனம் மேம்படுத்த வேண்டும்.
 
குளிர்காலத்தில் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் இடங்களில் ( immigration) நீண்ட வரிசைகள் மற்றும் நீண்ட காத்திருப்பு ஆகியவை பயணிகள் போக்குவரத்தில் ஒரு பெரிய எழுச்சியைக் கையாள இந்தியா இன்னும் போதுமான திறனைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
 
ஆனால், உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்தது 80 புதிய விமான நிலையங்கள் வரவுள்ளன.
 
இந்திய விமான போக்குவரத்து சந்தையானது கொரோனா தொற்றுநோய்க்குப் பின்பு ஒரு மீட்சியைக் கண்டுள்ளது, அரசாங்க புள்ளிவிவரங்களின்படி உள்நாட்டு போக்குவரத்து 48.9 சதவீதம் அதிகரித்துள்ளது. டிசம்பர் 2022இல் 122 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தனர் என, சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 
ஆசிய பசிபிக் ஏவியேஷன் இந்தியா மையம் (CAPA India) மதிப்பீட்டின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1,500-1,700 விமானங்களுக்கான ஆர்டர்களை உள்நாட்டு விமான நிறுவனங்கள் பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், உலகளாவிய விமானப் போக்குவரத்து வளர்ச்சியில் இந்தியா முக்கிய உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்காட்லாந்து முதல் மந்திரி நிகோலஸ் ஸ்டர்ஜன் ராஜினாமா