Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

Prasanth Karthick
ஞாயிறு, 7 ஜூலை 2024 (18:33 IST)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அதிகாரப்பூர்வப் பயணாமாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ செல்கிறார். அவர் ஜூலை 8-9 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் இருப்பார். பிப்ரவரி 2022-இல் ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தத் துவங்கிய பின்னர் மோதி ரஷ்யா செல்வது இதுவே முதல்முறை.



மேலும், தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணமாகவும் இது அமையும். எனவே இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா, யுக்ரேன் தாக்குதல் தொடர்பாகத் தனது பழைய நட்பு நாடான ரஷ்யாவை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. இருப்பினும், பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஷ்யாவிடம் கோரி வருகிறது.

ரஷ்யா - சீனா இடையே நெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதும், மேற்கத்திய நாடுகளுடன் உறவுகளைச் சமநிலைப்படுத்த முயற்சிப்பதும் தான் இந்தப் பயணத்தின் நோக்கம் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

'ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் மேற்கத்திய முயற்சிகளை' இந்தியா நிராகரித்ததை இந்தப் பயணம் பிரதிபலிக்கிறது என்று ரஷ்ய செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகின.

ரஷ்யப் பயணத்தின் முக்கியத்துவம்

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோதி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு (bilateral) பயணம் இதுவாகும். கடந்த மாதம், ஜி7 மாநாட்டின் 'அவுட்ரீச்’ அமர்வில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்தார்.

மோதி தனது முந்தைய தேர்தல் வெற்றிகளின் போது, முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு ஒரு அண்டை நாட்டைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இம்முறை ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்வது தற்போதைய புவிசார் அரசியல் சூழலைப் பிரதிபலிக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்புச் சந்திப்பிற்காக மோதி மாஸ்கோ செல்ல உள்ளார். 2021-ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான சந்திப்பும், உச்சி மாநாடும் நடைபெறவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செப்டம்பர் 2022-இல் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டின் போது, ​​'உலகில் ராஜதந்திரம் மற்றும் உரையாடல்' ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மோதி, 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று புதினிடம் கூறினார்.

மேலும், இந்தியா-ரஷ்யா உறவை 'உடைக்க முடியாத நட்பு' என்றும் மோதி விவரித்தார்.



யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யா உடனான தனது உறவு தொடர்பான மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியவில்லை. உள்நாட்டு நலன்களைக் காரணம் காட்டி ரஷ்யாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய் வாங்குகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற கிழக்குப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோதி ரஷ்யா சென்றிருந்தார்.

மோதியின் பயணத்திட்டம் என்ன?

ஜூலை 2 அன்று, ரஷ்யா, "இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள், திட்டங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன," என்று கூறியது. அதே சமயம், ஜூன் 28 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் "அடுத்த இருதரப்பு உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன," என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் "இந்தப் பயணம் மிக முக்கியமானது" என்று விவரித்தார், மேலும் இரு தலைவர்களும், உலகளாவிய பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிப்பார்கள் என்று கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை முக்கியத் தலைப்புகளாக இருக்கும் என்று இந்திய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்தி அறிக்கைகளின்படி, பல ஆண்டுகளாக, பாதுகாப்பு உபகரணங்களுக்காக இந்தியா ரஷ்யாவை பெரிதும் சார்ந்துள்ளது, மேலும் ரஷ்யா சீனாவின் பக்கம் சாய்வதை இந்தியா விரும்பவில்லை.

யுக்ரேன் போர், வர்த்தகம், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல், முன்மொழியப்பட்ட சென்னை-விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடத்தில் முதலீடுகள், மற்றும் ஒரு முக்கிய ராணுவத் தளவாட ஒப்பந்தம் போன்ற விவகாரங்கள் பற்றி இந்தப் பயணத்தில் விவாதிக்கப்படலாம் என்று 'தி இந்து' கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்ரேன் போரில் ரஷ்யா சார்பில் இந்தியர்கள் பங்களிப்பது குறித்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயமும் பேச்சுவார்த்தையில் இடம்பெற வாய்ப்புள்ளது.

ரஷ்ய ராணுவத்தில் இதுபோன்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. "அத்தகைய நடவடிக்கைகள் எங்கள் கூட்டாண்மையுடன் ஒத்துப்போகாது," என்று இந்தியா கூறியிருக்கிறது.

இந்திய ஊடகங்கள் சொல்வது என்ன?

சீனாவை நோக்கிய ரஷ்யாவின் நாட்டத்தைச் சமநிலைப்படுத்தவே மோதியின் ரஷ்யப் பயணம் திட்டமிடப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

ரஷ்யாவிற்கான முன்னாள் இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா, 'தி இந்து’ நாளிதழிடம், “கோவிட் காலகட்டம் மற்றும் வேகமாக மாறிவரும் சர்வதேச சூழ்நிலை காரணமாக ரஷ்யா-இந்தியா இடையே நடைபெறும் வழக்கமான சந்திப்புகள் நடைபெறாத நிலையில், இருதரப்பு உறவுகளில் ஒரு சறுக்கல் இருப்பதாகச் சர்வதேச அரங்கில் ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. இந்தக் கருத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இரு நாடுகளும் உள்ளன,” என்றார்.

ஜூலை 3 அன்று 'ஃபர்ஸ்ட்போஸ்ட்' இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், "ஒரு புறம் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்றன. மறுபுறம் ரஷ்யா சீனாவைச் சார்ந்திருப்பதும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் மோதியின் ரஷ்யப் பயணம் முக்கியமானது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 30 அன்று 'நவ்பாரத் டைம்ஸ்' என்ற ஹிந்தி நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், மேற்கத்திய நாடுகள் தனது ரஷ்யச் சுற்றுப்பயணத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதை மோதி அறிந்திருப்பதாகவும், எனவே அவர் 'தனது ரஷ்யப் பயணத்தின் கால அளவை ஒரு நாளாக குறைத்துவிட்டதாகவும்' கூறப்பட்டுள்ளது.

மேலும், "இந்தப் பயணம் வெளி உலகிற்குச் சொல்லும் செய்தி என்னவெனில், இந்தியா இன்னும் நடுநிலையான பாதையைப் பின்பற்றத் தயாராக உள்ளது. யாரையும் சாராமல், யாருடைய அழுத்தத்திற்கும் உட்படாமல், எந்த ஒரு முகாமிலும் சேராமல் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருவருடனும் உடன்படாது என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய ஊடகங்கள் சொல்வது என்ன?

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற மோதி தனது முதல் இருதரப்புப் பயணத்திற்கு ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்தது இந்தியாவின் 'மூலோபாய சுயாட்சியை' (strategic autonomy) பிரதிபலிப்பதாக ரஷ்ய செய்தித்தாள்கள் தெரிவித்திருக்கின்றன.

'ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை இந்தியா நிராகரித்துவிட்டது' என்று தனியார் செய்தித்தாள் 'நெவாவிசிமயா கெஸெட்டா' கூறியுள்ளது.

இதில், அரசியல் ஆய்வாளர் அலெக்ஸி குப்ரியானோவ், ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே எந்த அரசியல் சர்ச்சையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

குப்ரியனோவ் இந்தச் சுற்றுப்பயணத்தை 'பெரிய வெற்றி' என்று விவரித்தார்.

'வெடோமோஸ்தி’ என்னும் வணிக நாளிதழ், யுக்ரேன் போர் இந்தியாவுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும், அது குறித்து விவாதம் நடத்த வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இரு தலைவர்களுக்கும் இடையே ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இந்தியாவிற்கு ரஷ்ய ஹைட்ரோகார்பன் விநியோகம் மற்றும் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளின் சீர்திருத்தங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு வணிக நாளிதழான 'கொம்மர்சன்ட்' , புதின் உடனான சந்திப்பின் மூலம், 'இந்தியாவின் மூலோபாய சுயாட்சி' மற்றும் 'மேற்கத்திய நாடுகளை சாராத உலகின் தலைவர்' என்னும் பண்புகளை மோதி பிரதிபலித்தார் என்று எழுதப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி ரஷ்ய ஊடகங்களும் ஆய்வாளர்களும் இந்தப் பயணத்தை 'அமெரிக்க ராஜதந்திரத்தின் தோல்வி' என்று விவரித்துள்ளன.

தீவிர வலதுசாரி 'டார்கிராட் டிவி சேனல்’ இந்த பயணத்தை அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவின் இறுதி அடி என்றும் அமெரிக்காவிற்குப் பதிலாக ரஷ்யாவை நோக்கி உலகளாவிய தெற்கு நாடுகள் சாய்கிறது என்றும் விவரித்தது.

பிரபல பதிவர் யூரி பொடோல்னியாகா தன் டெலிகிராம் பதிவில், "ரஷ்யாவைப் போலவே, தனது நாடும் உலகளாவிய சக்தியில் அமெரிக்காவின் ஏகபோகத்துக்கு (monopoly) எதிரானது என்பதை மோதி காட்ட விரும்புகிறார்," என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை 15 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments