Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘அதிமுக வாக்குகள் சிதறிக் கிடக்கின்றன’ - எடப்பாடி பழனிசாமி முன்பு காத்திருக்கும் சவால்கள்

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (13:37 IST)
கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நேற்று தள்ளுபடி செய்தது.
 
இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் பிறப்பித்து இருந்த உத்தரவு நீங்கியதையடுத்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தேர்தல் முடிவுகளை அறிவித்தனர்.
 
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அதிமுகவின் 8வது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானார்.
 
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்தி நீடிக்க முடியுமா என்ற கேள்வி அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 
அதிமுகவின் பொதுச் செயலாளர்கள்
1972ஆம் ஆண்டு உருவான அதிமுகவுக்கு இந்நாள் வரை 8 பேர் பொதுச் செயலாளர்களாக இருந்துள்ளனர்.
 
1974 - அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர். அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்
1978 - நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்
1980 - ப.உ. சண்முகம் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1984 - ராகவானந்தம் பொதுச் செயலாளர் ஆனார்.
1986 - எம்.ஜி.ஆர் மீண்டும் பொதுச் செயலாளர் ஆனார்
1989 - எம்.ஜி. ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு, மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஒரே அணியாக சேர்ந்த பிறகு, அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா நீடித்தார்.
2016 - சசிகலா, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆனார்.
ஜூலை 11, 2022 - அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்தது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, அக்கட்சியின் 8வது பொதுச் செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில்…
 
அதிமுக முகங்களாக அறியப்படும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், கட்சியை எந்தப் பாதையில் செலுத்த போகிறார் என்ற கேள்விக்கு பிபிசி தமிழுக்கு பதிலளித்த எச்.வி. ஹண்டே, திமுகவை எதிர்ப்பது மட்டுமே அதிமுகவின் தலைவருக்கு நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய போதும், அவரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆன போதும் அதிமுகவில் ஒர் அசாதாரண சூழல் நிலவியது.
 
அதே போன்ற சூழலில் தான் ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி தினகரன் என பலரையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
 
அவர் இப்போது அதிமுகவுக்கு தலைவராகி இருக்கிறார். ஆனால் மக்கள் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறினார்.
 
தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என கடந்த 8 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து இருக்கிறது. அதனால் ஒற்றைத் தலைமை என்ற தனது வாதத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் வெற்றி அவசியம் என்று மூத்த பத்திரிகையாளர் A.S. பன்னீர்செல்வன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
‘மக்கள் தலைவர்கள்’
 
1973ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸை எதிர்த்து முதல் முறையாக களம் கண்ட அதிமுக, சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
அந்த வெற்றியின் மூலம் மக்கள் மத்தியில் அரசியல் தலைவராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் எழுச்சி கண்டது. சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர்.இருந்தார். அது போல ஒரு வெற்றியை எடப்பாடி பழனிசாமி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற வேண்டும் என்று ஷியாம் குறிப்பிட்டார்.
 
எம்.ஜி.ஆரை போலவே, ஜெயலலிதாவும் ‘மக்கள் தலைவராக’ மாறியது ஒரு தேர்தல் வெற்றியின் மூலம்தான் எனக் குறிப்பிட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே 1989ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் குறித்து விவரித்தார்.
 
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, அதிமுக(ஜெ) அணி, அதிமுக(ஜா) அணி என பிரிந்து 1989ஆம் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் தோல்வி அடைந்திருந்தது.
 
தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில், பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு இரண்டு அணியும் சேர்ந்து 1989ஆம் ஆண்டு நடந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை சந்திக்க முடிவு செய்தது.
 
ஜெயலலிதா அணிக்கு மதுரை கிழக்கு தொகுதியும், ஜானகி அணிக்கு திருச்சி மாவட்டத்திலுள்ள மருந்தாபுரி தொகுதியும் என உடன்படிக்கை ஏற்பட்டு நடந்த அந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
 
இதன்மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவின் செல்வாக்கு 27இல் இருந்து 29 ஆக உயர்ந்தது. அதன்பிறகு ஜானகி அரசியலில் இருந்து ஓய்வு பெறவே, அந்த தேர்தல் வெற்றியின் மூலம் நம்பிக்கையை பெற்று இருந்த ஜெயலலிதா, அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த இடைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து அவரை மக்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர் என்று ஹண்டே தெரிவித்தார்.
 
எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் சவால்கள்
 
அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமி, புதிய உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கட்சியின் அமைப்பு ரீதியிலான நடவடிக்கையில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் இடையே ஒரு உத்வேகத்தையும் உணர்ச்சி பூர்வமான எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும். தலைமை என்பது வெறும் தலைப்பு அல்ல என்று ஷியாம் கூறினார்.
 
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி, டிடிவி.தினகரன் அணி என கட்சியின் வாக்குகள் பல முனைகளாக சிதறிக் கிடக்கின்றன. அதிமுக இழந்த வாக்குகளை மீண்டும் சேர்க்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது, என ஹண்டே கூறினார்.
 
“அதிமுக இப்போது ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கான கட்சியாக தெரிகிறது, அதை மாற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவராக எடப்பாடி பழனிசாமி மாற வேண்டும்” என்று பெயரைக் குறிப்பிட விரும்பாத தென்மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பிபிசி தமிழிடம் பேசினார்.
 
பல பிரிவுகளாக அதிமுக செயல்பட்டு வந்த நிலையில், இழந்த வாக்கு வங்கிகளை மீண்டும் உருவாக்கி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
 
பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் நட்புறவை எடப்பாடி பழனிசாமி வளர்க்க வேண்டும் எனக் கூறும் பத்திரிகையாளர் ஷியாம், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே அணியில் பல தேர்தல்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் நிலையில், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைக்க வேண்டும் என்றார்.
 
“அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றால் மட்டுமே, அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போன்ற ஆளுமையாக அவர் நீடிக்க முடியும். ஆனால் என்னை பொறுத்தவரை 2024 தேர்தலில் அவருக்கு வெற்றி சாத்தியமில்லை” என பத்திரிகையாளர் ஷியாம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments