Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபுல் கலாம் ஆசாத்: இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் குறித்து உங்களுக்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:44 IST)
"இந்திய மண்ணை சொந்தம் கொண்டாட இந்து மதத்தைப் போன்றே இஸ்லாத்திற்கும் உரிமை உண்டு. இந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளாக இங்குள்ள மக்களின் மதமாக இருந்து வருவதைப் போன்று இஸ்லாமும் ஆயிரம் ஆண்டுகளாக அவர்களின் மதமாக இந்தியாவில் இருந்து வருகிறது. ஒரு இந்து தான் ஓர் இந்தியன் என்றும், இந்து மதத்தைப் பின்பற்றுகிறேன் எனவும் பெருமையுடன் கூறுவது போல, ஒரு முஸ்லிமும் தான் ஒரு இந்தியன், நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறோம் என்று பெருமையுடன் கூறலாம். இதேபோல கிறிஸ்தவர்களும் தான் ஓர் கிறிஸ்தவன் என்பதை இந்த நாட்டில் பெருமையுடன் கூறலாம்".
 
இது 1940ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் மெளலானா அபுல் கலாம் ஆசாத் நிகழ்த்திய உரையின் சிறு துளி. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர் மட்டுமின்றி சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக போற்றப்படும் மெளலானா அபுல் கலாம் ஆசாத் மறைந்து இன்றோடு 64 ஆண்டுகள் ஆகின்றன.
 
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில், 1888 நவம்பர் 11ம் தேதி இந்திய குடும்பத்தில் பிறந்தவர் அபுல் கலாம். இவர் பிறந்து சில ஆண்டுகள் கழித்து இவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தது. சிறு வயதில் இருந்தே கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருந்த அபுல் கலாம், தனது 12வது வயதிலேயே சிறுவர் பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்துவிட்டார். 1912ல் 'அல் ஹிலால்' எனும் பத்திரிகையை தொடங்கிய அவர் இந்திய விடுதலை குறித்து தொடர்ந்து எழுதினார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம் இவரது பத்திரிகைக்கு தடை விதித்ததோடு அபராதம் கட்டவும் உத்தரவிட்டது. 1916ல் வங்காளத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அபுல் கலாம், ராஞ்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
 
மகாத்மா காந்தியை சந்தித்து ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு 1920ல் அபுல் கலாம் ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுதந்திர போராட்டத்தில் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதால் பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு பல நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1923ல் காங்கிரஸ் தலைவராக அபுல் கலாம் ஆசாத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 35.
 
இதன் மூலம் காங்கிரஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைமை பொறுப்பை அலங்கரித்தவர் எனும் பெருமை இவருக்கு கிடைத்தது. இந்து - முஸ்லிம் எனும் இரு பெரும் சமூக மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி சுதந்திர போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டினார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இந்து - முஸ்லிம்களை பிரித்து தனி நாடு ஒன்றை உருவாக்குவது எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என கடுமையாக எச்சரித்தார்.
 
"எனது முதல் இலக்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வெற்றிகரமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்துக்களுடன் அன்பையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன்" என முழங்கினார்
 
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்
 
அபுல் கலாம் ஆசாத்தும் நேருவும் ஏறத்தாழ ஒத்த வயதுடையவர்கள். இருவரிடையே பரஸ்பர புரிதலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையும் இருந்தது. காந்தி நேருவை நெருக்கமாக்கிக் கொண்டதை போன்று, நேரு அபுல்கலாம் ஆசாத்தை நெருக்கமான வட்டத்தில் வைத்திருந்தார்.
 
அரிஸ்டாட்டில், பிளாட்டோ பிதாகரஸ் ஆகிய மூவரின் திறமைகளையும் ஒருங்கே பெற்றவர் என மகாத்மா காந்தியால் போற்றப்பட்டவர் மெளலானா அபுல் கலாம் ஆசாத். அதனால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதல் கல்வி அமைச்சர் பொறுப்பை வழங்கினார் ஜவஹர்லால் நேரு.
 
11 ஆண்டுகளாக இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆசாத்தின் சேவைகள் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பல வகையில் அடித்தளமிட்டன. நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் 14 வயது வரை இலவசக் கல்வி கொடுக்க வேண்டும், அனைத்து கல்வி திட்டங்களும் மத சார்பற்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
உலகளவில் இன்று வரை பல பெருமைகளுக்கு வித்திட்டு வரும் நாட்டின் சிறந்த உயர் கல்வி கூடங்களான இந்திய அறிவியல் கழகத்தை (ஐ.ஐ.டி) உருவாக்கிய பெருமை அபுல் கலாம் ஆசாத்தையே சாரும். இவரது தலைமையின் கீழ் 1951-ல் காரக்பூரில் முதலாவது ஐஐடி கல்வி நிறுவனமும், 1953-ல் பல்கலைக்கழக மானியக் குழுவும் (யுஜிசி) தொடங்கப்பட்டது. பெருநகரங்களான சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் ஐஐடி உருவாக்கப்பட்டன.
 
இந்தியாவின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அபுல் கலாம் ஆசாத் பிப்ரவரி 22, 1958ல் மறைந்தார். அவரை போற்றும் விதமாக 1992ல் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது. கல்வித் துறைக்கு இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாள் (நவம்பர் 11) தேசியக் கல்வி தினமாக 2008 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மை மக்களுக்கு கல்வி கிடைக்க வழிவகை செய்ய மத்திய சிறுபான்மை அமைச்சகத்தால் 1989ல் மெளலானா ஆசாத் எஜூகேசன் பவுண்டேசன் (MAEF) எனும் அமைப்பு தொடங்கப்பட்டது.
 
இந்த அமைப்பின் மூலம் சிறுபான்மை மக்கள் தங்கள் உயர்கல்வி பயிலவும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளவும் ஊக்கத்தொகை பெறலாம். கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையினர் மற்றும் நலிந்த பிரிவினரின் நலனுக்காக கல்வித் திட்டங்களை வகுப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் நவீன கல்வியை உறுதி செய்வது என அனைத்து தரப்பு மக்களுக்கும் சமத்துவமான கல்வியை வழங்குவதற்காக உருவாக்கப்பதுதான் மெளலானா ஆசாத் எஜூகேசன் பவுண்டெசன். இந்த அமைப்பு தொடங்கப்பட்டது முதல் 31.03.2021 வரை 11,23,770 மாணவிகளுக்கு ரூ.793.27 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
 
MAEF-ன் இன்றைய நிலை என்ன?
மெளலானா ஆசாத் எஜூகேசன் பவுண்டேசன் (MAEF) அமைப்புக்கு ஆண்டுதோறும் மத்திய சிறுபான்மை அமைச்சகம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வருகிறது. 2021 - 22 நிதியாண்டில் இந்த அமைப்பிற்கு 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2022 - 23ம் நிதியாண்டில் வெறும் 0.01 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்காக மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ள வில்லை. அவரது சிந்தனையும் செயல்பாடும் பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பெரிதும் பங்காற்றி இருக்கிறது. அம்பேத்கரை போன்று எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாகவும் இருந்தது. பல்கலைக்கழக மானியக் குழுவை உருவாக்கிய தலைவர். அதன் மூலம் பின்தங்கிய மாணவர்கள் சிறந்த கல்வியை பெறவும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளவும் சம வாய்ப்பு கிடைக்க போராடியவர். அபுல் கலாம் ஆசாத் பெயரில் சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உதவித்தொகையை மத்திய அரசு அறிவித்திருக்கலாம்." என்றார்.
 
MAEF-ஐ புறக்கணிக்கிறதா மத்திய அரசு?
"மெளலானா ஆசாத் எஜூகேசன் பவுண்டேசன் அமைப்புக்கு குறைந்தளவில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதில் ஏதோ ஒரு நியாயமற்ற அணுகுமுறை இருப்பதாக சந்தேகப்பட வேண்டி இருக்கிறது. எல்லோருக்கும் சம வாய்ப்பை உருவாக்க சொல்லி அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக அதற்கென உருவாக்கப்பட்ட அமைப்புக்கு வழங்க வேண்டிய நிதியை குறைப்பதன் மூலம் எல்லோருக்கும் பரவலாக கல்வி கிடைத்து விட்டது என மத்திய அரசு சொல்ல வருகிறதா? அதற்கான ஆதாரத்தை அவர்களால் சமர்ப்பிக்க முடியுமா? இதுவும் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான முயற்சியா? அல்லது கல்வியில் சிறுபான்மையினர் வளர்ந்து விடக்கூடாது எனும் எண்ணத்தில் இதனைச் செய்கின்றனரா? என கேள்வி எழுப்பினார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. நேருவும் ஆசாத்தும் நாட்டின் முக்கியத் தலைவர்கள். அதனால் நேருவின் பாரம்பரிய பெருமைகளை (Legacy) அழிப்பதன் மூலம் மெளலானா அபுல் கலாம் ஆசாத்தின் சிந்தனைகளையும் மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது" என பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டினார்.
 
மெளலானா ஆசாத் எஜூகேசன் பவுண்டேசன் அமைப்புக்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாடு பாஜக சிறுபான்மை அணியின் மாநில துணை தலைவர் ஜான்சனை தொடர்பு கொண்டு பேசினோம். "மெளலானா அபுல் கலாம் ஆசாத்தை மத்திய அரசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. அவர் பெயரில் செயல்பட்டு வரும் அமைப்பிற்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் தேவைக்கேற்ப கூடுதல் நிதிகளும் ஒதுக்கப்படும். 0.01 ரூபாய் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியாகியிருந்தாலும் அதில் ஏதேனும் தவறுகள் இருக்கலாம். பிரதமர் நரேந்திர மோதி அரசு சிறுபான்மை மக்கள் நலனுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறது. ஹஜ் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தேவைக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments