Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

Advertiesment
கோயில்
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஜோதிடத்தில், சகுன ஜோதிடம் என்று தனி உட்பிரிவு உள்ளது. பஞ்ச பட்சி சாஸ்திரம், சகுன ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்கள் கடந்த காலங்களில் வாழ்ந்தனர். இதில் சகுன ஜோதிடத்தில் தேங்காய் வருகிறது.

சகுன ஜோதிடத்திற்கு பல உதாரணங்கள் கூறலாம். மாடு வைத்துள்ளவர்கள் தங்கள் மாட்டின் கண்ணில் நீர் வடிந்தால், அந்தக் குடும்பத்தின் தலைவருக்கு கடுமையான உடல் உபாதை அல்லது பெரும் நஷ்டம், பொருள் இழப்பு ஏற்படும். புதிய முதலீடுகளை அவர் தவிர்க்க வேண்டும்.

சகுன ஜோதிடத்தைப் பொறுத்தவரை தேங்காய் என்பது ஒரு மனிதனாகவே கருதப்படுகிறது. தெங்கு+காய்=தேங்காய். நம்மை நாமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் அர்த்தமாகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.

இந்தத் தேங்காய் உடையும் விதத்தில் சகுன ஜோதிடம் பல விடயங்களை உணர்த்துகிறது. தேங்காயின் ஓடு மட்டும் தனியாக வந்தால், சம்பந்தப்பட்டவருக்கு உடனடியாக பொருள் நஷ்டம் உண்டு என்று அர்த்தம்.

ஒருவேளை தேங்காய் அழுகியிருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு, நோய் ஏற்படும். குறிப்பாக தேங்காய் அழுகியுள்ள சதவீதத்திற்கு ஏற்ப அவரது உடலில் பாதிப்பு ஏற்படும் என சகுன ஜோதிடம் கூறுகிறது.

இதேபோல் அழுகியுள்ள பகுதியின் சதவீதத்திற்கு ஏற்ப பாதிப்பு ஏற்படும் நாள் தொலைவில் உள்ளதா? அருகில் உள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தேங்காய் அழுகினால் ஒரு சிலருக்கு உடனடி மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போது சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி உடல் நலத்திலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத நிலையில் மிகவும் பாதுகாப்பான வழியில் பயணம் செய்யலாம்.

உதாரணமாக நீண்ட தூர பயணத்திற்கு இரு, நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை விட, அரசுப் பேருந்து அல்லது ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். உறவினர்கள் மோதல், பங்காளிப் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

ஒரு சிலர் ஊரை விட்டுச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். கடந்த சில மாதங்களுக்கு முன் என்னிடம் ஜாதகம் பார்க்க ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர். பிரசன்னம் பார்த்ததில் சகுனத்தடை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முப்பாத்தம்மன் கோயிலில் தேங்காய் உடைத்து வணங்கச் சொல்லி அனுப்பினேன்.

அவர்களுக்கு கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்த போது அது அழுகியிருந்தது. இதுபற்றி அந்தக் குடும்பத் தலைவர் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார். தேங்காய் உடைத்த நேரத்தைக் கணக்கிட்டேன். அது சனி ஓரையாக இருந்தது.

பொதுவாக சனி ஓரையில் தேங்காய் அழுகியிருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர் ஊர் விட்டு ஊர் செல்ல நேரிடும் என்பதை அவருக்கு விளக்கினேன். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினேன்.

ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்ததுடன், நாங்கள் பல தலைமுறையாக எங்கள் சொந்த கிராமத்தில் வசிக்கிறோம். அங்கிருந்து வேறு ஊருக்கு இடம்பெயர்வது நடக்காத காரியம் என்று பதிலளித்தார்.

எனினும், அடுத்த 3 மாதத்திற்கு உள்ளாகவே அவர்கள் ஊர் விட்டு ஊர் சென்று விட்டனர். வேறு ஊருக்கு சென்ற பின்னர் மீண்டும் என்னைச் சந்திக்க அந்தக் குடும்பத் தலைவர் வந்திருந்தார்.

விசாரித்ததில், அவரது மகன், அரசு உயர் பதவியில் உள்ள அதிகாரியின் மகளைக் காதலித்ததாகவும், அந்த விடயம் பெண் வீட்டிற்கு தெரிந்ததால், அவரது தந்தை மேலிட ஆட்களை வைத்து காவல்துறையினரை விட்டு மிரட்டி, தங்களை ஊரை விட்டு காலி செய்ய வைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் சங்கடங்கள் ஏற்படுவதைத் தடுக்க என்ன பரிகாரம் செய்யலாம் என என்னிடம் அவர் கேட்டார். அதற்கு விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து பூஜை செய்யுங்கள் நல்லது நடக்கும் என்று கூறி அனுப்பி வைத்தேன்.

எனவே, இறைவனுக்கு உடைக்கப்படும் தேங்காய் அழுகியிருந்தால் முதலில் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. அதற்கு அடுத்தபடியாக பொருள் இழப்புகள் ஏற்படுவதை சமயோசிதமாக தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திருட்டு பயமும் உள்ளதால் விலையுயர்ந்த பொருட்களை வீட்டில் வைப்பதற்கு பதிலாக வங்கி பெட்டகத்தில் பத்திரப்படுத்துவது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil