முந்தைய இடுகையில் உட்கார்ந்த நிலையில் முன்னால் வளையும் ஆசனம் பற்றியும் தலை முதல் முழங்கால் வரையிலான நிலைகளையும் பார்த்தோம். இந்த வாரமும் உட்கார்ந்த நிலையில் செய்யும் மற்றொரு யோகாசனம் பற்றிக் கூறுகிறோம். பஷ்ச்சிமுத்தாசனம் என்பது வடமொழியின் கூட்டுச்சொல். பஷ்ச்சிம் என்றால் "மேற்கு", "பின்னால்" அல்லது "முன்னால்" ஆகிய பொருள்கள் உண்டு. உத்தனா என்றால் நீட்டுதல் அல்லது விரித்தல். அதாவது முதுகெலும்பை பலப்படுத்தும் ஒரு தன்மையை அதன் பெயரிலேயே கொண்டுள்ளது இந்த ஆசனம். செய்முறை :1.
விரிப்பின் மீது கால்களை நீட்டி கிழக்கு திசை நோக்கி அமரவும். 2.
கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து மடிக்காமல் தலைக்கு மேல் உயர்த்தவும்.3.
மெதுவாக முன்னால் குனிந்து கால்களை மடிக்காமல் கால் விரல்களை தொட முயற்சிக்கவும். கால் கட்டை விரல்களை பற்றி மேலும் குனிந்து நெற்றியை கால் முட்டிகளின் மீது வைத்து கைகளை மடித்து கை முட்டியை விரிப்பின் மீது வைக்கவும்.4.
சாதாரண மூச்சில், கண்கள் மூடியிருக்க வேண்டும். 50 எண்ணிக்கை இருக்கவும்.5.
கட்டை விரலை பிடித்து கைகளை நீட்டி மெதுவாக எழுந்து நிமிர்ந்து உட்காரவும் மறுமுறை செய்யவும் இரண்டிலிருந்து ஐந்துமுறை வரை செய்யலாம்.
6. மூன்று மாத பயிற்சிக்கு பிறகு மல்லாந்து படுத்து கைகளை தலைக்குமேல் கொண்டு வந்து அப்படியே எழுந்து கால்களை மடிக்காமல் முன்னால் குனிந்தும் செய்யலாம். இந்த முறையால் அதிகபலனை அடையலாம்.
பலன்கள் :
தசைவலி, வாத கோளாறு, பசியின்மை, நீரிழிவு, அஜீரணம், மலச்சிக்கல், மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றை போக்குகிறது.
இடுப்பு வலி, மூல வியாதி, மஞ்சள் காமாலை, புற்று நோய், சர்க்கரை வியாதி இவைகளுக்கு ஏற்ற ஆசனம்.
கால், இடுப்பு, நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி அடைகிறது. தோல் சுருக்கம், நரை (பித்த நரை) ஏற்படாமல் தடுக்கிறது.
பெண்களுக்கு சிறுநீரகம், கருப்பை வழியாக தோன்றும் நோய்களை பூரணமாக சரி செய்கிறது. பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அடி வயிற்று பெருக்கத்தை சரி செய்கிறது. நுரையீரல் பலம் பெறுகிறது. குண்டலினி சக்தியை எழுப்புகிறது.