தூக்கம் வராதவர்களுக்கு சில ஆலோசனைகள்
, செவ்வாய், 17 நவம்பர் 2009 (17:52 IST)
பலரும் படுத்ததும் தூங்கிவிடுவார்கள். சிலர் படுத்து பிரண்டு, தூக்கத்தோடு சண்டை போட்டு கடைசியாக தூங்கி முடிப்பார்கள். இன்னும் சிலருக்கு தூக்கம் என்பதே மாத்திரைகளால் மட்டும் கிடைக்கும் விஷயமாக இருக்கும். இப்படி தூக்கத்தில் எத்தனையோ விதங்கள் உள்ளன. அப்படி தூக்கம் வராதவர்களுக்காக சில ஆலோசனைகளை எமது யோசா ஆசிரியர் சுப்ரமணியம் வழங்கியுள்ளார்.அதாவது திருமணமாகாதவர்களுக்கு, தூக்கம் வரவில்லை எனில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் பிணைத்து அதனை கால் முட்டிகளுக்கு இடையே வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு காலின் பின்பகுதியை (அதாவது கொலுசு போட்டால் காலின் பின் பகுதியில் கொலுசு எங்கு நிற்குமோ அங்கு) மற்றொரு காலின் கட்டைவிரலுக்கும், இரண்டாவது விரலுக்கும் உள்ள இடைவெளியில் வைத்துக் கொண்டு அல்லது பிடித்துக் கொள்ள வேண்டும்.இப்படி ஒரு நிலையில் படுத்தால் விரைவாக தூங்கிவிடலாம். இந்த நிலையில் படுக்கும் போது உடலின் சூடு அதிகமாகிறது. எனவே உடனடியாக தூக்கம் வந்துவிடும். ஆனால் இப்படி அதிக நேரம் அல்லது பல நாள் தூங்கினால் உடல் உஷ்ணம் அதிகமாகி வியர்வை அதிகமாக சுரக்கும். மேலும், வியர்வையில் அதிக துர்நாற்றம் ஏற்படலாம். எனவே தூக்கம் வராமல் இருக்கும் போது மட்டும் இப்படி படுக்கலாம்.பொதுவாக நாம் இப்படி படுத்தால் நமது மூதாதையர், அப்படி படுக்காதே என்று திட்டுவதற்கும் உடல் உஷ்ணமாகும் என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தது.
சரி.. திருமணமான தம்பதியராக இருந்தால், கணவருக்கோ அல்லது மனைவிக்கோ உறக்கம் வராமல் தவிக்கும் போது, ஒருவரது கையை மற்றொருவர் பிணைத்துக் கொண்டால் போதும் உடனே உறங்கி விடுவார்கள். இது அல்லாமல், வயதானவர்கள் மற்றும் நீரிழிவினால் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, அவர்களது கால் பாதத்தை யாராவது மெதுவாக அழுத்தி விட்டுக் கொண்டிருந்தால் உடனே தூங்கிப் போய்விடுவார்கள். மேலும், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான உப்பு நீரில் பாதங்களை ஊறவிட்டாலும் எளிதாக தூக்கம் வரும் என்கிறார் யோகா ஆசிரியர் சுப்ரமணியம்.